Arts
8 நிமிட வாசிப்பு

மலையகத் தமிழர்களின் பிராஜாவுரிமை பறிப்பும் அரசியல் துரோகங்களும்

March 16, 2023 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய வம்சாவளி  மலையகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமையை இல்லாமல் ஆக்குவதற்கான சட்டம்  நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது அதற்கு ஆதரவாகவும் எதிராகவும்  நாடாளுமன்றத்தில் பலமான குரல்கள் ஓங்கி ஒலித்தன. ஆனால் இந்த வாதப்பிரதிவாதங்கள் எல்லாம் வெறும் முறைசார் நடவடிக்கைகளேயன்றி அதனை நிறைவேற்றவிடாமல் தடுத்து விடப்போவதில்லை என்பது அன்றைய பிரதமர்  டி. எஸ். சேனாநாயக்கவுக்கு நன்றாகவே தெரியும்.  அவர் எத்தனை பேர் இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்? எத்தனை பேர் எதிராக வாக்களிப்பார்கள்? என்பதை எல்லாம் நன்கு கணக்குப்போட்டு தெரிந்தே வைத்திருந்தார்.

நாடாளுமன்ற சம்பிரதாயப்படி எல்லாச் சடங்குகளும், கிரியைகளும் முடிவடைந்ததன் பின்னர் இந்தச்சட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதன்போது அரசாங்கத்திற்கு சார்பான 53  அங்கத்தவர்கள் இதனை ஆதரித்தும் எதிரணியில் அமர்ந்திருந்த 35 அங்கத்தவர்கள் எதிர்த்தும் வாக்களித்தனர்.  இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து சில  தமிழ்  நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களாகப் பதவி வகித்தவர்களான சி. சுந்தரலிங்கம், சி. சிற்றம்பலம், சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த எஸ்.  யூ. எதிர்மன்னசிங்கம், வி. நல்லையா,  ஏ. ஐ. தம்பையா,  தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களான கே. கனகரத்தினம் மற்றும் டி. ராமலிங்கம், முஸ்லிம் அங்கத்தவர்களான டி. பி. ஜாயா, எச். எஸ். இஸ்மாயில், எம். எஸ். காரியப்பர் , மற்றும் ஏ. என். சின்னலெப்பே ஆகியோரும்  அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.   இவர்களைத் தவிர  ஐரோப்பிய ஆங்கிலேயர்களை பிரதிநிதித்துவப்படுத்திய அங்கத்தவர்களும் அரசாங்கத்திற்குச் சார்பாக வாக்களித்தனர்.

G.G

இது இப்படி இருக்கும்போது குறிப்பாக வடமாகாணத் தமிழ் வாக்காளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்களும் அவரைத் தலைமையாகக் கொண்ட தமிழ்க் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம் உட்பட இவர்கள் மேற்படி சட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர். என்ற போதும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு சூடு தணிவதற்கு முன்னரேயே தமிழ் காங்கிரஸ் தலைவர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தில் சேர்ந்துகொண்டு கைத்தொழில் மற்றும் மீன்பிடி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டு தமிழினத் துரோகி என்ற போர்வையை இழுத்துப் போர்த்துக்கொண்டார். இதன் காரணமாக தமிழரசுக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது.  அதன் ஐந்து  நாடாளுமன்ற அங்கத்தவர்கள் ஜி. ஜி.  பொன்னம்பலத்துடன் அரசாங்கத்தில் இணைந்து கொண்டனர். தமிழ்க் காங்கிரஸின் ஏனைய இரு அங்கத்தவர்களான எஸ். ஜே. வி. செல்வநாயகம் மற்றும் சி. வன்னியசிங்கம் ஆகியோர் கட்சியிலிருந்து பதவியை ராஜினாமா செய்து சமஸ்டி கட்சி என்ற புது அரசியல் கட்சியைத் தோற்றுவித்தனர். இந்தப் புதிய திருப்புமுனை காரணமாக ஜி. ஜி. பொன்னம்பலத்துக்கும் அவரது கட்சியான தமிழ்க் காங்கிரசுக்கும் துரோகி பட்டம் சூட்டி உருவான புதிய கட்சியான சமஷ்டிக் கட்சியை தொண்டமான் தலைமையிலான இலங்கை  இந்திய காங்கிரஸ் வரவேற்றது.

