Arts
18 நிமிட வாசிப்பு

சமனற்ற நீதி : வளர்நிலை

April 10, 2024 | Ezhuna

ராஜ் ராஜரட்ணம், சட்டத்துக்கு முரணாக ‘உட்தகவல் வணிகம்’ (Inside Trading) செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அமெரிக்கப் புலனாய்வுப் பணியகத்தால் 2009 ஒக்டோபரில் கைது செய்யப்பட்டார். அக் குற்றச்சாட்டுப் பொய்யானது என வாதாடியும், நீதிமன்றம் அவருக்கு 11 வருடங்கள் சிறைத்தண்டனையும் அமெரிக்க வரலாற்றிலே உச்சபட்சமான அபராதத் தொகையும் விதித்தது. ராஜ் ராஜரட்ணம் தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார்; தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக் கெதிராகப் பேச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். இந் நிலையில், சிறையிலிருந்தவாறே அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூலே ‘Uneven Justice’. இந்நூல் அமெரிக்க நீதித்துறை மீதும், நீதிபதிகள்  மீதும், அமெரிக்க வழக்குரைஞர் நாயகத்தின் மீதும், எப்.பி.ஐ. மீதும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இந்நூல் அண்மையில் ஓய்வுநிலைப் பேராயர் பேரருட்கலாநிதி எஸ். ஜெபநேசன், முனைவர் சோ. பத்மநாதன் (சோ.ப) ஆகியோரால் ‘சமனற்ற நீதி’ எனும் பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு, ‘யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மன்றத்தினால்’ வெளியிடப்பட்டது. தமிழ் வாசகர்கள் அறியும் நோக்கில் இந் நூல் ‘சமனற்ற நீதி ‘ எனும் பெயரிலேயே எழுநாவில் தொடராக வெளிவருகிறது.

 

தமிழில் : ஓய்வுநிலைப் பேராயர், பேரருட்கலாநிதி எஸ். ஜெபநேசன்,
முனைவர் சோ. பத்மநாதன்

1983 ஆம் ஆண்டு, நான் வோற்ரன் வணிகப் பள்ளியில் பட்டம் பெற்றதும், நிதியியல் சார்ந்த துறையிலேயே பணியாற்ற விரும்பினேன். தொழில்சார் வாழ்க்கையின் முதலாவது காலடியை சேஸ் மான்ஹாட்டன் வர்த்தக வங்கியிலிருந்து தொடங்கினேன். அமெரிக்காவில் சில வருடங்கள் பணியாற்றி விட்டு, ஆசியாவுக்குத் திரும்பிச் சென்றுவிடுவதே எனது இலக்காக இருந்தது.

whatron

அந்த வங்கியின் கடன் வழங்கும் துறையில் நிதிப் பகுப்பாய்வாளராக ஒன்பது மாதப் பயிற்சிக்குப் பின் பதவி என்ற அடிப்படையில் இணைந்து கொண்டேன். அது ஊதியத்துடன் கூடிய பயிற்சியே. இத்தகையை பதவிகளுக்குத் தேர்வு செய்யும் முறை மிகவும் கடினமானதாக இருந்தது. என்னோடு நூற்றுக்கும் அதிகமானவர்கள் பயிற்சி பெற்றார்கள். அந்தக் காலகட்டத்தில், இது மதிப்புமிக்க பயிற்சியாகக் கருதப்பட்டது. எமது அணி பயிற்சியை முடித்துக்கொண்டு பதவி ஏற்பதற்கு முன்பே வெவ்வேறு பெரிய நிறுவனங்களிலிருந்தெல்லாம் எமக்கு வேலை வாய்ப்புக்கள் குவிந்தன. இதனால் கிட்டத்தட்ட முப்பது வீதமானவர்கள் ஓரிரு வருடங்களுக்குள் பதவியிலிருந்து நீங்கி, அதிக சம்பளம் வழங்கும் வேறு நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தார்கள்.

நாங்கள் நிதி மற்றும் பணப் புழக்கத்தைப் பகுப்பாய்வு செய்வதில் கடுமையான பயிற்சிகளைப் பெற்றிருந்தோம். இந்தப் பயிற்சிகளின் வழியே, ஒரு நிறுவனத்தினுடைய கடன் தொடர்பான விவகாரங்களைச் சல்லடைபோட்டு ஆராயவும், ஒரு நிறுவனத்தின் பல்வேறு பொருளாதார நிலைகளைத் துருவிப்பார்க்கவும் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தோம். காலை நேரத்தில் வகுப்பறையில் படித்தும், மாலை நேரத்தில் கூட்டுத்தாபன வங்கியின் கடன் கொடுக்கும் அதிகாரிகளுடன் கடன் பரிசீலனையை மேற்கொண்டும் எம்மை அந்தத் துறையில் தகுதியானவர்களாக ஆக்கிக்கொண்டோம். கடன் விவகாரங்களுக்கான பயிற்சி பிற்காலங்களில் மாற்றமடைந்தது. தற்காலத்தில் அந்தப் பயிற்சி நாம் எடுத்த பயிற்சி போன்று கடுமையானதாக இல்லை. சேஸ் மான்ஹாட்டன் வங்கியில் நான் பெற்ற அந்தக் கடுமையான உயர்தரப் பயிற்சிக்கு என்றுமே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அது எனது பகுப்பாய்வுத் திறமையை பன்மடங்கு மெருகேற்றி உயர்த்தியது. எனது அடுத்த நகர்வான “தொழில் நுட்ப நிதிப் பகுப்பாய்வாளர்” என்ற பதவியில் என்னைச் சரியாக நிலை நிறுத்திக்கொள்ள மேற்சொன்ன பயிற்சியும், வோற்ரன் பள்ளியில் நான் பெற்றுக் கொண்ட எம்.பி.ஏ. பட்டமும், சசெக்ஸ் பல்கலைக்கழகப் பொறியியல் படிப்பும் எனக்குப் பெரிதும் உதவின.

