Arts
25 நிமிட வாசிப்பு

சமனற்ற நீதி : என் இளமைக்காலம்

March 6, 2024 | Ezhuna

ராஜ் ராஜரட்ணம், சட்டத்துக்கு முரணாக ‘உட்தகவல் வணிகம்’ (Inside Trading) செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அமெரிக்கப் புலனாய்வுப் பணியகத்தால் 2009 ஒக்டோபரில் கைது செய்யப்பட்டார். அக் குற்றச்சாட்டுப் பொய்யானது என வாதாடியும், நீதிமன்றம் அவருக்கு 11 வருடங்கள் சிறைத்தண்டனையும் அமெரிக்க வரலாற்றிலே உச்சபட்சமான அபராதத் தொகையும் விதித்தது. ராஜ் ராஜரட்ணம் தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார்; தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக் கெதிராகப் பேச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். இந் நிலையில், சிறையிலிருந்தவாறே அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூலே ‘Uneven Justice’. இந்நூல் அமெரிக்க நீதித்துறை மீதும், நீதிபதிகள்  மீதும், அமெரிக்க வழக்குரைஞர் நாயகத்தின் மீதும், எப்.பி.ஐ. மீதும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இந்நூல் அண்மையில் ஓய்வுநிலைப் பேராயர் பேரருட்கலாநிதி எஸ். ஜெபநேசன், முனைவர் சோ. பத்மநாதன் (சோ.ப) ஆகியோரால் ‘சமனற்ற நீதி’ எனும் பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு, ‘யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மன்றத்தினால்’ வெளியிடப்பட்டது. தமிழ் வாசகர்கள் அறியும் நோக்கில் இந் நூல் ‘சமனற்ற நீதி ‘ எனும் பெயரிலேயே எழுநாவில் தொடராக வெளிவருகிறது.

 

தமிழில் : ஓய்வுநிலைப் பேராயர் பேரருட்கலாநிதி எஸ். ஜெபநேசன்,
முனைவர் சோ. பத்மநாதன் (சோ.ப)

1957 ஜூன் 15 ஆம் தேதியன்று, இலங்கையின் தலைநகரான கொழும்பில் நான் பிறந்தேன். எனது பெற்றோருக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில் நானே முதலாவது ஆண் குழந்தை. எனது குடும்பம் கட்டுப்பாடான வாழ்க்கையையும் கல்வி மீதான வேட்கையையும் இயல்பிலேயே கொண்டிருந்தது. விடா முயற்சியும் கடமை தவறாமையையும் என்னுடைய பாட்டனிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் குழந்தைகளுக்குக் கடத்தப்பட்டிருந்தன. ஒரு மத்தியதர வர்க்கத் தமிழ்க் குடும்பத்தின் கலாசாரமும் வழமைகளும் எங்களால் பின்பற்றப்பட்டன.

எனது தந்தை தன்னுடைய விடாமுயற்சியால் வாழ்க்கைப் பயணத்தில் முன்னேறிச் சென்றவர். அவர் இலங்கை பல்கலைக் கழகத்தில் பட்டதாரியாகியதும், இங்கிலாந்தில் கணக்கியல் மேற்படிப்பைத் தொடருவதற்கான புலமைப் பரிசில் அவருக்குக் கிடைத்தது. இங்கிலாந்துக்கு எனது தாயாரையும் அழைத்துச் சென்றிருந்தார். ஐந்து வருடங்களில் தந்தையாரின் மேற்படிப்பு நிறைவுற்றதும், அவசரமாக அவர்கள் இலங்கைக்குத் திரும்பினார்கள். அப்போது எனது தாயார் நிறைமாதக் கர்ப்பவதியாக இருந்தார். மிக நெருக்கடியான காலத்தில் நீண்ட கடற்பயணத்தை அவர்கள் மேற்கொண்டார்கள். அப்போது சூயஸ் கால்வாய் மூடப்பட்டுப் பதற்றமான சூழல் நிலவிக் கொண்டிருந்தது. பெற்றோர் பயணித்த கப்பல் ஆபிரிக்காவின் நன்நம்பிக்கை முனையைச் சுற்றியே செல்ல வேண்டிவிருந்தது. பெற்றோர் இலங்கை வந்து சேர்ந்து ஒரு மாதம் கழித்து நான் பிறந்தேன்.

எனது தந்தை ‘சிங்கர்’ பல்தேசிய நிறுவனத்தில் நல்ல வேலையொன்றைத் தேடிக்கொண்டார். அந்த நிறுவனத்தின் ஏணிப் படிகளில் தனது கடுமையான உழைப்பால் விரைந்து முன்னேறினார். அவருடைய நாற்பது வயதைத் தொடுவதற்கு முன்னரே, சிங்கர் நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை நிறைவேற்று அதிகாரியானார்.

j.m.ratnam

அப்பொழுது சிங்கர் தையல் இயந்திரம் உலகெங்கும், குறிப்பாக ஆசியாவில் மிகப் பிரபலமாக இருந்தது. பெரும்பாலான ஆசியப் பெண்களின் கனவு ஒரு சிங்கர் தையல் இயந்திரத்தைச் சொந்தமாக்கிக் கொள்வதே என்று கூடச் சொல்லலாம். இந்தக் காலகட்டத்தில் தையற்கலை ஏராளமான பெண்களை ஈர்த்தது. சிங்கர் தையல் இயந்திரமொன்றைச் சொந்தமாக வைத்திருப்பது ஒருவரின் செல்வத்திற்கும் சமூக அந்தஸ்திற்கும் அடையாளமாகவிருந்தது. 1950-1970 வரையான காலப்பகுதியில் ஒரு தெற்காசியக் குடும்பத்தின் உடமைகளைக் கணக்கிட்டால், அதிலே பெரும்பாலும் ஒரு தையல் இயந்திரமும் இருக்கும். என்னுடைய தந்தையார் பணி ஓய்வுபெறும்போது, சிங்கர் நிறுவனத்தின் தூரகிழக்கு ஆசியாவுக்கான பிராந்தியத் தலைவராக இருந்தார்.

என்னுடைய தாயார் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தவர். உயிரியலையும் விலங்கியலையும் சிறப்புப் பாடங்களாகக் கற்றவர். தனது குழந்தைகளது கல்வியில் மிகக் கவனத்துடன் இருந்தார். எங்களுக்கு அவர் கற்பித்தார். கணிதச் சமன்பாடுகளைக் குறித்தும், மனித உடலியல் கூறுகளைக் குறித்தும் அவர் எனக்குக் கற்பித்தது இனிய நினைவுகளாக எனது மனதில் இன்னும் அழியாமலிருக்கின்றன. குழந்தைகள் எங்களது கல்வி தொடர்பான ஒவ்வொரு அசைவையும் பெற்றோரே தீர்மானித்தார்கள். கல்வியே எமது வாழ்வின் அடி ஆதாரம். இந்த எண்ணம் எங்களது குடும்பத்திற்குள் மரபாகக் கடத்தப்பட்டிருந்து.

