Arts
10 நிமிட வாசிப்பு

வடக்கின் விருட்சங்கள் : தொலையாது காப்போம்!-வரலாறு சொல்லும் வானுயர்ந்த சோலைகள்

July 15, 2021 | Ezhuna
 

இலங்கையிலேயே அதிகளவு இயற்கைக்காடுகளைக் கொண்ட  பிராந்தியங்களுள் வடமாகாணமும் ஒன்று. வடமாகாணத்திலே வன்னிப்பிராந்தியத்தின் கணிசமான நிலப்பரப்பு இயற்கையான காடுகளைக் கொண்டிருக்கிறது. பல தசாப்தங்கள் நிலைத்து ஓய்ந்து போன யுத்தத்தைக் கூட சளைக்காமல் எதிர்கொண்டு நிமிர்ந்து நின்ற வானுயர்ந்த சோலைகள் இன்று என்றுமில்லாதவாறு பெரும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கின்றன.  பெருகி வரும் சனத்தொகையும் காணிகளுக்கான தேவையும் மீள்குடியேற்றமும் அபிவிருத்தியும் இலகுவாய் வருமானம் பெறும் நோக்கங்களும் எனப் பலதும் பத்துமாய் மனித மையக் காரணிகள் முன்னே வந்து நிற்கையில்  எங்கள் காடுகளுக்கான முன்னுரிமை குறைந்து தான்  விடுகிறது.

மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி

இலங்கையின் அரசியலமைப்பில் ‘உயிர்வாழும் உரிமையானது’ அடிப்படை உரிமையாக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. அந்த உரிமையின் மையமாக இருப்பவை காடுகளும் அவற்றுடன் இணைந்த உயிர்ப்பல்வகைமையுமே என்பது தான்  நிதர்சனமான உண்மை. இதை நாம் பல சந்தர்ப்பங்களில் உணர்வதில்லை. உணரவும் எத்தனிப்பதில்லை. காடுகளும் அவற்றுடன் இணைந்த உயிர்ப்பல்வகையும் இல்லாவிட்டால்  காலப்போக்கில் மனிதனும் இப்பூலகில்  நிலைக்கப்போவதில்லை. அவனது உரிமைகளைப் பற்றி கதைப்பதற்கும் எவரும் இருக்கப்போவதுமில்லை.

இவை எல்லாம் இப்படியிருக்க, அதிக வனப்பகுதிகளைக் கொண்டுள்ளதாக நாம் எல்லோரும் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த வடமாகாணத்தின், குறிப்பாக வன்னியின் காடுகளை அனைவரும் ‘அரி மரம்’ என்ற கண்கொண்டு மாத்திரமே பார்க்கிறார்களோ என்று எனக்குப் பல வேளைகளில் எண்ணத் தோன்றும் .  அதற்கும் காரணமில்லாமல் இல்லை.

மரங்களை விறகிற்காக வெட்டுதல்

வடமாகாணத்தைப் பொறுத்தவரையிலே உலர் வலயக் காடுகள் பிரதானமானவை. அத்துடன் அங்குள்ள அரைகுறை வறள் வலயக் காடுகளும் கடல் சார் சூழல் தொகுதிகளும் கூட முக்கியமானவையும்  தனித்துவம் வாய்ந்தவையும் கூட. இந்த உலர் வலயக் காடுகள் வவுனியா, முல்லைத்தீவு, மன்னாரின் ஒரு பகுதி ஆகிய பிரதேசங்களில் பரந்து காணப்படுகின்றன. அக்காடுகளில் காணப்படும் பெரும்பாலான தாவரங்கள் வடமாகாணத்தின் சுதேச தாவர இனங்களாகும்.

