Arts
14 நிமிட வாசிப்பு

கீழைக்கரையின் முதல் அரசு : பத்து உடன்பிறந்தோர் குலம்!

February 21, 2024 | Ezhuna

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.

ஒரு சமூகத்தில் உற்பத்தியும் செல்வமும் உபரியாகின்ற போது அந்த சமூகத்தில் அதிக செல்வத்தை வைத்திருக்கின்ற தனிநபர்கள் செல்வாக்குப் பெற்று ஆதிக்க வர்க்கமாக உருவெடுக்கிறார்கள். அப்படி ஆதிகாலத்தில் தோன்றிய முதல் செல்வாக்கான நபர்களிலிருந்தே நிலக்கிழார்களும் பின் அரசர்களும் தோன்றினார்கள் என்பதை போன அத்தியாயத்தில் பார்த்தோம். அப்படி இலங்கையின் வடபாதியில் தோன்றிய தொல்லரசு அனுராதபுரியைத் தலைநகராகக் கொண்டிருந்தது என்பதையும் அந்த முதல் அரசை உருவாக்கிய மூதாதையராக விசயன் என்ற இலாட நாட்டினன், சிங்களன் என்ற தென்னகத்தவன், தென்னாட்டு வணிகர் என்று பலவிதமானவர்கள் நினைவுகூறப்பட்டார்கள் என்பதையும் கூடவே கண்டோம். 

இந்தப் பின்னணியில் இலங்கை எங்ஙணும் வாழ்ந்த நாகரின் “வேள்” குறுநில அரசுகள் கீழைக்கரையில் மாத்திரமன்றி, இலங்கையின் மாப்பார்க்கால நாகரிகம் நிலவிய சகல இடங்களிலுமே நாகரின் ‘வேள்புல அரசுகள் இருந்தன என்பதையும் பேரா.சி. பத்மநாதன் நிறுவ முயல்கிறார் (பத்மநாதன் 2016:443-480). அவர் கூறுவது உண்மை எனின், அருவியாற்றின் கரையில் அமைந்திருந்த வேள்புல நாக அரசொன்றே பின்னாளில் வளர்ச்சியடைந்து  அனுரை நகராக பரிணமித்தது எனக் கொள்ளலாம். புத்தநெறி இலங்கைக்கு அறிமுகமான போது, அங்கு ஆண்டு வந்ததாக மகாவம்சம் சொல்லும் “தேவானாம்பிரிய திசையன்” என்ற மன்னன் உண்மையான வரலாற்றுப் பாத்திரமே என்பதைக் கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டும் உறுதி செய்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. 

இனி, வடபாதியில் அனுரை அரசு உருவாகி வளர்ச்சி கண்டுகொண்டிருந்த அதே காலத்தில் ஈழத்தீவின் தென்பாதியிலும் ஒரு அரசு தோன்றி வளர்ந்துகொண்டிருந்தது என்பதற்கு மகாவம்சத்திலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக சான்றுகள் கிடைக்கின்றன. 

தேவானாம்பிரிய திசையன் இறந்தபோது துணையரசனாக முடி சூடப்பட்டிருந்தவன் அவன் தம்பி மகாநாகன் (ஆம், திசையனின் தம்பி பெயரும் மகா‘நாகன்’ தான்! ). ஆனால் மகாநாகனைக் கொன்று, அவனுக்கு வரவேண்டிய ஆட்சியைத் தன் மகனுக்குக் கொடுக்க எண்ணினாள் திசையனின் அரசி. அவள் திட்டம் எப்படியோ வெளிப்பட தன் மனைவி, குழந்தைகளோடு தெற்கே தப்பி ஓடுகிறான் மகாநாகன். அங்கு கிரிந்தி ஆற்றின் கரையில் “மகாகாமம்” எனும் ஊரை அமைத்து அரசு புரிகின்றான் மகாநாகன் (மகாவம்சம் 22:2-9). அந்த இடத்தின் பெயராக மகாவம்சம் அறிமுகப்படுத்தும் பெயர் தான் “உரோகணம்”.