யாழ்ப்பாணத்திலுள்ள ‘அல்வாய்’ எனும் சிறிய கிராமத்தில் எனது தந்தைவழித் தாத்தாவும் பாட்டியும் வாழ்ந்தார்கள். தாத்தா ஆண்கள் பாடசாலையில் தலைமையாசிரியராக இருந்தார். பாட்டி பெண்கள் பாடசாலையில் தலைமையாசிரியையாக இருந்தார். அவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை நன்றாக உணர்ந்திருந்ததால், தங்களுடைய ஆறு பிள்ளைகளையும் கல்லூரிகளில் படிக்க வைத்தார்கள். தமது ஒரேயொரு மகளையும் கல்லூரிக்கு அனுப்பினார்கள். அக்காலகட்டத்தில் பெண் பிள்ளைகளைக் கல்லூரிக்கு அனுப்புவது யாழ்ப்பாணச் சமூகத்தில் அதிசயமான நிகழ்வாகவிருந்தது. பெண்கள் பருவ வயது எய்தியவுடனேயே திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

எனது தாய்வழித் தாத்தாவும் பாட்டியும் விவசாயிகள். அவர்களுடைய மூன்று பெண் குழந்தைகளில் முதலாவது குழந்தை எனது தாயார். அந்தத் தாத்தா மனவுறுதி மட்டுமல்லாமல், அதீத உடலுறுதியும் வாய்க்கப் பெற்றிருந்தார். தனது கடைசி மகளை அவளது கணவன் திட்டியதற்காக, மருமகனைக் கைகளால் அலேக்காகத் தூக்கி எடுத்து மாடிச் சுவரில் தொங்க விட்டாராம்.

தாத்தா எழுபது வயதைக் கடந்த பின்னர், ஒரு மோட்டார் காரை விலைக்கு வாங்கினார். அந்த முதிய வயதில் மூன்று தடவைகள் முயற்சித்து சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டார். நான் ஒருமுறை அவரது வீட்டில் தங்கியிருந்துவிட்டு கொழும்புக்குத் திரும்பும்போது, என்னைத் தனது மோட்டார் காரிலேயே பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று பிடிவாதமாக இருந்தார். அந்தப் பிரயாணம் என் வாழ்வின் மிகப் பயங்கரமான பிரயாணமாகவிருந்தது. பாதசாரிகளுக்கும் கட்டாக்காலி மாடுகளுக்கும் நடுவாக மோட்டார் கார் தடுமாறிச் சென்றது. வண்டியை ஓட்டும் தாத்தாவின் முகம் ‘ஸ்டியேரிங்’கிற்கு அரையடி தூரம்தான் விலகியிருந்தது.

கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது, தாத்தாக்களையும் பாட்டிகளையும் காண்பதற்காக நாங்கள் கொழும்பிலிருந்து எட்டு மணிநேரம் பயணம் செய்து யாழ்ப்பாணத்திற்குப் போவோம். இந்த பயணத்துக்காகவே பல மாதங்களாக ஆவலோடு காத்திருப்போம். பரபரப்பான தலைநகரத்திலே வளரும் எங்களுக்கு யாழ்ப்பாணத்தின் கிராமப்புற அமைதியான வாழ்க்கை மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆடுகளிலிருந்து பால் கறத்தல், கோழி முட்டைகளைச் சேகரித்தல் போன்ற வேலைகளில் பாட்டிக்கு உதவி செய்ய உற்சாகத்தோடு இறங்கிவிடுவோம். அதிகாலையில் எழுந்து தாத்தாவுடன் கடற் கரைக்குச்சென்று, மீனவர்களின் தோணிகளுக்காகக் காத்திருப்போம். கடலிலிருந்து திரும்பும் மீனவர்களிடம் துள்ளித் துடிக்கும் மீன்களையும் நண்டுகளையும் கணவாய்களையும் வாங்குவோம். தாத்தாமாருடனும் பாட்டிமாருடனும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்போம். அவர்கள் எங்களிடம் கல்வி குறித்தும் வாழ்க்கை குறித்தும் சமூகம் குறித்தும் ஆழமான கேள்விகளை விதைத்தார்கள். நாங்கள் அந்தக் கேள்விகளைக் குறித்த சிந்தனைகளுடன் யாழ்ப்பாணத்தின் தோட்டவெளிகளில் திரிந்தோம். புதியனவற்றைக் கண்டறிவதற்கும் தனித்துவமாகச் செயற்படுவதற்குமான உத்வேகத்தை முதன்முதலில் எனது தாத்தாக்களிடமிருந்தும் பாட்டிகளிடமிருந்துமே நான் பெற்றுக்கொண்டேன்.

இலங்கையைப் பற்றிய எனது சிறு பிராயத்து நினைவுகள் பெரிதும் இனிமையானவை. கண்ணீர்த் துளியின் வடிவிலிருக்கும் அந்த நாடு அதன் உற்சாகமூட்டக்கூடிய காலநிலைகளைப் போன்றே உயிர்த்துடிப்புடன் காணப்பட்டது. மணல் சொரிந்திருக்கும் அழகிய கடற்கரைகள், பசுமையான மலைச்சாரல்கள், நன்கு கத்தரிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட தேயிலைத் தோட்டங்கள், ஓங்கி வளர்ந்த தென்னந் தோட்டங்கள், மலைக் காடுகள், ஆறுகள், நீர்வீழ்ச்சிகள் என இலங்கை இயற்கை அழகால் ததும்பியிருக்கிறது. பூலோக சொர்க்கம் என்ற புகழ் மொழிக்கு மிகப் பொருத்தமான நாடுதான்.

இலங்கை பல்லின மக்களின் சகவாழ்வை வரித்துக்கொண்ட நாடு. அதன் குடிமக்கள் பல நூற்றாண்டுகளாகவே வெவ்வேறு இன மக்களுடன் கலந்து வாழப் பழகியிருந்தார்கள். இனங்களுக்கிடையில் மோதல் கட்டங்களும் இருந்தன. பெரும்பான்மையினரான சிங்களவருக்கும், சிறுபான்மையினரான தமிழருக்கும் இடையில் இன முரண்பாடுகள் வளர்ச்சியுற்ற காலத்தில், நான் எனது பதின்ம வயதுகளில் இருந்தேன். இந்த இனமுரண் மெல்லமெல்ல வளர்ச்சியுற்று, அந்த அழகிய தீவை முப்பதாண்டு காலக் கொடிய யுத்தத்திற்கு இட்டுச் சென்றது. வகைதொகையின்றி மக்கள் கொல்லப்பட்டார்கள், பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமலாக்கப்பட்டார்கள். இனமுரண் தீர்க்கப்படாத பிரச்சினையாகவே, நாட்பட்ட புண்ணாகவே இன்றுவரை இருக்க, இனமுரண்களுக்குள் சிக்கியிராத ஒரு சமூகச் சூழலிலேயே நான் சிறு பிராயத்தில் வளர்ந்தேன். அங்கே சிங்களவர், தமிழர், இஸ்லாமியர், பறங்கியர் என்ற பேதமேதும் கிடையாது. வீதியோரம் கிரிக்கெட் விளையாட இறங்கினால், எல்லா இனத்துப் பிள்ளைகளும் ஒன்றாகவே விளையாடினோம். சேர்ந்தே பாடசாலைக்குச் சென்றோம். நாங்கள் வெவ்வேறு வகுப்பறைகளில் இருந்தாலும், விளையாட்டு மைதானம் எங்களை இணைத்தது. ஒருவரது வீட்டில் அடுத்தவர் தங்கிக் கொள்வோம். இன, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு நான் வளர்ந்த சூழலே எனது எதிர்கால வாழ்க்கைக்கு வெளிச்சம் பாய்ச்சும் அற்புத விளக்காக அமைந்தது. உலகின் எந்தவொரு இனத்தை, மதத்தை, நிறத்தைச் சேர்ந்தவருடனும் என்னால் நட்பாகவும் புரிந்துணர்வுடனும் இருக்க முடிந்தது.