சேஸ் மான்ஹாட்டன் வங்கியில் பயிற்சித் திட்டத்தை முடித்து விட்டு, மின்னணுவியல் நிறுவனங்களைக் கையாளும் பிரிவில் பதவியில் அமர்ந்தேன். 1980 களில் வர்த்தக வங்கிகளும் முதலீட்டு வங்கிகளும் தொழில்ரீதியாக ஒன்றுக்கொன்று நேர்மாறான முறைகளையும் பண்புகளையும் கொண்டிருந்தன. வர்த்தக வங்கிகள் அவசரத்தைத் தவிர்த்து நிதானமாகச் செயற்பட்டன. வர்த்தக வங்கிகளின் அலுவலர்கள் குறைந்த நேரமே வேலை செய்தார்கள். இதனால் “வங்கியாளர்களின் நேரம்” என்றொரு மரபுத்தொடரே உருவாகியிருந்தது.

bank

பெரும்பாலான நாட்களில், சேஸ் மான்ஹாட்டன் போன்ற வர்த்தக வங்கிகளின் ஊழியர்கள் மாலை ஐந்து மணியளவில் வேலைத்தளத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள். அந்திப் பொழுதுகளில் இவர்கள் வேலை செய்வது அரிது. வாரயிறுதி நாட்களில் வேலை செய்வதே இல்லை. வர்த்தக வங்கி கலாசாரம் ஒரு கனவானின் போக்கை ஒத்திருந்தது. இதற்கு நேர்மாறாக, முதலீட்டு வங்கியின் கலாசாரம் துடிப்பாகவும் முனைப்பாகவும் இருந்தது. எனவே, நான் துடிப்பும் தொழில் முனைப்பும் கொண்ட முதலீட்டு வங்கித்துறைக்கு ஈர்க்கப்பட்டேன். முக்கியமாக, முதலீட்டு வங்கிகளுக்கும் பங்குச் சந்தை வணிகத்திற்கும் இடையே நேரடியான பாதையிருந்தது. எனது பயிற்சிக்கும் படிப்புக்கும் ஏற்ப எனது அறிவையும் திறமையையும் பயன்படுத்த வேண்டிய இடம் சேஸ் மான்ஹாட்டன் வர்த்தக வங்கியல்ல. மாறாக, மின்னல் வேகத்தில் தெறிக்கும் பங்குச் சந்தையில் முதலீடுகளைச் செய்யும் முதலீட்டு வங்கிகள் உள்ள வால் ஸ்ட்ரீட்டே நான் சென்றடைந்து வெற்றிகரமாக இயங்க வேண்டிய இடம் என்று விரைவிலேயே உணர்ந்து கொண்டேன்.

நீடம்

இரண்டு வருடங்கள் சேஸ் மான்ஹாட்டன் வர்த்தக வங்கியில் பணியாற்றிய பின்பாக, 1985 ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம், நான் அங்கிருந்து விலகி, புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த “நீடம்” நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்து கொண்டேன்.

நீடம் நிறுவனத்தில் எனது பணி “செமி கொண்டக்டர்” எனப் படும் குறைக்கடத்திகள் உற்பத்தித் தொழிற்துறையைக் குறித்து ஆராய்ந்து, அந்தத் துறையிலுள்ள நிறுவனங்களின் எதிர்கால வருவாயைக் குறித்த பகுப்பாய்வுகளைச் செய்து அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதாகும். இதன் மூலம் அத்துறையிலுள்ள நிறுவனங்களுடைய பங்குகள் எதிர்காலத்தில் எத்தகைய ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கவுள்ளன என்பது குறித்த விவரங்கள் எமது நிறுவனத்தின் வாடிக்கையாளர்களான நிதி மேலாளர்களுக்கு வழங்கப்பட்டன. அவர்கள் எமது நிறுவனத்திற்கூடாகப் பங்குகளை வாங்குவார்கள் அல்லது விற்பார்கள்.