ஆனால், உரோகணத்தின் முதல் அரசன் மகாநாகன் அல்லன். அவன் காலத்தில் உரோகணத்தில் இன்னொரு அரச வம்சம் ஆண்டு வந்துகொண்டிருந்தது. உரோகண அரசின் அந்தத் தலைசிறந்த அரசனின் பெயர் காமணி. அவனது பத்து மைந்தர்களால் வெல்லப்பட்ட அல்லது நிறுவப்பட்ட அந்த அரசுக்கு “பத்து உடன்பிறந்தாரின் அரசு” என்று பெயர். பிராமிக் கல்வெட்டுகளில் அவ்வரசர்கள் தங்களை |த`ச |பதிகன (dasa batikana) என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் (The State, Kingship and Buddhism in Ancient Sri Lanka, n.d:241-244).

பத்து உடன்பிறந்தாரை மகாவம்ச நூல் கதிர்காம ( க|சர|காம Kajaragāma) சந்தனகாம சத்திரியர்கள் (||கத்திய, Khattiya) என்று குறிப்பிடுகிறது (மகாவம்சம் 19:54, 63). அவர்களது தந்தையான காமணி கதிர்காமத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டிருக்க வேண்டும். காமணி என்பது இயற்பெயரல்ல. அது கிராமத்தின் தலைவன், அல்லது கூட்டத்தின் தலைவன் என்ற பொருள் கொண்ட பாகத மொழிச்சொல். அப்பதவிப் பெயருடன் கதிர்காமத்திலிருந்து ஆண்ட ஒரு சிற்றரசனின் மைந்தர்களே இவர்கள். இன்று அமைவிடம் இனங்காணப்படாத சந்தனகாமமும் கதிர்காமத்தின் அருகே உரோகணத்தில் அமைந்திருந்த ஓர் நகர் என்று நம்பப்படுகின்றது. 

பேரா.சி. பத்மநாதனின் நாக வேள்புலக் கருதுகோளின் படி, இவர்களும் நாகர் வம்சத்திலேயே வந்திருக்கவேண்டும். ஆனால் பத்து உடன்பிறந்தாரின் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட போவத்தகல், கொத்ததாமூக்கல், கெனன்னேகல் ஆகிய இடங்களில் மீன் சின்னம் வரையப்பட்டுள்ளது (உரு.01). மீன் சின்னம் தெற்காசியாவிலேயே சிறப்பாக பாண்டியருக்குரிய குலச்சின்னம். மகாவம்சமே மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்ட பாண்டிய இளவரசியை விசயன் மணந்ததையும் அவளுடன் பல இளவரசியர், கைவினைஞர்கள், பதினெண் குலங்களைச் சேர்ந்த ஆயிரம் குடும்பங்கள் இலங்கை வந்ததையும் சொல்வதாலும் (மகாவம்சம் 7:49-60), விசயன் தொன்மம் தவிர்ந்த ஏனைய அனுரை அரசின் தோற்றத் தொன்மங்கள், தென்னக அரசர் மற்றும் வணிகர் வருகையை உறுதியாகச் சொல்வதாலும், பத்து உடன்பிறந்தார் குலத்தின் மூதாதை காமணிக்கு பாண்டியத் தொடர்பு இருந்திருப்பது உறுதியாகின்றது. கெனன்னேகல்லில் வரும் பத்து உடன்பிறந்தார் குல மன்னனாகக் கருதப்படும் மச்ச மகாராசனின் பெயரும் (மச்சம் – மீன்) அவர்களது பாண்டியத் தொடர்புக்கான இன்னொரு சான்றாகக் கருதத்தக்கது.

Image 1

தேவானாம்பிரிய திசையனின் தம்பியான மகாநாகன் மகாகாமத்தில் அரசமைத்தபோது, அதற்கு மிக அருகிலேயே கதிர்காமத்தில் காமணியின் அரசு நீடித்துக்கொண்டிருந்தது. காமணி ஆண்டு வந்த மாணிக்க கங்கையின் கரையிலிருந்த கதிர்காமமும், அதற்கு மிக அருகிலேயே வெறும் 30 கிமீ தொலைவில் கிரிந்த ஆற்றின் கரையில் குடியேறிய மகாநாகனால் உருவாக்கப்பட்ட புதிய நகரான மகாகாமமும் உரோமர், தமிழகத்தவர், காம்போசர் முதலிய கடல்வணிகரோடு வணிகத்திலீடுபட்டு வளர்ச்சி கண்டிருக்கலாம். இவற்றின் அமைவிடமும், மகாநாகனின் அனுரைப் பின்புலமும், காமணியின் பாண்டியப் பின்புலமும் கதிர்காமத்துக்கும் மாகாமத்துக்கும் அத்தனை நல்லுறவு நீடித்திருக்காது என்றே சிந்திக்க வைக்கிறது. அந்தச் சிந்தனை சரி என்பதை உறுதிப்படுத்துகிறது லலாட தாதுவம்சம்.