எனது பிள்ளைப் பருவத்தை நான் மிகவும் விரும்புகிறேன். என்னுடைய வாழ்வில் அதுவொரு வசந்தகாலமே. ஏராளமான நண்பர்களும் குடும்ப உறவுகளும் என்னைச் சூழ்ந்திருந்தனர். வாழ்க்கை அமைதியாகவும் அவசரமற்றும் தெளிந்த அழகிய நீரோடைபோல நகர்ந்தது. நியூயோர்க்கிலோ வாழ்க்கையும் தொழிலும் மூச்சுத் திணறவைக்கும் நாயோட்டமாக இருக்கிறது.

கொழும்பில், காலனிய காலத்துக் கட்டடக்கலையால் உருவாகியிருந்த பெரியதும் அழகானதுமான வீடொன்றில் நாங்கள் வசித்தோம். வீட்டின் விசாலமான முற்றம் ஒழுங்காகக் கத்தரிக்கப்பட்டிருந்த பூஞ்செடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதையொரு சிறிய நந்தவனம் என்றே கூறலாம். தோட்டக் கலையில் ஆர்வமுள்ள எனது தாயாரால் அது சிரத்தையுடன் பராமரிக்கப்பட்டது. வீட்டுக்குப் பின்னாலிருந்த வளவுக்குள் சடைத்திருந்த மரங்களில் மாம்பழங்கள், கொய்யாப்பழங்கள் உட்படப் பல வகைப் பழங்கள் வனப்பாகத் தொங்கின. நன்கு கனிந்த மாம்பழத்தைப் பறித்துத் துளையிட்டுச் சாறினை உறிஞ்சிக் குடிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான விடயம்.

ஞாயிற்றுக்கிழமைகள் கடற்கரைக்குச் செல்லும் நாட்களாகும். கொழும்புக்கு வெளியேயுள்ள ஆரவாரமற்ற கடற்கரைக்கு மோட்டார் வாகனத்தில் அயல் குடும்பத்தினரோடு செல்வோம். வாகனத்தின் பின்புறம் காலையில் சமைத்த பண்டங்கள் கூடைகளில் நிறைந்திருக்கும். கடற்கரையிலே சூரியனின் அனல் வெப்பத்தைத் தென்னைமரங்கள் தடுத்து நிற்கும். பெரிய குடைகளையும் படுக்கைத் துணிகளையும் விரித்துக் கூடாரம் தயாராகும். தாய்மார்கள் உணவுகளைப் பரிமாற, தந்தைமார்கள் கேலி, கிண்டல் அரட்டைகளிலும் சீட்டு விளையாட்டிலும் நேரத்தைப் போக்குவார்கள். குழந்தைகள் நாம் மணலில் கோட்டைகளைக் கட்டுவது, கிரிக்கெட் விளையாடுவது, கடலில் நீந்தித் திளைப்பது போன்றவற்றில் மும்முரமாகிவிடுவோம்.

இளமையில் கடற்கரையில் மகிழ்ச்சியாகக் கழித்த நாட்களே எனக்கு நீர்நிலைகளின் மீது ஆழமானதும் மாறாததுமான பற்றுதலை ஏற்படுத்தியிருக்கின்றன. எனக்கு மனச்சோர்வு ஏற்படும் போது, நான் கடற்கரையோரமாகப் பல மணிநேரங்கள் தொடர்ந்து நடப்பதுண்டு. அப்படிச் செய்தால் மனம் தெளிந்து, உற்சாத்தை மீண்டும் பெறுவேன். நான் ‘சசெக்ஸ்’ பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில், அருகிலேயே கடற்கரை இருந்தமை எனக்குப் பொன்னான வாய்ப்பாக அமைந்தது. எனது திருமண பந்தம் உறுதியானது ஜெனிவா ஏரியில்தான். எனது திருமண விழா மான்ஹட்டன் தீவைச் சுற்றிவந்த படகில் நிகழ்ந்தேறியது. நான் நியூயோர்க்கில் வசிக்கும் வீடு கிழக்கு நதியைப் பார்த்தவாறு நிற்கிறது.

இலங்கையில், என் இளமைப் பருவத்தில் நான் கற்றுக்கொண்ட இன்னொரு முக்கியமான விடயத்தையும் என்னுடைய வாழ் நாள் முழுவதும் நான் கடைப்பிடிக்கிறேன். குடும்ப உறவுகளோடும் நண்பர்களோடும் கூடி இசைந்து வாழ்வதில் எனக்கொரு போதையே உண்டு. என்னைச் சூழவர இருப்பவர்களை மகிழ்விக்கவும் உற்சாகப்படுத்தவும் என்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்வேன். எனது குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் கரீபியன் தீவுகளில் விடுமுறையைக் கழிப்பதற்கு அடிக்கடி ஏற்பாடுகளைச் செய்வேன். வாரயிறுதி நாட்களில் எனது வீடு நண்பர்களினாலும் அவர்களது குழந்தைகளினாலும் குதூகலத்தோடு நிரம்பியிருக்கும்.

இலங்கையில், பருவமழைக் காலத்தில் குழந்தைகள் நாங்கள் மழையில் நனைந்து திளைப்போம். பொதுவாகத் தாய்மார்கள் குழந்தைகள் மழையில் நனைவதைத் தடுப்பார்கள். ஆனால், எங்களது தாயார் மழைக்குள் விளையாடுமாறு எங்களை உற்சாக மூட்டுவார். நாங்கள் மழையில் ஆசைதீர நீராடிவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது, நாங்கள் குளிப்பதற்கு வேண்டிய வெந்நீரோடு அம்மா தயாராகயிருப்பார்.

எனது தாயார் பாரம்பரியத் தமிழ்க் கலாசாரத்தில் பற்றுக் கொண்டிருந்தாலும், அவரிடம் தாராளவாத எண்ணமும் சுதந்திர உணர்ச்சியுமிருந்தன. அவர் இரவு நேரங்களில், நமது மூதாதையர்கள் குறித்த கதைகளையும் சமயப் புராணங்களையும் பண்டைய வரலாறுகளையும் எங்களுக்குப் போதிப்பார். அவை நேர்மை, துணிவு, மனவுறுதி போன்றவற்றை எங்களுக்குக் கற்பித்தன. அவர் கூறியவற்றில் எனக்கு மிகவும் பிடித்தமானது ‘வீரத்தாய்’ என்ற கதையாகும்.

அந்தக் கதையில் ஒரு தாய் தன்னுடைய ஒரே மகன் போர்க்களத்தில் அம்பு தைத்து இறந்துவிட்டான் என்று கேள்விப்படுகிறாள். மகனுடைய மார்பிலா, முதுகிலா அம்பு தைத்தது என்ற கேள்வியோடு அவள் போர்க்களத்திற்கு ஓடிப்போகிறாள். என் மகனின் முதுகில் அம்பு தைத்திருந்தால் அவனுக்குப் பாலூட்டிய மார்பை அறுத்தெறிவேன் என்று சபதமேற்கிறாள். ஆனால், போர்க்களத்தில் மகன் புறமுதுகிடாமல் மார்பில் அம்பு தைத்தே மாண்டிருப்பது கண்டு பெரிதும் உவகையடைகிறாள்.

இந்தக் கதையை முதலில் கேட்டபோது, ஒரு தாய் தன்னுடைய ஒரே மகன் இறந்து கிடப்பதைப் பார்த்து எப்படி மகிழ்ச்சியடைய முடியும் என்ற வியப்பே எனக்கு ஏற்பட்டது. எனது தாயார் இந்தக் கதையில் பொதிந்திருக்கும் நீதியை எனக்குப் பொறுமையாகச் சுட்டிக்காட்டினார். எந்தச் சூழ்நிலையிலும் எவருக்கும் வளைந்து கொடுக்காமை, எந்தத் துன்பத்தையும் மனவுறுதியோடும் மாண்போடும் எதிர்கொள்ளல், துணிச்சல் ஆகியவற்றை இந்தக் கதை நமக்குக் கற்றுத்தருகிறது.