இதுதான் நான் கனவுகண்ட வேலை. எனது படிப்புக்கும் பயிற்சிக்கும் ஏற்ப பொறியியல், நிதிப் பகுப்பாய்வு, நான் பேரார்வம் கொண்டிருக்கும் பங்கு வணிகம் ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப் பொருத்தமான வேலை. நவீன மின்னணுவியலுக்கு குறைக்கடத்தி சிலிக்கன் பளிங்குகளே அடித்தளமாகவிருக்கின்றன. 1980 களின் நடுப்பகுதியில் மடிக் கணினிகளின் பெருக்கத்தால், இந்தத் துறை வேகமாக வளர்ச்சியடைந்தது. குறைக் கடத்தி உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சிலிக்கன் பள்ளத்தாக்கு அபார வளர்ச்சியடைந்தது. புதிய புதிய தொழில் நிறுவனங்கள் தோன்றின. இந்தத்துறையில் செல்வம் கொழித்துக் கொட்டியது.

நீடம் நிறுவனத்தில் என்னுடைய பணியை இரண்டாகப் பிரிக்கலாம். நான் ஆய்வு செய்யும் நிறுவனத்தின் நிதி நிர்வாகத் தரவுகளை முதலில் பகுப்பாய்வு செய்வேன். எனது நேரத்தின் பெரும் பகுதியை நிறுவனங்களின் உத்தியோகபூர்வ நிதி அறிக்கைகளை துருவிப் பார்த்தல், நிறுவனத்தினுடைய பங்குகளின் பெறுமதி அலைவுறும் திசையைக் கணிப்பது, சிலிக்கன் பள்ளத்தாக்கின் தொழில்நுட்ப வளர்ச்சிகளைக் குறித்துச் சஞ்சிகைகளிலும் செய்தித்தாள்களிலும் வரும் கட்டுரைகளைக் கவனமாக வாசித்துக் குறிப்புகளை எடுப்பது என்பவற்றிலேயே செலவிட்டேன். ஒரு நிறுவனத்தின் அனைத்துத் தரவுகளையும் திரட்டிக்கொண்ட பின்பாக, அந்த நிறுவனத்திற்குச் சென்று அதிகாரிகளைச் சந்திப்பேன். மாதம் ஒரு முறை நான் சிலிக்கன் பள்ளத்தாக்குக்குச் செல்வேன். அங்கு குறைக்கடத்தி உற்பத்திகளை மேற்கொள்ளும் முதன்மை நிர்வாகிகளுடனும் அவர்களுடைய போட்டியாளர்களுடனும் சந்திப்புகளை மேற்கொள்வேன். நிர்வாகிகள் என்னிடம் சொல்லும் தரவுகள் நம்பகமானவையா எனப் பல வழிகளிலும் குறுக்கு விசாரணைகளில் ஈடுபடுவேன்.

நிறுவனங்களின் தலைமை நிறைவேற்று அதிகாரிகளைச் சந்திப்பது எனக்கு மிகவும் பிடித்தமான வேலையாகவிருந்தது. அவர்களிடமிருந்து நான் ஏராளமாகக் கற்றுக் கொண்டேன். நான் சிலிக்கன் பள்ளத்தாக்குக்குச் செல்லும் போதெல்லாம், நாளொன்றுக்கு நான்கு அல்லது ஐந்து சந்திப்புக்களை தலைமை நிறைவேற்று அதிகாரிகளுடன் ஏற்படுத்துவேன். வாரத்திற்கு அண்ணளவாக இருபது சந்திப்புக்கள் நடந்தேறின. வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 3.30 மணி விமானத்தைப் பிடித்து, வாரயிறுதியை எனது குடும்பத்தினருடன் செலவிடுவதற்காக நியூயோர்க் திரும்பிவிடுவேன். அந்த விமானப் பயணத்தில், அந்த வாரம் முழுவதும் நான் கற்றுக்கொண்டவற்றை எழுதி வைப்பேன். குறிப்பாக, எனது பகுப்பாய்வுகளைத் தொடருவதற்குத் தேவையான தரவுகளைத் தொகுத்து எழுதிக் கொள்வேன். இந்த வழக்கத்தை எனது பணிக்காலம் முழுவதுமே நான் தவறாமல் கடைப்பிடித்தேன். பிற்காலத்தில், நான் ஆரம்பித்த கலியன் நிறுவனம் துரிதகதியில் வளர்ச்சியடைந்த போதும் ஒவ்வொரு தொழில்சார் பயணத்திலிருந்தும் வீடு திரும்புகையில் பறக்கும் விமானத்திற்குள்ளிருந்து குறிப்புக்களைத் தொகுத்து எழுதி வைப்பேன்.

நீடத்தில் எனது வேலையில் நான் சிறப்பாகச் செயற்பட்டதால், மிக விரைவிலேயே முதலீட்டு ஆய்வு இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றேன். நிறுவனத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆய்வுகளுக்கான தலைமைப் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. தொழில்நுட்பம், சுகாதாரச் சேவை, நுகர்வோர் சேவை ஆகிய மூன்று துறைகளில் எங்களது முதலீட்டு ஆய்வுகளை நடத்தினோம். புதிய பொறுப்பு பல்வேறு நிறுவனங்களைப் பற்றிப் பயனுள்ள நுண்ணறிவை எனக்கு வழங்கியது. இந்தத் துறைகளில் வேகமாக அபிவிருத்தியடைந்துவரும் போக்குகளையும் விளங்கிக்கொள்ள முடிந்தது. இந்தப் படிப்பினைகள் பிற்காலத்தில் நான் ஆரம்பிக்கவிருந்த என்னுடைய சொந்த முதலீட்டு நிறுவனம் இந்தத் துறைகளில் முதலீடு செய்வதற்குப் பேருதவியாக அமைந்தன.