மகாநாகனின் பேரனான கோட்டு அபயன் காலத்தில் காமணி மறைந்து அவனது பத்து மைந்தர்களே மாணிக்க கங்கைப்படுகையையும் அதற்கு அப்பால் கிழக்குப் புறமும் ஆண்டுவந்தனர். கிரிந்த ஆற்றுப்படுகையை அண்டிய மேற்குப் புறம் கோட்டபயன் வசமிருந்தது. கோட்டபயனுக்கும் பத்து உடன்பிறந்தாருக்கும் கடும் பகை நிலவியது. அவர்களில் பெரும்பாலானோர் மீது போர் தொடுத்து கோட்டபயன் கொன்றொழித்தான் என்கின்றது லலாட தாதுவம்சம் (Vijitha Kumara, 2016:37).

கோட்டபயனால் எத்தனை உடன்பிறந்தார் கொல்லப்பட்டனர் என்ற விபரம் தாதுவம்சத்தில் இல்லை. ஆனால் பத்துப்பேரில் ஏழு பேர் அதிக காலம் வாழவில்லை என்பதை இன்று நமக்குக் கிடைக்கும் எஞ்சிய மூன்று உடன்பிறந்தாரின் பிராமிக் கல்வெட்டுகள் சொல்கின்றன. அவர்கள் பதின்மரில் மூத்தவன் சர்வன் ( ||செத `சவ, Jetha sava, சிரேட்டன் சர்வன், மூத்தவன் சர்வன்), கடைக்குட்டி நாகன் (கனய நாக, கனிட்டன் நாகன், இளவல் நாகன்),  இடைப்பட்டவன் உதியன். இந்த மூவரதும் கல்வெட்டுகள் அம்பாந்தோட்டை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கிடைத்துள்ளன (Ranawalla, 2011:51-60) (உரு 02).

Image 2

கோட்டபயனின் வெற்றிக்குப் பின்னர், எஞ்சிய இந்த மூன்று உடன்பிறந்தாரும் கதிர்காமத்திலிருந்து கிழக்காக பின்வாங்கியிருக்கிறார்கள் போல் தெரிகிறது. அல்லது அவர்களின் தந்தையின் காலத்திலேயே இவர்கள் கிழக்கு உரோகணத்தை ஆண்டு வந்திருக்கலாம். எவ்வாறெனினும் மூத்தவனான சர்வனும் அடுத்தவனான உதியனும் மாணிக்க கங்கைக்கும் குமுக்கன் கங்கைக்கும் இடைப்பட்ட ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலேயே ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்கள் (The State, Kingship and Buddhism in Ancient Sri Lanka, n.d:243-244). கடைக்குட்டியான நாகனே பத்து உடன்பிறந்தாரில் பலம் வாய்ந்தவனாகத் தென்படுகிறான். அவனது ஆட்சி ஆதிக்கம் தெற்கே அக்கரைப்பற்று மொட்டையாகல் மலையிலிருந்து வடக்கே ஏறாவூர்ப்பற்று குசலான்மலை வரை பரந்திருந்தது. மேற்கே விந்தனைப்பற்று (உகணை) கெனன்னேகல் வரை அவனுக்குப் பின்னர் ஆண்ட அவனது இரு தலைமுறையினர் பற்றிய கல்வெட்டுத் தகவல்கள் கிடைக்கின்றன. இப்படிப் பார்த்தால், இன்றைய கீழைக்கரையின் தனித்துவமான பண்பாட்டுக்குத் தந்தை பத்து உடன்பிறந்தாரில் இளையவனான நாகனே!