பிள்ளைப் பருவத்திலிருந்து இன்றுவரைக்கும் எனது மனதிலே பசுமையாகப் பதிந்திருக்கும் இன்னொரு கதை வீரபாண்டிய கட்டப்பொம்மனின் கதையாகும். ஒரு சிறிய பாளையக்காரனான கட்டப்பொம்மன், மாபெரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து நின்று கலகம் செய்தான். ஆங்கிலேயருக்குப்பணிய மறுத்ததால், இறுதியில் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டான். அவனுடைய அடிபணியாத குணமும் துணிச்சலும் என்னை இன்றுவரை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.

நான் ஒரு சிறந்த மாணவனாகவே பாடசாலையில் விளங்கினேன். எனது வகுப்பிலுள்ள அதிசிறந்த மூன்று மாணவர்களுள் ஒருவனாக எப்போதுமே இருந்தேன். பாடசாலையில் வகுப்புகள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டிருந்தன. நான் தமிழ் மாணவர்களுக்கான வகுப்பில் இருந்தேன். அந்த வகுப்பில் ஏறத்தாழ முப்பது மாணவர்கள் இருந்தார்கள். சிங்கள மாணவர்களுக்கும் ஆங்கிலம் பேசும் மாணவர்களுக்கும் தனித்தனி வகுப்புகள் இருந்தன.

பாடசாலையில், இடைவேளைக்காக ஆவலோடு காத்திருப்போம். இடைவேளைக்கான மணி ஒலித்ததும் நான் விளையாட்டு மைதானத்தை நோக்கித் தலைதெறிக்க ஓடுவேன். நான் கிரிக்கெட் விளையாட்டை நேசித்தாலும், மல்யுத்தத்தையே அதிகம் விரும்பினேன். அதற்கு ஏற்றவாறு தமிழ் வகுப்பிலுள்ள எல்லா மாணவர்களை விடவும் நானே உயரமான, பருமனான உடல்வாகு கொண்டவனாக இருந்தேன். மைதானத்தில் தமிழ் வகுப்பு மாணவர்களோடு சிங்கள, ஆங்கில வகுப்பு மாணவர்களும் விளையாட்டுகளில் இணைந்துகொள்வார்கள்.

st.thomas

மல்யுத்தப் போட்டிக்காக ஒரே உயரமும், பருமனும் கொண்ட மாணவர்களை ஒவ்வொரு அணிக்கும் பிரித்துக்கொள்வோம். மணற்புழுதியில் ஒரு வட்டத்தை உருவாக்கிக் களத்தைத் தயார் செய்ததும், மல்யுத்தம் கோலாகலமாக ஆரம்பமாகும். இந்தப் போட்டிக்குத் திட்டவட்டமான விதிகள் இருந்தன. பிறாண்டுவது, பற்களால் கடிப்பது, எல்லைக்கோடு கடந்தவனோடு மல்யுத்தம் செய்வது என்பன தடைசெய்யப்பட்டிருந்தன. போட்டியாளர்கள் சரிநிகராக இருக்க வேண்டும், நேர்மையான முறையில் சண்டை செய்ய வேண்டும், விதிகளைத் தெளிவாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையெல்லாம் சிறுவயதிலேயே நான் கற்றுக்கொண்டேன்.

வானொலி கேட்பதும் அப்போது எங்களுடைய முக்கியமான பொழுதுபோக்காக இருந்தது. ஆங்கிலப் பாடல்கள், பைலாப்பாடல்கள், தென்னிந்தியத் தமிழ்ப் பாடல்கள் போன்றவை எனது பெற்றோரால் விரும்பிக் கேட்கப்படும். நானும் அந்தப் பாடல்களிடம் இயல்பாகவே ஈர்க்கப்பட்டேன். வானொலியில் கிரிக்கெட் வர்ணனை ஒலிபரப்பாகும்போது, நாங்கள் பரபரப்பாகிவிடுவோம். துடுப்பாட்டக்காரரின் துணிவு, பந்து வீசுபவரின் தந்திரோபாயங்கள், எடுக்கப்படும் ஓட்டங்கள் என்று வர்ணனையாளரின் கம்பீரமான குரல் சொல்லச் சொல்ல, வெற்றி எந்தப் பக்கம் என்ற மயிர்க்கூச் செறியும் பதைபதைப்பு எங்களைத் தொற்றிக்கொள்ளும். கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாட்களுக்கு நடைபெறும். அப்போதெல்லாம் நான் மற்ற வேலைகளைக் கூடியவரை ஒதுக்கிவிட்டு, வானொலிக்குப் பக்கத்திலேயே இருந்து கொள்வேன்.

அநேகமான இலங்கையர்களும் பிற தெற்காசிய நாட்டு மக்களைப் போலவே கிரிக்கெட் விளையாட்டின் தீவிர அபிமானிகள். கிரிக்கெட் மெதுவாக நடைபெறும் விளையாட்டு என்று அமெரிக்கர்கள் சொல்வதுண்டு. ஆனால், கிரிக்கெட்டை நன்றாக அறிந்தவர்களுக்கு அந்த விளையாட்டு மானிட வாழ்க்கையையே பிரதிபலிப்பதாகத் தோன்றும். கிரிக்கெட்டி விளையாட்டின் அமைதியும் அர்த்தமும் கொண்ட ‘சந்தம்’ வாழ்க்கையை நடத்துவதற்கும் தேவையானது. கிரிக்கெட்டைப் புரிந்து கொள்வதன் மூலம் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளலாம் என்று கூடச் சொல்லலாம்.

துரதிர்ஷ்டவசமாக, பிள்ளைப்பராயம் நீடித்து நிலைப்பதில்லை. என்னுடைய அமைதியான வாழ்வு சடுதியாக முடிவுக்கு வந்தது. என்னுடைய பதினோராவது வயதில், நான் எனது குடும்பத்தைப் பிரிந்து செல்ல நேரிட்டது. இந்தியாவிலுள்ள ‘ஏற்காடு மாண்ட்ஃபோர்ட் விடுதிப் பாடசாலை’க்கு என்னை அனுப்பத் தகப்பனார் தீர்மானித்தார். நான் சிறந்த பள்ளியில் ஆங்கில மொழிவழியில் படிக்க வேண்டுமென அவர் விரும்பினார். எனது தகப்பனாருடைய தீர்மானம் தீர்க்கதரிசனம் நிறைந்ததாக இருந்தது.

மூன்று வருடங்களுக்குப் பின்னர், அதாவது, 1972 ஆம் ஆண்டில், தந்தையார் பிராந்திய முகாமையாளராகப் பதவி உயர்வு பெற்றுச் சிங்கப்பூர் அலுவலகத்திற்குச் சென்றார். குடும்பமும் அவருடன் குடிபெயர்ந்தது. எனது தகப்பனாருக்கு சிங்கர் நிறுவனத்தில் மேலும் மேலும் பொறுப்பான பதவிகள் வழங்கப்பட, எனது குடும்பம் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை அமெரிக்கா, இந்தியா, தாய்லாந்து, மீண்டும் சிங்கப்பூர் என வெவ்வேறு நாடுகளுக்குக் குடிபெயர்ந்தது.