george needam

நீடத்தின் நிறுவனர் ஜோர்ஜ் நீடம் அவர்கள் நிறுவனத்தின் வருமானத்தில் 50 சதவீதத்தை ஊழியர்களுக்குப் பகிர்ந்தளித்தார். அத்தோடு, சகல ஊழியர்களுக்கும் நிறுவனத்தின் பங்குதாரர்களாகும் வாய்ப்பையும் வழங்கினார். அந்த நிறுவனம் தமக்கே உரியது என்று ஊழியர்கள் எண்ணும்படி உற்சாகமூட்டினார். நீடம் நிறுவனத்தின் கலாசாரம் எல்லோருக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதும் உண்மை. சில பெரிய நிறுவனங்களிலிருந்து நீடத்துக்கு வேலைக்கு வந்தவர்கள், இந்தச் சிறிய நிறுவனத்தின் கலாசாரத்தை விரும்பவில்லை. திறமை இல்லாதவர்கள் ஒளிந்துகொள்வதற்கு இங்கே எந்த இடமும் இல்லை.

இங்கே ஒருவர் அதிகமாக உழைத்தால் அதிகமான கொடுப்பனவைப் பெறுவார். அப்படி இல்லாவிட்டால் அடிப்படை ஊதியத்தைப் பெறுவதோடு திருப்தியடைய வேண்டியதுதான். தொடக்கத்தில், அடிப்படைச் சம்பளம் வருடத்திற்கு 60,000 டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலதிகக் கொடுப்பனவு வேலைத்திறனையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. நீடம் சிறிய நிறுவனம் என்பதால், ஏனைய வால் ஸ்ட்ரீட் சம்பளங்களோடு ஒப்பிடும் போது, நீடம் நிறுவனத்தில் அடிப்படைச் சம்பளம் 25% அல்லது 30% குறைவாகவேயிருந்தது. ஆனால், நீடத்தின் பங்குகளை உடைமையாகப் பெறுவது என்ற வகையில் மற்றைய நிறுவனங்களை விட மொத்தத்தில் கொடுப்பனவு அதிகமாகவேயிருந்தது. எனினும், நீடம் நிறுவனத்தின் ஊழியர்களில் பலர் பங்குடமை குறித்து எவ்விதமான ஆர்வமும் கொள்ளவில்லை என்பதைக் கண்டு நான் வியப்படைந்தேன். பங்குகளில் அல்லாமல் அவர்கள் சம்பளத்தில்தான் ஆர்வம் கொண்டிருந்தனர். இது வால் ஸ்ட்ரீட்டின் குறுகிய காலப் பணிக் கலாசாரத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது. உயர்ந்த பதவியும் கூடிய ஊதியமும் கொடுக்கும் நிறுவனங்களுக்குச் சட்டெனத் தாவிவிடுவதே அவர்களின் வழக்கமாக இருந்தது.

சிலிக்கன் பள்ளத்தாக்கு நிறுவனங்களுடனான என் தொடர்பாடல்கள் மூலமாக நான் ஒன்றை அறிந்துகொண்டேன். அதாவது, சம்பளம் பெறுவதைக் காட்டிலும் பங்குகளைப் பெற்றுக் கொள்வதிலுள்ள பயனைத் தெரிந்துகொண்டேன். அக்காலத்தில், சிலிக்கன் பள்ளத்தாக்கு ஊழியர்களில் ஏராளமானோர் தமது நிறுவனங்களின் பங்குகளைப் பெற்று மில்லியனர்களாக உயர்ந்தார்கள். ஆனால், தமது சம்பளத்தில் மட்டுமே கண்ணாக விருந்த ஊழியர்களுக்கு இந்த அதீத முன்னேற்றம் நிகழவில்லை.

நான் நீடம் நிறுவனத்தில் பன்னிரண்டு வருடங்கள் பணியாற்றினேன். ஜோர்ஜ் நீடம் அவர்கள் என்னைக் கண்ணியமாக நடத்தியதுடன், முக்கியமான பொறுப்புகளையும் எனக்கு வழங்கியிருந்தார். நிறுவனத்தின் இயக்குநராக நான் உயர்ந்த போது, எனக்கு விருப்பமில்லாத வேலையொன்றையும் நான் செய்ய வேண்டியிருந்தது. நீடம் நிறுவனத்தைவிட அதிக சம்பளம் வழங்கிய நிறுவனங்களுக்கு நீடம் ஊழியர்கள் தாவிவிடாமல் தடுப்பதே அந்த விருப்பமில்லாத வேலையாகும். நான் ஊழியர்களிடம் விசுவாசம் பற்றிப் பேசியபோது “ராஜ்… நானொரு விசுவாசம் மிக்க மனிதன்தான். ஆனால், விசுவாசத்தைக் காட்டிலும் முக்கியமானது எனது குடும்பம். குடும்பத்தினரின் நன்மைக்காக நான் அதிக ஊதியத்தைத் தேடிச் செல்வது எனது கடமையாகும்” என்பதுவே எனக்குப் பதிலாகக் கிடைத்தது. இதற்கு என்னால் எந்தச் சமாதானத்தையும் கூற முடியவில்லை. நீடத்தில் ஊழியர்களைத் தக்கவைப்பது என்பது மிகவும் சவாலாகவும் எனக்கு பிடிக்காத வேலையாகவுமிருந்தது.