அனுரையை ஆண்ட தேவானாம்பிரிய திசையன் காலத்தில் அறிமுகமான புத்த சமயம், அவனுக்கு இரண்டு தலைமுறைகள் பிந்திய பத்து உடன்பிறந்தார் காலத்தில் உரோகணத்திலும் செல்வாக்குடன் திகழ்ந்தது. பத்து உடன்பிறந்தாரில் எஞ்சிய மூவரும் புத்தத்தைத் தழுவியிருக்கவேண்டும், குறைந்தபட்சம் புத்த சமயத்துக்கு ஆதரவேனும் அளித்திருக்கவேண்டும் என்பதை அவர்களது கொடிவழியில் வந்த அரசர்களது கல்வெட்டுகள் சொல்கின்றன (அட்டவணை 01). போதிமரக் கிளை இலங்கை வந்தடைந்தபோது கதிர்காம – சந்தனகாம சத்திரியர்கள் அதற்குக் கொடுத்த மரியாதை மூலம் அவர்கள் புத்த சமயத்துக்கு வழங்கிய ஆதரவை உய்த்துணர முடிகின்றது (மகாவம்சம், 19:53,64).

மூத்தவனான சர்வன் பற்றிய கல்வெட்டுகள் குமுக்கனாற்றின் மேற்குக்கரையில் உள்ள கொத்ததாமூக்கல் (கொ|ட்|ட|த_மூஃகல, koṭṭadæmūhela) எனும் மலையில் கிடைக்கின்றன. மகாகாம அரசின் வளர்ச்சியில் வலிகுன்றிய இவன் குமுக்கனாற்றின் மேற்குப்புறம் அதிகாரம் செலுத்தி வந்திருக்கிறான். இவனுக்கு தர்மராசன் எனும் மகனும், தர்மராசனுக்கு ஆய் மகாதிசையன் எனும் மகனும் இருந்தார்கள் (உரு.01). ஆய் மகாதிசையனின் மகளான இளவரசி “அவ்வை சர்வரி” (அ|பி ^சவேர, Abi Savera) புத்த துறவிகளுக்கு பெருமளவு குகைகளைச் செய்து தானமாக வழங்கியுள்ளாள். அவள் தனி ஒருத்தியால் பொறிக்கப்பட்ட இருபது பிராமிக் கல்வெட்டுகள் கொத்ததாமூக்கல்லில் வாசிக்கப்பட்டுள்ளன. பண்டைய இலங்கையில் அதிக எண்ணிக்கையான கல்வெட்டுகளைப் பொறித்தவள் ஒரு பெண்ணரசி என்பதும், அவள் மகாவம்சத்தில் விதந்துகூறப்படாத ஒரு அரச வம்சத்தில் வந்தவள் என்பதும் வரலாற்றின் விநோதமே. 

சர்வனதும் அவனது இளவல் உதியனதும் பெயர் குறிப்பிடப்படும் இன்னும் சில கல்வெட்டுகள் குமுக்கனாற்றின் கிழக்குக் கரையில் பாணமைப்பற்று போவத்தகல் (|போவத்தே|கல, bōvattēgala) எனும் மலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு சர்வனின் மகன் தர்மராசன், பேரன் ஆய் மகாதிசையன் ஆகியோரின் பெயர்களும் காணப்படுகின்றன. எனவே குமுக்கனாற்றின் கிழக்குக்கரைப் படுகையில் சர்வனது சந்ததியினரும், உதியனது கொடிவழியினரும் ஆண்டிருக்கிறார்கள் என்பது தெரிகின்றது. 

உதியனது மகன் ஆய் அபயன். ஆய் அபயனுக்கு ஆய் திசையன் (அய தி^ச்^ச, aya tissa) எனும் மைந்தனும் அவ்வை அனுராதை (அ|பி அனுர|தி, abi anuradi) எனும் மகளும் இருந்தனர். கொத்ததாமூக்கல்லில் சர்வரி அளித்த கொடைகள் போலவே, போவத்தகல்லில் உள்ள குறிப்பிடத்தக்க கொடைகள், அவளது அத்தை அனுராதையால் வழங்கப்பட்டவை. கொத்ததாமூக்கல், போவத்தகல் ஆகிய இரு இடங்களிலும் கிடைத்த பிராமிக் கல்வெட்டுகள், அக்காலத்து இளவரசியர் பெற்றிருந்த சமூக முக்கியத்துவத்தைப் படிப்பதற்கான முக்கியமான ஆதாரங்களாகும். இவை இரண்டும் அண்ணளவாக பொமு. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. கொத்ததாமூக்கல் கல்வெட்டுகளில் வரும் அவ்வை சர்வரி, ஆய் திசையனின் மனைவி என்று சொல்லப்படுவதால், மூத்தவனான சர்வனின் மகன்வழிப் பேத்தி சர்வரியும், உதியனின் பேரன் திசையனும் கணவன் – மனைவி என்று கருதுகிறார்கள்.