மரங்கள்

சுதேச இனங்களும் அறிமுகப்படுத்தப்பட்ட இனங்களும்

சுதேச தாவர இனங்களின் முக்கியத்துவம்

ஆய்வாளர்கள் இந்த சுதேச தாவரங்களை மனித நாகரிக வளர்ச்சியின்  சாட்சிகளாக விளிப்பர். ஏனெனில் அவை மனித நாகரிகத்தின் தொடர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் அளப்பரிய பங்கினை ஆற்றியிருக்கின்றன. மனிதன் உட்பட விலங்குகளின் வாழ்க்கை இந்த சுதேச மரங்களுடன் பின்னிப்பிணைந்ததாகவே காணப்பட்டு வந்தது. இன்றும் காணப்பட்டு வருகிறது.  மரங்களைக் கருதும் போது, இந்த சுதேச மரங்களானவை பெரும்பாலும் ‘மையக்கல் இனங்களாகத்'[1] தொழிற்படுபவை.  மையக்கல் இனங்கள் எனப்படுபவை யாதெனில் சூழற்றொகுதியொன்றின் தொழிற்பாட்டிலும் உறுதித்தன்மையிலும் பெரும்பங்காற்றும் இனங்களாகும்.

இம்மையக்கல்லினங்கள் அழிந்துவிட்டால் சூழற்றொகுதியின் சமநிலை பாதிக்கும் என்பதுடன் சூழற்றொகுதி படிப்படியாகத் தகர்ந்துவிடும். ஆதலினால் இப்பூவுலகில் உயிர்கள் நிலைப்பதற்கு சுதேச மரங்கள் உறுதுணையாகவிருந்தன; இன்னும் இருக்கின்றன  என்று சொல்லல் தகும்.  அவற்றின் பயன்பாடும் அவை வழங்கும் சூழற்றொகுதிச் சேவைகளும் மனிதக் கண்டுபிடிப்புகளால் பிரதியீடு செய்யப்படவோ அல்லது பிரதி பண்ணவோ இயலாதவை.

“அறிமுகப்படுத்தப்பட்ட மர இனங்களுடன் ஒப்பிடும் போது இந்த சுதேச மரங்களானவை பல்பயன்பாடு எனும் இயல்பைக் கொண்டவை. அதாவது அவற்றில் பெரும்பாலானவை ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடுகளைக் கொண்டிருக்கும். ஆனால் காலத்துடன் தொழில் நுட்பமும் வளர அப்பயன்பாடுகளை நாம் நுகர்வு சார்ந்ததாகவே பார்த்துப் பழகிவிட்டோம். அவற்றிற்குமப்பால், இந்த சுதேச மரங்கள் வழங்கும் பல சேவைகளை நாம் பார்க்கத் தவறிவிட்டோம். உணவு வலைகளின் உறுதித்தன்மைக்கும் மகரந்தச் சேர்க்கைக்கும் நிலஅமைப்புகளுக்கிடையேயான இணைப்புக்கும் அங்கிகளுக்கிடையேயான உறவுக்கும் அங்கிகளுக்கு வாழ்விடமாக அபயமளிப்பதற்குமென அவை வழங்கும் சேவைகளை இந்த அறிமுகப்படுத்தப்பட்ட அல்லது சுதேச இனங்களல்லாத தாவரங்கள் (தாம் இயற்கைமயப்படும் வரை) வழங்குவதில்லை.”

“பாரம்பரிய மருத்துவத்திலே இந்த சுதேச மரங்கள் ஆற்றும் வகிபாகம் இன்று முழு உலகையும் தன்பக்கம் ஈர்த்திருக்கிறது. பல மேற்கத்தைய, நவீன மருந்துகளுக்கான ஆதாரமே இந்த சுதேச மரங்கள் தான்.”

தரமிழந்த நிலங்களை மீளவும் பழைய நிலைமைக்குக் கொண்டு வருவதற்குக்கூட சுதேச மரங்களைப் பயன்படுத்துவதே சிறப்பான தீர்வு என ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. ஏனெனில் அவற்றிற்கு அடிக்கடி நீர்ப்பாசனம் செய்ய வேண்டிய தேவை இருக்காது. உரமோ பீடை கொல்லிகளோ அதிகம் தேவைப்படாது. நோய்களும் பீடைகளும் அவற்றை இலகுவில் அண்டாது. அதேவேளை அங்கிகளின் பல்வகைமையையும் செழுமையையும் அவை வசதிப்படுத்திக் கொடுக்கும். அத்துடன் அறிமுகப்படுத்தப்பட் இனங்களால் உருவாகக் கூடிய சூழலியல் அபாய நேர்வுகளையும்[6] தவிர்க்கமுடியும்.