1992 ஆம் ஆண்டு, நான் ஏழு வருடங்கள் நீடத்தில் பணியாற்றியதன் பின்பாக, அதன் தலைவராகப் பதவி உயர்வு பெற்றேன். அப்போது எனக்கு முப்பத்தைந்து வயது. முதலீட்டுக் குழுமத்தை இயக்குவது ஜோர்ஜ் நீடத்தின் பொறுப்பாக இருந்தது. வணிகம், ஆய்வு என்பவற்றை உள்ளடக்கியிருந்த மூலதனச் சந்தைக்கு நான் பொறுப்பாக இருந்தேன்.

நீடத்தின் பங்குச் சந்தை வணிகர்களுக்கும் வால் ஸ்ட்ரீட்டின் ஏனைய நிறுவனங்களின் பங்குச்சந்தை வணிகர்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. பங்குச் சந்தை வணிகர்கள் பெரும்பாலும் சூதாடிகளாக இருந்தார்கள். அவர்கள் விளையாட்டுகளிலும் குதிரைகளிலும் பந்தயங்கள் கட்டுவதோடு நின்றுவிடாமல், பொதுவாக எல்லாவற்றிலுமே சூதாடுவார்கள். ஒரு நிமிடத்திற்குள் பதினைந்து ஐஸ்கிரீம்களை ஒருவரால் சாப்பிட முடியுமா? இல்லையா? என்றுகூடப் பந்தயம் கட்டுவார்கள். தங்களது ஓய்வு நேரங்களைக் கழிப்பதற்காகச் சூதாட்டத்திற்குப் புகழ்பெற்ற அட்லாண்டிக் நகரத்திற்கோ அல்லது லாஸ் வேகஸ் நகரத்திற்கோ போவார்கள். ஆனால், அவர்கள் வேலை நாட்களில் கண்களைக் கூட இமைக்காமல் பங்குச் சந்தையைக் கவனித்துக்கொண்டிருப்பார்கள். உணவு வேளைகளில் கூடத் தமது இருக்கைகளை விட்டு அகலமாட்டார்கள். அங்கிருந்தபடியே அவசர அவசரமாக உணவை அள்ளி விழுங்குவார்கள். பிற்பகல் நான்கு மணிக்குப் பங்குச் சந்தை மூடப்பட்டதுதான் தாமதம், அவர்கள் மாயமாகிவிடுவார்கள்.

பங்குச் சந்தை வணிகர்களைக் கண்காணிப்பது மிகவும் கடினம். வணிகர்களை வணிகர்களாக இருக்கவிடுவதே சரியானது என்று நான் கற்றுக்கொண்டேன். அவர்களைக் கண்ணியமானவர்களாகவும் சாந்தமானவர்களாகவும் நான் மாற்றப் போவதில்லை. அவர்கள் பிடிவாதமான அபிப்பிராயங்களைக் கொண்டவர்களாகவும் உரத்த தொனியில் முரட்டுத்தனமாகப் பேசுபவர்களாகவும் இருந்தார்கள். கடுமையான அழுத்தத்திற்கு மத்தியிலிருந்து அவர்கள் வேலை செய்வதால் கத்துவதும் கூச்சலிடுதும் அவர்களது கலாசாரமாக இருந்தது. பங்குச் சந்தை வணிகர்களைத் திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் பேராசைக்காரர்களாகச் சித்திரித்தன. எனது வழக்கு விசாரணையின்போது, இத்தகைய சித்திரிப்புக்கள் அரசுத் தரப்பு வழங்குரைஞர்களுக்குச் சாதகமாகயிருந்தன. அவர்கள் ஜூரிகள் சபையின் முன்னே, திரைப்படங்களின் கற்பனைப் பாத்திரங்களை உதாரணங்கள் காட்டித் தமது நாக்குகளைச் சாட்டையாகச் சொடுக்கினார்கள்.

ஆனால், உண்மை என்னவென்றால், பங்குச் சந்தை வணிகர்கள் முற்றிலும் வேறானவர்கள். தொழிலில் தீவிரமும் வெறியும் கொண்டவர்கள். பங்குச் சந்தையில் ஏற்படும் விறுவிறுப்புக் கொண்ட வேகமான போட்டிகளை விரும்பியவர்கள். அவர்கள் போட்டியின் விதிகளை நன்கு அறிந்திருந்தார்கள். கிடைக்கும் வெற்றிகளைக் கௌரவமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடினார்கள். இந்த வணிகர்களைப் பற்றிப் பொதுவெளியில் நிலவிய கேலியான விமர்சனங்களுக்கு மாறாக, இவர்களுடைய தொழிலில் கொள்கைகளும் இறுக்கமான விதிகளும் இருந்தன. 