Image 3

பத்து உடன்பிறந்தாரில் கடைக்குட்டியான நாகன் நாகன் தொடர்பான கல்வெட்டுகள், அக்கரைப்பற்று மொட்டையாகல், ஏறாவூர்ப்பற்று குசலான்மலை, ஆகிய இரண்டு மலைகளில் கிடைத்துள்ளன (Paranavitana 1970:30-31,37). கொத்ததாமூக்கல்லில் இடம்பெற்றுள்ள அதே “பத்து உடன்பிறந்தார்” (தச பதிகன) என்ற சொல், இவ்விரு இடங்களிலும் கிடைத்த கல்வெட்டுகளில் காணப்படுகின்றது. நாகன் தன்னைத் துணையரசனாகக் கருதியமை அவனது “உபராசன் நாகன்” எனும் பட்டத்தின் மூலம் தெரிகின்றது. 

மொட்டையாகல் பிராமிக் கல்வெட்டு (உரு.03) உபராசன் நாகனின் பேரன் காமணி திசையனால் புத்த சங்கத்துக்குக் கொடுத்த தானம் பற்றிக் கூறுகிறது. அது, காமணி திசையன், உபராசன் நாகனின் மருமகனான மகாபிரசாதிக அபயனுக்குப் பிறந்தவன் என்பதைச் சொல்கின்றது. இன்னொரு விதத்தில் சொன்னால், உபராசன் நாகனின் பெயர் தெரியாத மகளுக்குப் பிறந்தவன் மொட்டையாகல்லின் காமணி திசையன்.

Image 4

குசலான்மலையில் கிடைத்த கல்வெட்டில் நாகனின் மைந்தன் அபயனுக்குப் பிறந்த காமணி திசையனால் புத்த துறவிகளுக்குச் செய்யப்பட்ட தானம் பற்றிச் சொல்லப்படுகின்றது. ஏறாவூர்ப்பற்று கல்லூடுபொத்தானை மலையில் கிடைக்கும் பொமு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு பிராமிக் கல்வெட்டில் வரும் ஆய் அபயன் என்பவன், குசலான்மலைக் கல்வெட்டில் வரும் அதே அபயன் தான் எனவும் கருதப்படுகிறான். 

விந்தனைப்பற்று வடக்கு (உகணை) கெனன்னேகல்லில் (ஃகெனன்னே|கல, henannēgala) பொறிக்கப்பட்ட இன்னொரு பிராமிக் கல்வெட்டு, மச்ச மகாராசனாலும் காமணி திசையனின் தந்தையாலும் கொடுக்கப்பட்ட புத்த சமய அறக்கொடைகளை விவரிக்கின்றது. இங்கு சொல்லப்படும் “காமணி திசையனின் தந்தை” குசலான்மலையில் இடம்பெற்ற அதே ஆய் அபயன் ஆகலாம். குசலான்மலையிலும் மொட்டையாகல்லிலும் கிடைக்கும் நேரடி “பத்து உடன்பிறந்தார் குலத்துச்” சான்று கெனன்னேகல்லில் கிடைக்காத போதும் கொத்ததாமூக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ள அதே மீன் சின்னம் கெனன்னேகல்லில் பொறிக்கப்பட்டுள்ளதாலும், காமணி திசையனின் தந்தை அங்கு சொல்லப்படுவதாலும் கெனன்னேகல்லில் குறிப்பிடப்படுவோரும் பத்து உடன்பிறந்தார் கொடிவழியினரே என்பதை உறுதிப்படுத்தலாம். 