நானோ இந்தியாவில் தனிமையில் உழன்றேன். ஆரம்பத்திலிருந்தே விடுதிப் பாடசாலை எனக்குப் பிடிக்கவில்லை. பழைய சம்பவங்களையும் வீட்டு நினைவுகளையும் மனதில் மீட்டியவாறே காலத்தைக் கடத்தினேன். எனது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரைத் தேடி என்னுடைய குழந்தை உள்ளம் ஏங்கியது. இலங்கை உணவையும் இசையையும் கடற்கரையையும் என் மனம் நாடியது.

indian school

யாழ்ப்பாண வறுத்த மிளகாய்த்தூளில் சமைக்கப்பட்ட கோழி இறைச்சிக்கறியும் என் வீட்டு வளவில் கிடைத்த வாசனையான புளிப்புப் பழங்களும் அலையடிக்கும் நீலக்கடலும் இங்கில்லை. இசையைக் கேட்காமலிருப்பதும் சோர்வையளித்தது. விடுதியில் இசைக்கு அனுமதியில்லை. உற்சாகமற்ற விடுதி வாழ்வைச் சகித்துக் கொள்ளலாம்தான். ஆனால், அங்கிருந்த மிதமிஞ்சிய விதிகளும் கடுமையான கண்காணிப்பும் எனது சுதந்திரத்தைப் பறித்துவிட்டதாகவே உணர்ந்தேன்.

புதிய வாழ்க்கையைச் சமாளிக்கவும் சகிக்கவும் எனக்குள்ளேயே போராடிக்கொண்டிருந்தேன். பிரிவுத்துயர், தனிமை, விடுதிப் பாடசாலையின் கடினமான வாழ்க்கை குறித்தெல்லாம் நான் ஒருபோதுமே பெற்றோரிடம் முறையிடவில்லை. ஆனால், எனது தாயார் என் துயரங்களையும் சிரமங்களையும் அறிந்திருந்தார். ஏனெனில், விடுமுறைகளின் முடிவில் நான் கொழும்பிலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட ஆயத்தமாகும்போது, அம்மா நீண்ட நேரம் எனக்குப் புத்திமதிகள் சொல்வார். தனது பிள்ளைகளில் நான் மாத்திரமே வருகின்ற சவால்கள் எல்லாவற்றையும் சமாளிக்ககூடிய ஆற்றல் கொண்டவன் என்பது தனது நம்பிக்கை என்று கூறுவார். ஒவ்வொருவருடைய வாழ்விலும் சவாலான காலங்கள் ஏற்படுகின்றன. நான் வெறும் பதினொரு வயதிலே விடுதிப் பாடசாலைக்கு சென்றதும், அங்கே என்னை நானே காப்பாற்றிக்கொள்ளப் பயிற்சி பெற்றதும் அப்படியானதொரு காலமாகும். என் குடும்பத்தை விட்டு இன்னும் தொலைவுக்கு என்னை இழுத்துச் செல்லக் காலம் காத்திருந்தது. புலம்பெயர்ந்த அநேக உத்தியோகத்தர்களது குடும்பங்களில் நடப்பது போலவே, நானும் இங்கிலாந்திலுள்ள விடுதியுடன்கூடிய உயர்நிலைப்பள்ளிக்கு அனுப்பப்பட்டேன். கல்வியையே மூலதனமாகக் கொள்ளும் இலங்கை மக்கள் இங்கிலாந்தில் விடுதிப் பாடசாலைக் கல்வியைப் பெரும்பேறாகக் கருதினர். இதன் விளைவாக எனது சிறு பராயத்து வாழ்க்கை இந்தியாவிலும் இங்கிலாந்திலுமுள்ள விடுதிப் பாடசாலைகளில் கழிந்தன. நான் விடுதிப் பாடசாலைகளில் இருந்த காலம் முழுவதுமே எனது தாயார், அவர் உலகின் எந்தப் பாகத்தில் இருந்தாலும், ஒவ்வொரு வாரமும் எனக்குக் கடிதம் எழுதுவார். அவருடைய வற்றாத அன்பு எனக்குத் தோன்றாத் துணையாக நின்றது.

இங்கிலாந்தில் உயர்நிலைப் பள்ளியில் கல்வியை நிறைவு செய்து கொண்டு, சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். விடுதிப் பாடசாலையின் அன்றாடக் கட்டுப்பாடுகளும் கெடுபிடிகளும் இல்லாத, பரந்து விரிந்து கிடந்த பல்கலைக்கழகச் சூழல் எனக்குச் சுதந்திரத்தையும் புத்துணர்ச்சியையும் மகிழ்வையும் அளித்தது. பல்கலைக்கழக வாழ்க்கையை நான் முழுவதுமாகக் கொண்டாடி இரசித்தேன். எனினும், என்னைச் சுய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் கற்றுக் கொண்டேன். 1970 களின் நடுப்பகுதியில் சசெக்ஸ் பல்கலைக்கழகம் இடதுசாரிக் கருத்தியல்களைக் கொண்ட பேராசிரியர்களால் நிரம்பியிருந்ததுடன் ‘லிபரல்’ சிந்தனை கொண்ட சர்வதேச மாணவர்களின் கூடாரமாகவுமிருந்தது.

உயர்பள்ளியைப் போலவே, பல்கலைக்கழகத்திலும் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் சிறந்து விளங்கினேன். பொறியியல் பட்டம் பெறுவதற்காகப் படித்தேன். ஆனால், எனக்குப் பொறியியலில் பெரிய ஆர்வம் இல்லை என்பதை விரைவிலேயே உணர்ந்து கொண்டேன். அதில் படைப்பூக்கச் சிந்தனைகளுக்கு இடமில்லாதிருந்தது. பொறியியல் படிப்புடன் ‘செய்பணி ஆய்வியல்’ என்ற பாடத்தை இரண்டாம் நிலைப் பாடமாகச் சேர்த்துக்கொண்டேன். அந்தப் பாடமானது உலகளாவிய வணிகப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குக் கணக்கியலை உபயோகிக்கும் விஞ்ஞானமாகும்.

sussex

நான் என்னுடைய சக மாணவர்களோடு இணைந்து செயற்படுவதிலும் வாழ்வதிலிலும் பல்கலைக்கழகத்திற்கே முன்னுதாரணமாக இருந்தேன். அந்தப் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த மாணவர்கள் வெவ்வேறு இனங்களையும் தேசங்களையும் சேர்ந்தவர்கள். பெருந்தொகையான இலங்கை மாணவர்களும் அங்கிருந்தார்கள். அவர்களும் என்னைப் போன்ற குடும்பப் பின்னணியைக் கொண்டவர்களே. அவர்களில் சிலர் இன்று வரை எனது நண்பர்களாக இருக்கிறார்கள். விடுதிப் பாடசாலைகளைப் போன்று மணி ஒலித்தால் இயங்க வேண்டிய அவசியம் இங்கிருக்கவில்லை. விருப்பம் போலத் தூங்கிவிட்டு, விரிவுரைகள் நடக்கும் நேரத்திற்குச் சற்றுமுன் தான் படுக்கையிலிருந்து எழுவேன். என்னுடைய மாலை நேரத்தின் பெரும் பகுதியை உடற்பயிற்சிக் கூடத்திலும் விளையாட்டுக்களிலும் கழித்தேன்.

பட்மின்டன், ஸ்குவாஷ், டென்னிஸ் ஆகியவையும் எனக்கு விருப்பமான விளையாட்டுகளானாலும், டேபிள் டென்னிஸ் விளையாட்டிலேயே நான் அதிக நேரத்தைச் செலவழித்தேன். குறிப்பாக, அந்த விளையாட்டின் ஒற்றையர் ஆட்டத்திற்குப் பரம விசிறியாக இருந்தேன். பல்கலைக்கழகத்தின் டேபிள் டென்னிஸ் அணியிலும் சீக்கிரமே இடம் பிடித்தேன். நான்கு வீரர்களைக்கொண்ட எமது அணி பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடக்கும் சுற்றுப்போட்டிகளில் எப்போதுமே ‘சம்பியன்’ பட்டத்தை வென்றது.