எனினும் இந்தக் காலகட்டத்தில் இலங்கை இந்திய காங்கிரசின் தொழிற்சங்கப் பிரிவில் கணிசமான அளவுக்கு அதிகரித்த அங்கத்தினர் காணப்பட்டனர். இதனைத் தவிர அடுத்த மிகப்பெரிய தொழிற்சங்கமான இலங்கை சமசமாஜக் கட்சியின் தொழிற்சங்கம் இவர்களுக்குச் சார்பாக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமும் இவர்களுக்கு நண்பர்களாகவே இருந்தனர். மேற்படி இடதுசாரி தொழிற்சங்கங்களுக்கு தலைநகரான கொழும்பிலும் மற்றும் ஏனைய நகரங்களிலும் பரவலான அரசியல் செல்வாக்கும் ஆதரவும் காணப்பட்டது. அப்படியிருந்தும் தொண்டமான் தலைமையிலான தொழிற்சங்கம்  தமது ஆதரவு கட்சிகளையும் தொழிற் சங்கங்களையும் இணைத்துக்கொண்டு நாடளாவிய ரீதியில் மேற்படி காட்டுமிராண்டித்தனமான சட்டத்தை எதிர்த்து ஏன் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என்பது மாபெரும் கேள்விக்குறியாகிறது. அப்படியானால் இது அவர்கள் விட்ட திருத்த முடியாத மிகப்பெரும் வரலாற்று தவறாகிப் போய்விட்டது என்பது இப்போது புலனாகிறது. இந்த ஒரு மிகப்பெரிய வரலாற்றுத் தவறு , இன்றுவரை இம்மக்களை வெந்தணலில் தள்ளிவிட்டு வேல் பாய்ச்சிய செயலாகிப் போய்விட்டது .

இந்த மாபெரும் மன்னிக்க முடியாத மறக்க முடியாத தவறு காரணமாக ஏற்கனவே இன்னல் பட்டு துயருற்று கொண்டிருந்த மலையகமக்கள் சமூகத்தை, மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் மேலும் மேலும் பல தவறுகளை செய்து இன்றுவரை இந்த மலையகத் தலைமைகள் அவர்களது சமூக உயர்வு நோக்கிய செல்நெறியை  தடுத்து திசைதிருப்பி அதாள பாதாளம் நோக்கி கொண்டு சென்றார்கள் என்றால் அந்தக் கூற்று  மிகையாகாது. அதன்பிறகு 1977ஆம் ஆண்டு வரை இம் மக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாமல் அரசியல் அனாதைகளாக மாறிப்போயினர். ஒரு பிரஜைக்கு வழங்கப்படுகின்ற எல்லா உரிமைகளும் இவர்களுக்கு மறுக்கப்பட்டன. வாழிட உரிமை, அரசியல், சமூக, பொருளாதார உரிமைகள், கல்வி, சுகாதாரம், தொழில் இப்படி எல்லா கதவுகளும் இவர்களுக்கு அடைக்கப்பட்டு இருட்டு அறைக்குள் தள்ளிவிட்டு கதவை மூடியது போல் ஆனார்கள்.