ஆக, உபராசன் நாகனுக்கு மகாப்பிரசாதிக அபயன், ஆய் அபயன், மச்ச மகாராசன் எனும் மூன்று மைந்தர்கள் இருந்திருக்கிறார்கள். மகாப்பிரசாதிக அபயன் ஆட்சியின் கீழ் அக்கரைப்பற்றுப் பகுதி நீடித்திருக்கிறது. அடுத்த மகனான அபயன் ஆட்சியின் கீழ் குசலான் மலையைச் சூழ்ந்த ஏறாவூர்ப்பற்றுப் பகுதி நிலவியிருக்கிறது. 

உபராசன் நாகனின் மூன்றாவது மகனாக ஊகிக்கக்கூடிய மச்ச மகாராசன் கெனன்னேகல் பகுதியில் விந்தனைப்பற்றுப் பகுதியில் ஆட்சி செலுத்தியிருக்கக்கூடும். அக்கரைப்பற்று பகுதியில் மகாப்பிரசாதிக அபயன் வழி வந்த நாகனின் மூன்றாம் தலைமுறையான முதலாம் காமணி திசையன் ஆட்சி புரிந்த அதேவேளை, குசலான் மலைப்பகுதியும் நாகனின் ஆய் அபயன் வழி மூன்றாம் தலைமுறையான  இரண்டாம் காமணி திசையன் ஆட்சியின் கீழ் நீடித்திருக்கிறது. இவர்கள் வடக்கே எழுந்து வந்த அனுரை அரசுக்குக் கட்டுப்படாமல் உரோகணத்தில் தன்னாட்சி செலுத்தி வந்திருக்கிறார்கள் என்பது புறக்காரணங்களாலும் தெளிவாகின்றது.

அடிக்குறிப்புகள்

1.Inscription of Ceylon, Vol. I, No. 2 (Paranavitana, 1970:1). தேவனம்பிய என்பது பாலிச்சொல். “தேவானாம்பிரிய” என்பது அப்பெயரின் வடமொழி வடிவம். தேவர்களுக்குப் பிரியமான என்பது பொருள். திச, திசை என்பது தமிழில் திசையன் என்றாகும். அது திசியம் அல்லது பூசம் எனும் விண்மீன் வழி சூட்டப்பட்ட பெயர். 

2.மகாகாமம் இன்று கிரிந்த என்று அழைக்கப்படுகிறது.

3.வடமொழியிலும் பாலிமொழியிலும் உரோகணம் என்றால் “வளர்வது, பெருகுவது” என்று பொருள் (Wisdom Library, n.d). அனுரை அரசின் காலத்தில் அது தெற்கே வளர்ச்சியடைந்து வந்த அரசாக இருந்திருக்கலாம். அனுராதபுரம் அனுசம் விண்மீனாலும் (வடமொழி: அனுராதா) உரோகணம், உரோகிணி விண்மீன்களாலும் பெயர்பெற்ற நகரங்கள். காலக்கணிப்பில் பயன்பட்ட விண்மீன்கள் ஆட்பெயர்களிலும் இடப்பெயரிலும் ஏராளமாக இடம்பெறுவது, அவை அக்காலத்தில் பெற்றிருந்த முதன்மைக்கான சான்றுகளாம்.

4.காமணி வடமொழியில் |க்ராமணீ, (Grāmaṇī) என்றாகும். அச்சொல் வேதஞ்சார் இலக்கியங்ளிலும் வடமொழி, பாகத, தென்னக பிராமிக் கல்வெட்டுகளிலும் இடம்பெற்றிருக்கிறது. தமிழகத்து வேளிரும் அரசரும் புலவரால் பாடப்படும் போது, இதையொத்த “ஊரன்” அல்லது “நாடன்” என்ற சொல்லால் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். 

தமிழகத்தில் வசித்து வரும் நாடார் சமூகத்தில் ஒரு பிரிவினர் தங்களை “கிராமணி” என்று அழைத்துக்கொள்கின்றனர். இவர்களும் கேரளத்தில் வசிக்கும் ஈழவர் அல்லது திய்யர் எனும் சமூகத்தவரும் ஒருவரே என்றும் விவாதம் உள்ளது. காமணியின் இன்னொரு வடிவமான கிராமணி, அதன் மறுவடிவமான நாடார், ஈழவர், திய்யர் என்ற வேறு சமூகப்பெயர்கள் என்பவற்றை ஈழத்தோடு இணைத்து நோக்கும் பார்வை ஆர்வமூட்டக்கூடிய ஒன்றாகும். 