பல்கலைக்கழக வளாகத்தைச் சூழ ஏழெட்டு மதுச்சாலைகள் இருந்தன. மாலை மயங்கியதும் நாங்கள் மதுச்சாலை ஒன்றுக்குள் நுழைவோம். அங்கே மணிக்கணக்காக உட்கார்ந்திருந்து பல்கலைக்கழக நடப்புகள், அரசியல், விளையாட்டு, உலக நடப்புகள் போன்றவற்றைப் பற்றிக் கலந்துரையாடுவோம். ஆழமான தத்துவங்களில் தொடங்கி கேலி, கிண்டல் வரை வானத்திற்குக் கீழிருந்த எல்லாவற்றைப் பற்றியும் பேசித் தீர்த்தோம். சில சமயங்களில் அதையும் தாண்டிச் சென்றோம்.

1970 களின் பிற்பகுதியில் இங்கிலாந்தில், விவாதங்களிலும் கலந்துரையாடல்களிலும் சில விடயங்கள் முக்கிய இடத்தைப் பெற்றன. சமபாலுறவாளர்களின் உரிமைகளுக்காகப் போராடிய இயக்கங்கள் வளர்ச்சிப்போக்கில் இருந்தன. அதேபோன்று, தென்னாபிரிக்காவின் இன ஒதுக்கல் கொள்கைக்குக் கடுமையான சவால்கள் எழுந்துகொண்டிருந்தன. வியாழன், வெள்ளி இரவுகளில் நான் வளாகத்தின் இசை நடன அரங்காகிய ‘கிரிப்ட்’ மண்டபத்தில் தவறாமல் இருப்பேன். இசையும் நடனமும் இதயங்களை இணைக்கும் பட்டு நூல்களாக இருந்தன. நாங்கள் காதல் வயப்பட்டோம், காதலில் வெற்றி பெற்றோம், காதலில் தோல்வியுற்றோம். நான் பரவசத்தின் உச்சத்தில் இருந்தேன்.

சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் சுதந்திரமும் மகிழ்ச்சியும் இருந்த போதிலும், இங்கிலாந்தில் நான் இனவெறியையும் எதிர்கொள்ள நேரிட்டது. 1970 களில் இங்கிலாந்து கடினமான காலத்திற்கூடாகச் சென்றுகொண்டிருந்தது. சம்பள உயர்வின்மை, பாரிய வேலையின்மை நெருக்கடி போன்றவற்றால் நாடு தத்தளித்தது. தெற்காசியாவிலிருந்து வந்த குடியேற்றத் தொழிலாளர்களே இந்த நிலைமைக்குக் காரணம் என்று கணிசமான ஆங்கிலேயத் தொழிலாளர்கள் கருதினர். இந்த அதிருப்தி உணர்ச்சியைத் தீவிர வலதுசாரிகளான தேசிய முன்னணிக் கட்சியினர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார்கள். அவர்கள் மேடைகள் தோறும் “தெற்காசியர்கள் இங்கிலாந்திலிருந்து வெளியேற்றப்படல் வேண்டும்” என்று கூச்சலிட்டார்கள். நவீன நாஸி மொட்டைத் தலையர்களின் குழுக்கள் தெருக்களில் கட்டற்றுத் திரிந்து, தெற்காசிய மக்களைப் பயமுறுத்தியும் தாக்கியும் அட்டகாசம் செய்தன.

நான் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவனாக இருந்தபோது, இலண்டன் நகரத்தில் வாழ்ந்துகொண்டிருந்த எனது மாமாவைச் சந்திக்கச் சென்றேன். புலம்பெயர்ந்த மக்கள் அதிகமாக வசித்த பகுதியில்தான் மாமாவின் தங்குமிடம் இருந்தது. நானும் மாமாவும் தெருவில் நடந்து சென்றபோது, நிற வெறியர்களான ஒரு மொட்டையர் குழுவினால் பலாத்காரமாக வீதியிலிருந்து தள்ளி விடப்பட்டோம்.

நாங்களும் விட்டுக்கொடுக்கவில்லை. மொட்டையர் குழுவைக் கடுமையாகத் திருப்பித் தாக்கினோம். ஆனாலும், அவர்களுடைய தொகை அதிகமாக இருந்ததால், அதிகமாக அடிகளைப் பெற்றுக் கொண்டோம். அந்தத் தெருவில் வசித்த பாகிஸ்தானியர்களும் கடை நடத்திக்கொண்டிருந்த இந்தியர்களும் எமக்கு உதவி செய்ய விரைந்து வந்தபோது, மொட்டையர்கள் ஓடிவிட்டார்கள். இந்த மொட்டையர் கும்பல் அடிக்கடிவந்து தம்மைத் துன்புறுத்துவதாகவும் தமது கடைகளிலிருந்து திருடுவதாகவும் இந்தியக் கடைக்காரர் ஒருவர் சொன்னார்.

நான் இலங்கையில் சிறுவனாக இருந்தபோது, என்னிலும் சில வயதுகள் அதிகமான ஒருவன் எங்களது தெருவால் போய்வரும் சிறார்களை இரக்கமேயின்றி அடித்துதைத்துத் தொந்தரவு செய்வான். ஒருநாள் அவன் என்னை அடிக்க வந்தபோது, நான் எனது காற்சட்டைப் பைக்குள் தயாராக வைத்திருந்த மிளகாய்த்தூளை எடுத்து அவனுடைய கண்களில் விட்டெறிந்து, அவனை அழப் பண்ணினேன். அந்த எரிச்சலான சம்பவத்திற்குப் பிறகு அவன் சிறார்களோடு சேட்டை செய்வதை நிறுத்திவிட்டான். பல வருடங்களுக்குப் பின்னர், இலண்டனில் எனது காற்சட்டைப் பைக்குள் மிளகாய்த்தூளை மொட்டையர் குழுவிடமிருந்து என்னைப் பாதுகாப்பதற்காகக் கொண்டு செல்லத் தொடங்கினேன். எனினும், அதனை உபயோகிக்க வேண்டிய சூழல் ஒரு போதும் ஏற்படவில்லை. ஆலோசனையைப் பின்பற்றி வருகின்றேன்.

1980 இல் நான் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான போது, இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் ஏற்படும் அறிகுறிகள் காணப்பட்டன. இலங்கைக்கு திரும்புவதும், அங்கு பொறியியலாளராகப் பணியாற்றுவதும் எனது திட்டங்கள் அல்ல. எனக்கு வணிகத்தில் ஆர்வமிருந்தது. அமெரிக்காவில் எம்.பி.ஏ படிப்பதற்காக விண்ணப்பித்தேன். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ‘வோற்ரன் வணிக மேலாண்மைப் பள்ளி’யில் எம்.பி.ஏ. படிப்பதற்கு இருக்கை கிடைத்தது.