கடும் உத்வேகத்தோடிருக்கும் பங்குச் சந்தை வணிகர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள் பகுப்பாய்வாளர்கள். இவர்கள் நிதானமானவர்களாகவும் கற்பதில் ஆர்வம் உள்ளவர்களாகவும் ஆழமான ஆய்வுத்திறனுடனும் இருப்பார்கள். இவர்களுடன் வேலை செய்வது எனக்கு இனிமையான அனுபவமாகவே இருக்கும். நான் சில தெற்காசியர்களைப் பகுப்பாய்வாளர்களாக நீடம் நிறுவனத்தில் நியமித்தேன். அவர்கள் மிகத் திறமையானவர்களாகவும் வால் ஸ்ட்ரீட்டில் தோன்றும் சவால்களைச் சாமர்த்தியமாக எதிர்கொள்பவர்களாகவும் இருந்தார்கள். 

1980 – 2000 காலப்பகுதியில் வால் ஸ்ட்ரீட்டில் தெற்காசியர்கள் அரிதாகவே பணியிலிருந்தார்கள். ஆனால், நீடம் நிறுவனத்தில் பணியாற்றிய பதினைந்து பகுப்பாய்வாளர்களில் ஐவர் தெற்காசியர்களாக இருந்தார்கள். நான் தெற்காசியர்களுக்கு முன்னுரிமை கொடுத்துப் பணிகளில் அமர்த்துகிறேன் என்று கூட அலுவலகத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்து ஜோர்ஜ் நீடம் என்னிடம் கேட்டபோது, நீடம் நிறுவனத்தில் நிதித்துறை முழுமையாகவே ஆங்கிலோ சாக்ஸன் வெள்ளையர்களாலேயே நிரப்பப்பட்டிருப்பதையும், நிறுவனத்தின் பங்குச் சந்தை வணிகர்கள் எல்லோருமே யூத இனத்தைச் சேர்ந்த ஆண்கள் என்பதையும் அவரிடம் சுட்டிக் காட்டினேன். “நான் வேலைக்கு அமர்த்தியிருக்கும் தெற்காசியப் பகுப்பாய்வாளர்கள் தங்களது வேலையைத் திறம்படவே செய்கிறார்கள். இதில் என்ன பிரச்சனை உள்ளது?” என்று திருப்பிக் கேட்டேன். ஜோர்ஜ் நீடம் அமைதியாகிவிட்டார். அவர் பொதுவாகவே யதார்த்த நிலவரங்களுக்கு இணங்கிச் செயற்படுபவர்.

நீடம் நிறுவனத்தில் இருந்த கடும் உழைப்பாளிகளான அலுவலர்களைப் போலவே, ஜோர்ஜ் நீடமும் கடுமையாக உழைத்தார். நான் அவரிடமிருந்து பலவற்றைக் கற்றுக் கொண்டேன். தொழிலைப் பொறுத்தளவில் அவரிடம் நல்லொழுக்கமும் திடமான மனவுறுதியும் காணப்பட்டன. இவை தொழிலில் நீடித்து நிற்பதற்கும் வெற்றிகரமாக இயங்குவதற்குமான அடிப்படைப் பண்புகளாகும். அவரிடம் நான் கற்றுக்கொண்ட இத்தகைய பண்புகள் முப்பத்தைந்து வருடங்களுக்குப் பின்னரும் எனக்கு நல்ல பயனைத் தருகின்றன. காலப்போக்கில், பல நிறுவனங்கள் தடயமே இல்லாமல் அழிந்தபோதும், நீடம் நிறுவனம் தொடர்ந்தும் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

நீடத்திலிருந்து வெளியேறுதல்

நீடம் நிறுவனத்தில் எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளைத் தாண்டி முன்னே செல்ல நான் திட்டமிட்டேன். முதலீட்டு நிதி மேலாளராக ஆகிவிட விரும்பினேன். பங்குச் சந்தையில் இறங்கிப் பணம் ஈட்டுவதைக் குறித்துத் தீவிரமாகச் சிந்தனை செய்யத் தொடங்கினேன். நீடம் நிறுவனத்தில் ஒரு முதலீட்டு நிதியத்தை உருவாக்கி, எனது முதலீட்டு ஆய்வு அனுபவத்தைப் பயன்படுத்துவதற்கான முன்னெடுப்புகளில் சுறுசுறுப்பாக இறங்கினேன். 1992 ஆம் ஆண்டு, நன்கு அறிந்திருந்த சிலிக்கன் பள்ளத்தாக்குப் பங்குச் சந்தையில், நீடம் நிறுவனம் சார்பாக ஒரு முதலீட்டு நிதியத்தைப் பதினைந்து மில்லியன் டொலர்கள் மூலதனத்தோடு ஆரம்பித்தோம்.