5.பாலி: கோட்||டா||பய, Gotthābhaya. இவன் துட்டகாமணியின் பாட்டன். கோட்டாபயன் என்றால் குள்ளமான அபயன் என்று பொருள். தமிழில் குட்டன் அபயன் என்று சொல்லலாம். கோட்ட, குட்டன் என்ற சொற்களை நெருங்கி கீழைக்கரை வட்டார வழக்கில் இன்றும் “கொட்டான்” என்ற சொல் குள்ளத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

6.பிராமிக் கல்வெட்டுகளில் அரசகுடியினரின் பட்டங்களாக பருமக, அய, ர|ச முதலிய ஆண்பாற் சொற்களும், அ|பி, பருமகள் முதலிய பெண்பாற் சொற்களும் இடம்பெற்றுள்ளன. செனரத் பரணவிதான இச்சொற்களை பிரமுக, ஆர்ய, ரா|ச, அம்பிகா/அம்பா ஆகிய வடமொழிச் சொற்களின் ஈழப்பாகத வடிவங்களாக வாசிக்கிறார் (Paranavitana, 1970:lxv – lxviii). இலங்கையைப் பொறுத்தவரை ஈழப்பாகத மொழிக் காலத்தில் பாகதம் அல்லது பாலிமொழியின் ஆதிக்கத்தை ஆராயவேண்டுமேயன்றி, சங்கதத்திற்குச் சென்று திரும்புதல் சொற்பிறப்பு ஆய்வுகளின் படி திருத்தமானதல்ல. (இக்கட்டுரைத் தொடரின் சில இடங்களில் ஆட்பெயர்/இடப்பெயர்களை ஈழப்பாகத/பாலி வடிவங்களிலன்றி சங்கத வடிவங்களிலேயே கட்டுரையாசிரியன் எடுத்தாள்வது, சமகாலப் பரிச்சயம் கருதியே). 

அய என்ற சொல், பாலியில் ஐய என்றாகும். அது தமிழ் ஐயனுக்கு நெருக்கமானது. மேலும் பருமகள் என்பது பருமகன் என்ற ஆண்பால் னகரமெய் ஈறு பெண்பாலுக்கு ளகரமெய்யாக மாறும் தமிழியமொழிக் குடும்பங்களுக்கே உரிய அப்பட்டமான தமிழியப் பெண்பால் சொல்லாகும். “வேள்” என்ற அரசகுடிச் சொல் இடம்பெற்றுள்ள கல்வெட்டுகளை செனரத் “வேலு” என்று வாசித்திருப்பதையும் தற்செயல் என்று கொள்ளமுடியவில்லை. அத்துடன், பிராமிக் கல்வெட்டுகளின் சமகாலத்தில் தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக உரிமைகோரப்படும் தமிழிக் கல்வெட்டுகள், நாணயங்களும், பேரா.பரமு பு^ச்பரட்ணம், இந்திரபாலா போன்றோரின் ஆய்வுகளும் பிராமிக் கல்வெட்டுகளில் பழந்தமிழின் தாக்கம் இருந்ததை விரிவாக விளக்குகின்றன. பரணவிதானவின் அய, அ|பி ஆகிய சொற்களை தமிழில் ஐயன், அவ்வை என்று வாசிக்கமுடியும். ஐயன் என்பதற்குச் சமனான “ஆய்” எனும் அரசகுடிச் சொல், சங்க இலக்கிய காலத்தில் தென் தமிழகத்திலும் வேளிர் குடிகள் மத்தியிலும் வழக்கில் இருந்தது அறியப்படுவதால், இக்கட்டுரைத்தொடரில் அய என்ற சொல், “ஆய்” என்று மொழியாக்கப்படுகின்றது. அவ்வை என்ற சொல் சங்க இலக்கியத்தில் அரிதாகவே ஆளப்படும் போதும், அன்னை, அரசி எனப் பொருளுறும் அம்பை எனும் வடமொழிச் சொல்லுக்கு அதுவே நெருக்கமானது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அது தாய், மூதாட்டி, முதிர்பெண் ஆகியோரைக் குறிக்கப் பயன்பட்டதுடன், அரசகுல மகளிரின் பெயர் விகுதியாகவும் காணப்பட்டது. ஒப்பிடுக, கொற்றவை – கொற்ற+அவ்வை – அரசரின் அன்னை; அங்கவை-சங்கவை (அங்க+அவ்வை, சங்க+அவ்வை) குந்தவை – (குந்து+அவ்வை = வேல் கொண்ட அன்னை/வேலம்மை). 