சுதேச மரங்கள் இத்தகைய நன்மைகளைத் தருவனவாக இருக்கின்ற போதிலும் அறிமுகப்படுத்தப்பட்ட இனங்களை நாடும் தன்மை எம்மவர் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. பொதுவாக, அறிமுகப்படுத்தப்பட்ட மர இனங்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கம் சார்ந்தே அறிமுகப்படுத்தப்பட்டன. பொதுவாக இந் நோக்கங்கள் அரிமரம், கடதாசித் தயாரிப்பு, விறகு போன்ற பலவகைப்பட்ட பொருளாதாரத்தேவைகளாக இருக்கும். அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள் துரிதமாக வளர்வனவாக/ முதிர்ச்சியடைவனவாகவிருக்கின்றமையே அவற்றின் மீதான ஈர்ப்புக்குரிய காரணமாகும். ஆதலினால் அவை முதிர்ச்சியடைந்ததும் தறித்துப் பணமீட்டுவதற்கு அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இவ்வினங்கள் தாம் இயற்கைமயப்படும் வரை சுதேச இனங்கள் வழங்கும் பெரும்பாலான சூழல் தொகுதிச் சேவைகளை வழங்க மாட்டாது என்பதை நாம் மனதில் கொள்ளல் வேண்டும்.

மர நடுகை முயற்சிகள்

வடக்கிலே வீதியோர மர நடுகைத் திட்டங்கள், மீள் காடாக்கல் திட்டங்கள், பசுமை நகராக்கல் திட்டங்கள் என பல்வேறு பரிமாணங்களிலும் மர நடுகை நடைபெறுகிறது. அபிவிருத்திக்காக பாரிய மரங்களைத் தறித்துவிட்டு புதிய மரக்கன்றுகளை நாட்டுவதால் பசுமை நோக்கங்களை அடைந்துவிடமுடியும் என்று நாம் பொதுவாகக் கொண்டிருக்கும் எண்ணக்கரு கேள்விக்குரியது.

அவ்வெண்ணக்கருவானது, உழைக்கும் குடும்ப அங்கத்தவர் ஒருவருக்குப் பதிலாக குழந்தையொன்றைப் பிரதியீடு செய்வதையே ஒத்ததாகும். பருத்த, வயதான மரங்கள் வழங்கும் சூழல்தொகுதிச் சேவைகளை சிறியமரக்கன்றுகள் உடனடியாக வழங்க மாட்டா. அது மட்டுமன்றி, மீள் காடாக்கல் திட்டங்கள், மர நடுகைத் திட்டங்களை நாம் செயற்படுத்தும் போது  நாம் பயன்படுத்தும் தாவர இனங்கள் எவ்வகையைச் சார்ந்தவை? அவற்றின் மூலம் எப்படி நாங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களை அடைய முடியும் என்பது தொடர்பில் நாம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். இல்லையேல் அவ்ற்றிற்காய் நாம் செலவிடும் நேரமும் உழைப்பும் பணமும் விழுலுக்கு இறைத்த நீராகிவிடுமென்பதில் எதுவித ஐயமுமில்லை.

(தொடரும்)

[1] Native Plants

[2] Introduced plant species

[3] Endemic species

[4] Naturalised

[5] Keystone species

[6]Environmental Risks


ஒலிவடிவில் கேட்க

4303 பார்வைகள்

About the Author

மனோகரன் சாரதாஞ்சலி

மனோகரன் சாரதாஞ்சலி அவர்கள் ஆசிய தொழில் நுட்ப நிறுவகத்தில் இயற்கை வள முகாமைத்துவத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் இளமாணிப்பட்டதாரி என்பதுடன் ஊடகவியலும் கற்றவர். லேக் ஹவுஸ் நிறுவனத்தில் சூழலியல் கட்டுரையாளராகப் பணிபுரிந்து பின்னர் கடந்த ஒரு தசாப்தகாலமாக இலங்கை நிர்வாக சேவை அலுவலராகப் பணிபுரிகிறார்.

இவர் முதுமாணிப் பட்டப்படிப்புக்காக உலகவங்கியின் புலமைப்பரிசிலையும் முதன்மை மாணவிக்கான இரு விருதுகளையும் பெற்றவராவார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)