வோற்ரன் பள்ளியில் நான் படித்த காலத்தை எனது பொற்காலம் என்றே சொல்லலாம். அங்கிருந்த பேராசிரியர்கள் மிகச் சிறந்தவர்கள். அதிபுத்திசாலிகளான மாணவர்கள் வெவ்வேறு சுவாரஸ்யமான பின்னணிகளில் இருந்து வந்தவர்கள். பாடத் திட்டம் சவால் விடுவதாகவும், எனக்கு மிகவும் பிடித்ததாகவுமிருந்தது. பள்ளியில் மிகச் சிறந்த மாணவனாக இருந்தேன். எனக்கு நிதியியலில் பேரார்வம் ஏற்பட்டது. குறிப்பாக, சர்வதேச நிதி முதலீடுகள் குறித்துக் கற்பதில் எனக்குப் பெரும் காதலே ஏற்பட்டது. எனது ஆர்வத்திற்குரிய துறை எதுவென்று கண்டு கொண்டேன். சசெக்ஸ் பல்கலைக்கழகத்தைப் போலன்றி, இங்கே மாணவர்கள் படிப்பில் தீவிரமான சிரத்தையுடன் இருந்தார்கள். பள்ளியில் நான் உற்சாகத்துடன் முன்னேறிச் சென்றேன்.

வோற்ரன் பள்ளியில் என்னோடு பயின்றவர்களில், முப்பதிற்கும் அதிகமான சகாக்களுடன் நான் ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக நெருங்கிய தொடர்பைப் பேணிவந்தேன். கலியன் நிறுவனத்தை நான் ஆரம்பித்தபோது, நம்பத்தகுந்த நிர்வாகி ஒருவரைத் தேடினேன். வோற்ரன் பள்ளியில் எனது உடன் மாணவராக இருந்த ஒருவரை அந்தப் பதவியில் இருத்தினேன். அவரைத் தவிர, என்னுடைய உடன் மாணவர்கள் மூவரை கலியனில் பதவிகளில் அமர்த்தினேன். இவர்கள் முதுநிலை நிதி மேலாளர்களாகப் பணியாற்றினார்கள். எனது வோற்ரன் பள்ளிச் சகாக்கள் தலைமை தாங்கிய இரண்டு நிதி நிறுவனங்களைத் தொடக்குவதற்கும் முதலீடு செய்துள்ளேன். வேறுசில வோற்ரன் பள்ளிச் சகாக்களின் ‘ரியல் எஸ்டேட்’ முதலீட்டு நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளேன். வோற்ரன் பள்ளித் தொடர்புகள் எனக்கு மிகவும் முக்கியமானவையாகும்.

1983 ஆம் ஆண்டு, மே மாதத்தில் நான் எம்.பி.ஏ பட்டதாரியானேன். சேஸ் மான்ஹட்டன் வங்கியில் எனக்கு ஊதியத்துடன் கூடிய ஒன்பது மாதப் பயிற்சிக்குப் பின்னான முழுநேர வேலை என்பது உறுதியாகியிருந்தது. அந்த வருடத்தின் இலையுதிர்க் காலத்தில் பயிற்சி தொடங்கவிருந்தது. இடையிலிருந்த நீண்ட கோடை விடுமுறையில் இலங்கைக்குத் திரும்பினேன்.

ஜூலை மாதத்தில் இலங்கையில் நிகழ்ந்தேறிய இனரீதியான வன்செயல்கள் மிகக் கொடூரமானவையாக இருந்தன. அப்போது, நான் கொழும்பில் எனது மாமாவின் வீட்டில் தங்கியிருந்தேன். சிங்கள இனவெறி பிடித்த காடையர் கூட்டங்கள் தமிழர்களின் வீடுகளைத் தேடிச் சென்று தாக்குவதிலும் கொல்வதிலும் கொள்ளையடிப்பதிலும் எரிப்பதிலும் வெறியோடு ஈடுபட்டிருந்தன. எனது மாமியும் மச்சாள்களும் எமது அயலில் வாழ்ந்துவந்த சிங்களக் குடும்பமொன்றின் வீட்டில் தஞ்சமடைந்து ஒளிந்துகொண்டார்கள். நானும் எனது மாமாவும் என்னுடைய வயதையொத்த மைத்துனர்களும் ஒளிந்து கொள்வதற்கு மறைவிடம் தேடாமல், எது வந்தாலும் சந்தித்துவிடுவது என்ற உறுதியுடன், எங்களது வீட்டைப் பாதுகாப்பதற்காகக் கத்திகளுடனும் தடிகளுடனும் வீட்டில் தயாராகக் காத்திருந்தோம். அந்த வீதியில் இருந்த பல தமிழர்களுடைய வீடுகளைக் காடையர் கும்பல் தாக்கியபோதும், எங்களது வீட்டுக்கு அந்தக் காடையர் கும்பல் வரவேயில்லை. அந்த மாதத்தில் நிகழ்ந்த இன வன்செயல்களில் இரண்டாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்தக் கொடுமையான நிகழ்வே நாட்டில் முனைப்புடன் போர் தொடங்குவதற்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.

ஜூலை மாதத்தின் இறுதியில் நான் இலங்கையிலிருந்து வெளியேறினேன். எனது சொந்த நாட்டிலேயே எனக்குப் பாதுகாப்பு இல்லை என்பதைக் கண்களால் கண்டு, தெளிவாக உணர்ந்துகொண்டேன். நான் அமெரிக்காவிற்குத் திரும்பியதும் குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன். அடுத்த பத்து வருடங்கள் நான் இலங்கைக்குப் போகவேயில்லை. எனது பிள்ளைப்பருவ வாழ்க்கையை இனிமையாக்கிய இலங்கைத் தீவின் மீது நான் கொண்ட பற்றும் பாசமும் எப்போதுமே என்னோடு இருக்கும். ஆனால், எனது தாய்நாட்டிலேயே எனக்குப் பாதுகாப்பு இல்லாதிருந்தபோது, அமெரிக்காவே என்னை இருகரம் நீட்டி வரவேற்றது. எனது எஞ்சிய வாழ்க்கையை நியூயோர்க்கில் வாழ்வதற்குத் தீர்மானித்தேன். இதற்காக நான் அமெரிக்காவுக்கு மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன். அதேவேளையில், நான் அமெரிக்காவில் எப்போதுமே ஓர் அந்நியன்தான் என்பதையும் என்னுடைய உள்மனதால் உணர்ந்திருக்கிறேன். நியூயோர்க் மாநகரம் தன்னிடம் வந்த குடியேறிகளுக்கு ஆண்டாண்டு காலமாகவே வழங்கி வந்த சுதந்திரத்தை எனக்கும் வழங்கியது. நான் நியூயோர்கில் வெறும் கைகளுடன் எனது வாழ்க்கையைத் தொடங்கினேன். கடுமையான உழைப்பு, எக்காலத்திலும் சோர்வின்மை, பாதைகளிலே வரும் தடைகளைத்தாண்டி முன் செல்லல் என்பதுவே எனது வாழ்க்கைத் தத்துவமாகும். நியூயோர்க் நகரம் எனது ஆற்றலுக்கும் கடின உழைப்பிற்கும் ஏற்ற களமாக இருந்தது. எல்லையற்ற பாதைகள் என் முன்னே திறந்திருந்தன. எனது தாயகமான இலங்கையில் புரையோடிக் கிடக்கும் இன ரீதியான அரசியல் முரண்பாடுகளின் மீது எனக்குக் கடுமையான அதிருப்தி இருந்தாலும், நான் இலங்கை மீது பற்றுக் கொண்டுள்ளேன். இலங்கையின் இன, மத முரண்கள் மற்றும் அவை எவ்வாறு ஒவ்வொரு தலைமுறையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது பற்றியெல்லாம் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுவிட்டன. இவற்றைக் குறித்து நான் ஒரேயொரு கருத்தை மட்டும் கூற விரும்புகின்றேன். இனரீதியான அரசியலும், மதரீதியான அரசியலும் மக்களிடையே இரண்டு சக்திகளினால் தூண்டிவிடப்படுகின்றன. ஒன்று அறியாமை, மற்றையது வறுமை.