D.S

இது இப்படி இருக்க இந்தியாவின் டெல்லியில் இருந்து இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கும் இலங்கைப் பிரதமரான டி. எஸ். சேனாநாயக்க அவர்களுக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்துக்கள் பல இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. அத்தகைய கடிதப் போக்குவரத்துக்களின் போது ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கு பிரஜா உரிமை வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை தனது நேர்மையான இராஜதந்திர உறவுகளின் மூலம் வலியுறுத்தினார். தவிர அதுதொடர்பான அழுத்தங்களை  அவர் பிரயோகிக்கவில்லை. அவரது சோசலிச சமதர்மவாத கொள்கைகள் ஒரு ஜனநாயக இறைமையுள்ள நாட்டின் மீது தனது வலிமையைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. இருந்தாலும் முழு அளவில் இல்லாமல் ஒரு இம்மியளவு பலத்தை பிரயோகித்து இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கு பிரஜாவுரிமை கிடைக்கும் வகையில் நீதி செய்திருப்பாரானால் அது மலையகத் தமிழ் மக்கள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இன்று அவரது இயலாமை காரணமாக அவரையும்கூட துரோகக் கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டியிருக்கிறது.

மறுபுறத்தில் தனது அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி பெற்று புதிதாக இணைந்து கொண்ட தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலத்தை கருவியாகப் பயன்படுத்தி டி. எஸ். சேனநாயக்க காய்நகர்த்தல்களை மேற்கொள்ளத் திட்டமிட்டார். அதன் பிரகாரம் உலக மக்களுக்கும் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கும் கண் துடைப்பு செய்வதற்காக 1949 ஆம் ஆண்டின் இந்திய -பாகிஸ்தானிய வதிவிட  (பிரஜா உரிமை) சட்டம் என்ற  ஒரு வெள்ளை யானையை கட்டி இழுத்துக் கொண்டு வந்தார். இந்தச் சட்டம் ஒன்றும் ஏற்கனவே கொண்டுவரப்பட்ட பிரஜா உரிமைப் பறிப்பு சட்டத்திற்கு குறைந்தது அல்ல. இந்தச் சட்டமும் கூட நிறைவேற்ற முடியாத கடுமையான நிபந்தனைகளை உள்ளடக்கியிருந்தது. எனினும் இந்தச் சட்டம் பணம் படைத்த இந்திய- பாகிஸ்தானிய வர்த்தகர்களுக்கு நன்மை செய்தது என்று கூறலாம். சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் சமூகத்தை கொண்ட,    நாட்டுக்கு  பெரும் அந்நிய செலாவணியை உழைத்துத் தந்த இந்திய வம்சாவளித் தமிழரை புறந்தள்ளிவிட்டு விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய ஒரு சிறு தொகையான வர்த்தகர்களுக்கு மட்டும் நன்மை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட மேற்படி சட்டம் நேர்மையற்றதும் நயவஞ்சகம் மிக்கதுமான சூழ்ச்சி என்பது வெள்ளிடை மலை போல தெட்டத் தெளிவாக தெரிந்தது.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் மீதான அத்துமீறலும் கொடுமையும் அன்றைய அரச தலைவர்களால் மட்டும் நடத்தப்பட்ட கபட நாடகம் என்று மட்டும் ஒதுக்கிவிட முடியாது. அதன் பின்னர் வந்த சகல அரசாங்கங்களும் -தற்போதைய அரசாங்கமும் கூட- சிறுபான்மையினரை மதிக்காத அதே கபடக் கொள்கைகளையே கடைப்பிடித்து அவர்களை ஒதுக்கி ஓரங்கட்டி அரசியலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று கருதுகின்றன.  அது எத்தனை அற்பத்தனமானது என்பதனை நாட்டின் இன்றைய நிலைமை நன்றாகவே சான்று பகர்கின்றது. ஒரு யுத்தத்தில் வெற்றி கொண்டு ஒரு இனத்தை அடிமையாகி விட்டோம் என்ற மமதை கொண்டிருக்கும் இந்நாட்டின் மக்களும் அவர்களது தலைவர்களும் விரைவிலேயே அது உண்மையான வெற்றி அல்ல என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

  தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

17251 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • April 2024 (21)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)
  • March 2023 (25)