இந்த முதலீட்டு நிதியம் மிக நன்றாகச் செயற்பட்டது. பதினைந்து மில்லியன் டொலர்கள் மூலதனம் நான்கே நான்கு வருடங்களில் இருநூற்றைம்பது மில்லியன் டொலர்களாக வளர்ச்சியுற்றது. எனக்குத் தொழிலில் இருந்த பேரார்வமே இந்த வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணியாக அமைந்தது. தினமும் பயனுள்ள தரவுகளைத் தேர்ந்தெடுக்கும் சவாலும், திரட்டிய பல்வகைத் தரவுகளையும் தொகுத்துக் கூர்மையாக ஆராய்ந்து முதலீட்டைச் செய்யும் நுட்பமும் எனக்கு உற்சாகத்தையும் திருப்தியையும் கொடுத்தன.

ஜோர்ஜ் நீடம் எனக்கு வால் ஸ்ட்ரீட்டுக்குள் நுழையச் சந்தர்ப்பம் அளித்ததோடு, என்னை மரியாதையுடன் நடத்தி வந்தார். எனக்கு நிறுவனத்தில் பொறுப்புக்கு மேல் பொறுப்பாகக் கொடுத்து உயர வைத்தார். சிலிக்கன் பள்ளத்தாக்கிலுள்ள ஆற்றலும் ஊக்கமும் கொண்ட தொழிலதிபர்களுடன் நான் நெருக்கமாகப் பழகி வேலை செய்ததால், நானும் அவர்களைப் போன்று ஒரு தொழிலதிபர் ஆக வேண்டும் என்று மனதார விரும்பினேன். முதலீட்டு மேலாண்மையில் மட்டுமே என்னுடைய கவனத்தைக் குவித்தேன். எனவே, எனக்கு முப்பத்தொன்பது வயதானபோது, நீடம் நிறுவனத்திலிருந்து விலக முடிவெடுத்தேன். நான் அங்கே பன்னிரண்டு வருடங்கள் பணியில் இருந்திருக்கிறேன்.

1996 நவம்பர் மாதத்தில், ஜோர்ஜ் நீடம் அவர்களிடம் வருட முடிவில் நான் நீடம் நிறுவனத்திலிருந்து விலகி, எனக்கெனச் சொந்தமாக முதலீட்டு நிதியமொன்றை ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னேன். நான் பணியிலிருந்து விலகுவதைக் குறித்து ஜோர்ஜ் நீடம் அவர்கள் நிறுவன ஊழியர்களுக்கு அறிவிப்புச் செய்த கடிதம் பின்வருமாறு:

“எனது நண்பரும் பங்காளியுமான ராஜ் ராஜரட்ணம் இந்த வருட இறுதியில், எமது நிறுவனத்தை விட்டு விலகிச் செல்கிறார் என்பதைக் கவலையுடன் அறியத் தருகிறேன். அவர் நியூயோர்க்கில் சொந்தமாக ஒரு முதலீட்டு நிதியத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருக்கிறார். 1985 ஆம் ஆண்டு எமது நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டபோது, ராஜ் ராஜரட்ணம் எங்களோடு இணைந்துகொண்டார். அதற்கு முன்னே, சேஸ் மான் ஹாட்டன் வங்கியில் அவர் நிதிப் பகுப்பாய்வாளராகப் பணியில் இருந்தார்.

ராஜ் ராஜரட்ணம் அவர்கள் நீடம் நிறுவனத்தில் பகுப்பாய்வாளர், தலைமை நிர்வாகி, இயக்குநர் சபை உறுப்பினர், தலைவர் ஆகிய பதவிகளை ஏற்றுத் திறம்படப் பணியாற்றியுள்ளார். குறிப்பாக, எமது வாடிக்கையாளர்களுடன் நெருக்கமானதும் சுமூகமானதுமான தொடர்பைப் பேணிவந்துள்ளார்.

நான் அறிந்த பகுப்பாய்வாளர்களில் இவரே மிகச் சிறந்தவர். பங்குச் சந்தைகள் குறித்து ஆராய்ந்து விளங்கிக் கொள்வதில் இவருக்கு இணையான எவரையுமே நான் கண்டதில்லை. எமது நிறுவனத்தையும், முதலீட்டு நிதியத்தையும் கட்டியெழுப்புவதில் இவருடைய அர்ப்பணிப்பான உழைப்பு மகத்தானது. இவருடைய பங்களிப்பின்றி எமது நிறுவனத்தின் மாபெரும் வெற்றியை நாம் அடைந்திருக்கவே முடியாது. இவர் எமது நிறுவனத்தில் பல்வேறு பதவிகளை வகித்தாலும், இவருடைய முதன்மை ஆர்வம் முதலீட்டு மேலாண்மையே என்று உணர்ந்துள்ளார்.

எனவே, தனது கவனம் முழுவதையும் அந்த துறையிலேயே செலுத்த தீர்மானித்துள்ளார். அவர் எமது நிறுவனத்தில் வருட இறுதிவரை பணியாற்றி, தகுதியானவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துச் செல்வார். ராஜ் ராஜரட்ணம் தொடர்ந்தும் நீடம் நிறுவனத்தின் பங்காளிகளில் ஒருவராக இருப்பார்.

நீங்கள் எல்லோரும் என்னோடு இணைந்து ராஜ் ராஜரட்ணம் அவர்களுடைய பங்களிப்புக்கு நன்றியும், அவரது புதிய முயற்சியில் பெருவெற்றி பெற வேண்டுமென்று வாழ்த்துகளும் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.”