பல வருடங்களாகவே நான் இலங்கையில் ஆதரவற்றோர் பாடசாலைகளுக்கும், மருத்துவத்துறை வளர்ச்சிக்கும் நிதி வழங்கி ஆதரவளித்து வருகிறேன். அவற்றில் எனக்குக் கிடைத்த இரண்டு முக்கியமான அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒருமுறை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு கிராமத்திற்கு நான் சென்றிருந்தேன். அங்கே, ஒற்றைக் கால் மட்டுமேயுள்ள குழந்தைகள் கூடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். கண்ணி வெடிகள் பொதுமக்கள் மீது எவ்வளவு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை அங்கே நேரடியாகவே பார்த்தேன். குழந்தைகள் நடமாடுவதற்கும் விளையாடுவதற்கும் பாதுகாப்பான இடமென எதுவுமே இல்லை. யுத்தம் நடந்த பகுதிகளில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளைக் கண்டுபிடிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து மோப்ப நாய்களை வரவழைப்பதற்கு நான் நிதி வழங்கி ஏற்பாடு செய்தேன். வளர்ச்சி குன்றிய நாடுகளிலிருந்து நான்கு அல்லது ஐந்து மாணவர்கள் அமெரிக்காவுக்கு வந்து படிப்பதற்கு வருடாந்தப் புலமைப்பரிசில்களை உருவாக்கினேன். பல விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன. அவற்றை நன்கு ஆராய்ந்து முதலாவது அணியைத் தேர்வு செய்தபோது, இலங்கையைச் சேர்ந்த சிங்கள மாணவரொருவரும் தேர்வானார். புலமைப்பரிசிலை வழங்குவதற்கு அந்த மாணவரின் இனம் எனக்கு ஒரு தடையாகவே இருக்கவில்லை. அவர் அமெரிக்காவுக்கு வந்து, வோற்ரன் பள்ளியில் எம்.பி.ஏ படித்தார். உள்ளகப் பயிற்சியை கலியனில் மேற்கொண்டார். இலங்கையின் மூவினங்களையும் சேர்ந்த இருபத்தைந்து மாணவர்கள் கலியனில் தங்களது உள்ளகப் பயிற்சியைப் பெற்றுள்ளார்கள். இந்தப் புலமைப் பரிசில் திட்டம் இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளார்கள்.

2004 ஆம் ஆண்டு, இலங்கையின் தென்பகுதியில் எனது குடும்பத்துடன் விடுமுறையைக் கழித்துக்கொண்டிருந்தேன். அப்போது, சுனாமி நிலத்தை விழுங்கி நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மனிதர்களையும் சொத்துக்களையும் வீடுகளையும் அழித்தது. இந்தப் பேரழிவை நான் எனது கண்களால் கண்டேன். என்னுடைய மனம் பேதலித்துக் கலங்கிவிட்டது. கலியன் நிறுவனத்தை மூடிவிட்டு, இலங்கையில் ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து, சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் புனர்வாழ்வுக்கான நடவடிக்கைகளில் ஈடுபடத் திட்டமிட்டேன். ஆனாலும், எனது குடும்பத்தாரதும் நண்பர்களதும் ஆலோசனை வேறு விதமாக இருந்தது. தொடர்ச்சியாகச் சம்பாதித்துக் கொண்டிருந்தால் மட்டுமே தொடர்ச்சியாகத் தொண்டு செய்ய முடியும் என்று அவர்கள் அறிவுறுத்தியதை ஏற்றுக்கொண்டேன். சுனாமியால் வீடுகளை இழந்து நின்றிருந்த மீனவர்களிடையே இன, மத பேதம் பார்க்காமல் அவர்களுடைய வீடுகளை மீளவும் கட்டிக் கொடுத்தேன். இன்றுவரை நான் இலங்கையில் சுதேசியாகவும் அதேவேளையில் அந்நியனாகவும் இருநிலைகளில் இருப்பதாக உணர்கின்றேன். ஒவ்வொருமுறையும் விமானம் இலங்கையில் இறங்குவதற்காகத் தாழப் பதியும்போது, நான் பிறந்த மண்ணை விமானத்தின் ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொள்வேன். என்னுடைய மனதில் உணர்ச்சியலைகள் கொந்தளிக்கத் தொடங்கிவிடும். போர் உக்கிரமாக நடைபெற்ற காலத்தில் நான் இலங்கையில் வாழவில்லை. என்னுடைய நாட்டு மக்கள் எத்தகைய இன்னல்களை அனுபவித்தார்கள் என்பது பற்றி எனக்கு நேரடியான அனுபவமோ விளக்கமோ இல்லை. இது என்னை ஓரளவு அந்நியனாக மாற்றியுள்ளது. பிள்ளைப் பருவத்தில் நான் கண்ட இலங்கை என் மனதில் இனிய நினைவாகவும் கனவாகவும் தேங்கிக் கிடக்கிறது.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

9711 பார்வைகள்

About the Author

ராஜ் ராஜரட்ணம்

திரு ராஜ் ராஜரட்ணம் அவர்கள் 1957 இல் கொழும்பில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கொள்ளுப்பிட்டி புனித தோமையர் கல்லூரியில் கற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று பள்ளிப் படிப்பை நிறைவுசெய்து சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றார். 1983 இல் பென்சில்வேனியா உவார்ட்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். ராஜ் ராஜரட்ணம் தனது பணியை முதன்முதலில் சேஸ் மான்ஹட்டன் வங்கியில் கடன் வழங்கும் அதிகாரியாகத் தொடங்கினார். 1985 இல் நியூயோர்க்கின் நீடம் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1987 இல் அந்நிறுவனத்தின் ஆய்வுப் பகுதியின் தலைவராகவும், மார்ச் 1991 இல் அந்நிறுவனத்தின் தலைவராகவும் ஆனார்.

1997 இல் தனது சொந்த நிறுவனமான கலியன் முதலீட்டு நிதியத்தை ஆரம்பித்தார். இந்நிதியத்தைப் பின்னர் அவர் கலியன் குழுமம் எனப் பெயர் மாற்றினார். இது உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றாக மாறியது. ஒரு காலகட்டத்தில் கலியன் குழுமம் 180 பணியாளர்களுடன் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிருவகித்தது.

2009 இல் அமெரிக்கப் புலனாய்வுப் பணியகம் ராஜ் ராஜரட்ணத்தைத் திட்டமிட்டுக் கைது செய்தது. உட்தகவல்களைப் பெற்று வர்த்தகம் செய்ததாகவும் 0.01 சதவீதம் குற்றமிழைத்ததாவும் அவர் மீது பொய்க்குற்றச் சாட்டுக்களை முன்வைத்தது. குற்றத்தைப் ஒப்புக்கொள்ளுமாறு அவர்மீது பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகித்தது. தான் நிரபராதி என்பதில் உறுதியாக நின்ற ராஜ் ராஜரட்ணம் அமெரிக்க நீதித்துறையில் உள்ள பேராசை பிடித்த சில தனிபர்களின் சதிகளாலும் பொய்ச்சாட்சிகளாலும் வஞ்சிக்கப்பட்டார். 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற ராஜ் ராஜரட்ணம் அவர்கள் 7 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து ராஜ் எழுதிய நூல் Uneven Justice என்ற பெயரில் 2021 இல் வெளிவந்தது. இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு 2024 இல் யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண போதனா மருத்துவமனை மன்றத்தால் வெளியிடப்பட்டது. ராஜ் ராஜரட்ணம் தற்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் மீள்கட்டுமானப் பணிகளுக்கு பல்வேறு வழிகளில் உதவி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)