7.மொட்டையாகல், குசலான்மலை ஆகிய இரு இடங்களிலும் கூறப்பட்ட அபயன், காமணி திசையன் ஆகிய பெயர்கள் ஒரே தந்தை – தனயனையே குறிக்கும் என்பது ஆய்வுலகக் கருத்து. ஆனால் அப்படிக் கொள்வதற்கு மொட்டையாகல் மலையில் வரும் “மருமகன்” என்ற சொல் தடையாக இருக்கிறது. குசலான்மலையில் ஈழப்பாகத மொழியில் “நாகனின் மகன் அபயன்” (நா|கஃக புத அ|பயச) என்று இடம்பெற, மொட்டையாகல்லில் தமிழ் – ஈழப்பாகதக் கலப்பில் “நாகனின் மருமகன் மகாப்பிரசாதிக அபயன்” என்றே வருகின்றது. ஆனால் செனரத் பரணவிதான மருமகன் என்ற சொல்லை தமிழ்ச்சொல்லாகப் பொருள் கொள்ளாமல் “பேரன்” என்று பொருள்கொண்டு அதை ”நாகனின் பேரனான மகாப்பிரசாதிக அபயனின் மகன் காமணி திசையன்” என்று வாசித்துள்ளார். மொட்டையாகல்லில் அபயன் பெயர் “மகாப்பிரசாதிக” என்ற பெயரெச்சத்தோடு வருவதால், அவனும் குசலான்மலையில் குறிப்பிடப்படுபவனும் வேறுவேறு என்று கொள்வதே பொருத்தம் போல் படுகின்றது. “மகாப்பிரசாதிக” என்ற முன்னொட்டு, சங்க இலக்கியங்களில் வரும் “பெருஞ்சோற்று” [உதியஞ்சேரலாதன்] என்ற முன்னொட்டோடு ஒப்பிடக்கூடியவாறு அமைவது தற்செயலா தெரியவில்லை.

பேரா. ரணவல்ல, மொட்டையாகல் கல்வெட்டில் பரணவிதான “காமணி திசையன்” என்று வாசித்த சொல்லை “காமணி சேனன்” என்று வாசித்துள்ளார் (Ranawalla, 2011:56). அது சரியெனின், குசலான்மலையின் காமணி திசையனும் மொட்டையாகல்லின் காமணி சேனனும் வேறு வேறு தந்தையர்க்குப் பிறந்த இரு தனித்தனி இளவரசரே என்பது உறுதியாகிவிடுகின்றது. 

உசாத்துணை

  1. பத்மநாதன், சி. (2016). இலங்கைத் தமிழர் வரலாறு: கிழக்கிலங்கையில் நாகரும் தமிழரும் (கிமு 250 – கிபி 300). கொழும்பு: இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்.
  2. Paranavitana, S. (1970). Inscriptions of Ceylon, Volume I, Ceylon: Department of Archaeology.
  3. Ranawella, G.S. (2018). History of the Kingdom of Rohana: From the Earliest Times to 1500 AC. Colombo: Ministry of Higher Education and Department of Archaeology.
  4. The State, Kingship and Buddhism in Ancient Sri Lanka. (n.d). retrieved from https://docplayer.net
  5. Vijitha Kumara, S. (2016). A Critical Edition of the Nalāṭa Dhātuvaṃsa: Chapter III. WWJMRD 2016; 2(2), pp.32-43.- Wisdom Library, (n.d). Rohana, Rohanā, Rohaṇa: 16 definitions, retrieved from: https://www.wisdomlib.org.

இவ்வத்தியாயத்தில் பிறமொழி ஒலிப்புக்களை சரியாக உச்சரிப்பதற்காக, ISO 15919 ஐத் தழுவி உருவாக்கப்பட்ட தமிழ் ஒலிக்கீறுகள் (Diacritics) பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஒலிக்கீறுகளின் முழுப்பட்டியலை இங்கு காணலாம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5135 பார்வைகள்

About the Author

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)