நீடம் நிறுவனத்தில் நான் பெற்ற அனுபவங்கள் உண்மையிலேயே விலை மதிப்பற்றவை. எனது சொந்த நிறுவனமான கலியனை நான் ஆரம்பித்தபோது, அந்த அனுபவங்கள் எனக்கு அத்திவாரங்களாக அமைந்தன. ஒரு நிறுவனம் நன்கு வளர்ச்சியடைய வேண்டுமென்றால், முதுநிலை ஊழியர்களுக்கு உயர்ந்த ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை நான் ஜோர்ஜ் நீடம் அவர்களிடமே கற்றுக்கொண்டேன். அத்தோடு, ஆக்கத்திறன் இல்லாதவர்களைக் களையெடுக்க வேண்டுமென்றும் அறிந்து கொண்டேன். ஊழியர்கள் சொல்வதை நீங்கள் செவிமடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட விடயத்தை அவர்கள் விரும்பாவிட்டாலோ அல்லது அதனில் மாற்றம் வேண்டுமென எண்ணினாலோ, அது குறித்துத் தொழில்சார் அறத்துடன் அவர்களோடு கலந்தாலோசிக்க வேண்டும். நான் இதை எப்போதும் கடைபிடித்தேன். எனது ஊழியர்கள் சொல்வதைச் செவிமடுப்பதற்காக எனது காதுகளை எப்போதும் திறந்தே வைத்திருந்தேன்.

மாறாக, எனது ஊழியர்கள் என்னை அச்சுறுத்தினால், வேலையிலிருந்து இராஜினாமா செய்யப்போகிறேன் எனப் பயமுறுத்திப் பார்த்தால் “அதிஷ்டம் உண்டாகட்டும்” எனச் சொல்லி அவர்களை வாழ்த்தி வழியனுப்பிவிட்டு எனது பணியைத் தொடர்வேன். கடுமையான அல்லது முரட்டுத்தனமான அணுகுமுறைகளால் என்னை ஒருபோதுமே வளைக்க முடியாது. என்னுடைய இத்தகைய மனவுறுதியைப் பின்னொரு நாளில் அமெரிக்க நீதித்துறை ஆச்சரியத்துடன் பார்த்தது.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

4836 பார்வைகள்

About the Author

ராஜ் ராஜரட்ணம்

திரு ராஜ் ராஜரட்ணம் அவர்கள் 1957 இல் கொழும்பில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கொள்ளுப்பிட்டி புனித தோமையர் கல்லூரியில் கற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று பள்ளிப் படிப்பை நிறைவுசெய்து சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றார். 1983 இல் பென்சில்வேனியா உவார்ட்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். ராஜ் ராஜரட்ணம் தனது பணியை முதன்முதலில் சேஸ் மான்ஹட்டன் வங்கியில் கடன் வழங்கும் அதிகாரியாகத் தொடங்கினார். 1985 இல் நியூயோர்க்கின் நீடம் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1987 இல் அந்நிறுவனத்தின் ஆய்வுப் பகுதியின் தலைவராகவும், மார்ச் 1991 இல் அந்நிறுவனத்தின் தலைவராகவும் ஆனார்.

1997 இல் தனது சொந்த நிறுவனமான கலியன் முதலீட்டு நிதியத்தை ஆரம்பித்தார். இந்நிதியத்தைப் பின்னர் அவர் கலியன் குழுமம் எனப் பெயர் மாற்றினார். இது உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றாக மாறியது. ஒரு காலகட்டத்தில் கலியன் குழுமம் 180 பணியாளர்களுடன் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிருவகித்தது.

2009 இல் அமெரிக்கப் புலனாய்வுப் பணியகம் ராஜ் ராஜரட்ணத்தைத் திட்டமிட்டுக் கைது செய்தது. உட்தகவல்களைப் பெற்று வர்த்தகம் செய்ததாகவும் 0.01 சதவீதம் குற்றமிழைத்ததாவும் அவர் மீது பொய்க்குற்றச் சாட்டுக்களை முன்வைத்தது. குற்றத்தைப் ஒப்புக்கொள்ளுமாறு அவர்மீது பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகித்தது. தான் நிரபராதி என்பதில் உறுதியாக நின்ற ராஜ் ராஜரட்ணம் அமெரிக்க நீதித்துறையில் உள்ள பேராசை பிடித்த சில தனிபர்களின் சதிகளாலும் பொய்ச்சாட்சிகளாலும் வஞ்சிக்கப்பட்டார். 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற ராஜ் ராஜரட்ணம் அவர்கள் 7 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து ராஜ் எழுதிய நூல் Uneven Justice என்ற பெயரில் 2021 இல் வெளிவந்தது. இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு 2024 இல் யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண போதனா மருத்துவமனை மன்றத்தால் வெளியிடப்பட்டது. ராஜ் ராஜரட்ணம் தற்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் மீள்கட்டுமானப் பணிகளுக்கு பல்வேறு வழிகளில் உதவி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)