Arts
26 நிமிட வாசிப்பு

கறுப்பு அன்னம்

February 28, 2024 | Ezhuna

ராஜ் ராஜரட்ணம், சட்டத்துக்கு முரணாக ‘உட்தகவல் வணிகம்’ (Inside Trading) செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அமெரிக்கப் புலனாய்வுப் பணியகத்தால் 2009 ஒக்டோபரில் கைது செய்யப்பட்டார். அக் குற்றச்சாட்டுப் பொய்யானது என வாதாடியும், நீதிமன்றம் அவருக்கு 11 வருடங்கள் சிறைத்தண்டனையும் அமெரிக்க வரலாற்றிலே உச்சபட்சமான அபராதத் தொகையும் விதித்தது. ராஜ் ராஜரட்ணம் தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார்; தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக் கெதிராகப் பேச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். இந் நிலையில், சிறையிலிருந்தவாறே அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூலே ‘Uneven Justice’. இந்நூல் அமெரிக்க நீதித்துறை மீதும், நீதிபதிகள்  மீதும், அமெரிக்க வழக்குரைஞர் நாயகத்தின் மீதும், எப்.பி.ஐ. மீதும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இந்நூல் அண்மையில் ஓய்வுநிலைப் பேராயர் பேரருட்கலாநிதி எஸ். ஜெபநேசன், முனைவர் சோ. பத்மநாதன் (சோ.ப) ஆகியோரால் ‘சமனற்ற நீதி’ எனும் பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு, ‘யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மன்றத்தினால்’ வெளியிடப்பட்டது. தமிழ் வாசகர்கள் அறியும் நோக்கில் இந் நூல் ‘சமனற்ற நீதி ‘ எனும் பெயரிலேயே எழுநாவில் தொடராக வெளிவருகிறது.

 

தமிழில் : ஓய்வுநிலைப் பேராயர் பேரருட்கலாநிதி எஸ். ஜெபநேசன்,
முனைவர் சோ. பத்மநாதன் (சோ.ப)

எல்லாவற்றையும் மாற்றிய அந்த நாள் 16.10.2009 வெள்ளிக் கிழமை. அன்றைய நாளிலும் வழமை போலவே, அதிகாலை ஐந்தரை மணிக்கு நித்திரைவிட்டு எழுந்தேன். வெளியே கலையாதிருந்த இருளின்மீது மழை தூறிக் கொண்டிருந்தது. கிழக்கு நதியின் மீதாகப் படர்ந்திருந்த புகார் மூட்டத்தை ஊடுருவிக்கொண்டு மேல் நோக்கி வந்த வேகமான காற்று என்னுடைய வீட்டின் அமைதியைக் கலைக்காமல் மூடப்பட்டிருந்த சாளரங்களில் மோதித் திரும்பியது. எல்லாமே சரியாகவும் இதமாகவும் இருப்பதான உணர்வு என்னில் தொற்றிக் கொண்டது. இத்தகைய மந்தாரம் சூழ்ந்த காலைப் பொழுதில் தனிமையில் இருப்பது எப்போதுமே எனக்குப் பிடித்த விடயம்.

என்னுடைய வீடு நியூயோர்க் நகரத்தின் கிழக்கு நதிக்கரையில் அமைந்திருந்த பிரமாண்டமான அடுக்குமாடிக் குடியிருப்பின் பத்தொன்பதாவது தளத்தில் இருந்தது. படுக்கையறைகளுக்குள் எனது மனைவியும் பிள்ளைகளும் இன்னும் உறக்கத்திலிருந்தார்கள். முதியவர்களான எனது பெற்றோரும் இதே தளத்தில் எனது பக்கத்து வீட்டில் வசித்தார்கள். அவர்கள் கூப்பிட்ட குரலுக்கு நான் ஓடிச் செல்லக்கூடியதாக, அவர்கள் எனக்கு அருகிலேயே வசிப்பது எனக்குப் பெரும் நிம்மதியைக் கொடுத்தது.

நான் சூடாகக் கோப்பி தயாரித்து எடுத்துக்கொண்டு, என்னுடைய கணினியின் முன்னே அமர்ந்து கொண்டேன். நான் நடத்திவந்த கலியன் குழுமத்தின், முதலீட்டு நிதியத் தொழில் சார்ந்து பங்குச் சந்தை ஆய்வாளர்களிடமிருந்தும் தரகர்களிடமிருந்தும் வந்திருந்த மின்னஞ்சல்களைப் படித்து, என்னுடைய தீர்மானங்களையும் பதில்களையும் ஆறேகால் மணியளவில் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். என்னுடைய பரபரப்பான வேலை நாளைத் தொடங்குவதற்கு முன்னதாகச் சற்றுத் தனிமை எனக்குத் தேவைப்படும். உடற்பயிற்சி செய்யும் சைக்கிளின் மீது ஏறிக்கொண்டேன். நாற்பத்தைந்து நிமிட உடற்பயிற்சி எனது இலக்கு. சைக்கிளை மிதித்தவாறே, ஒலி அமுக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியின் மீது கண்களை எறிந்தேன். சென்ற வருடம் நிகழ்ந்த பங்குச் சந்தை வீழ்ச்சி, புதிய ஜனாதிபதி பராக் ஒபாமா, ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் நடக்கும் யுத்தம், குவான்டனமோ சிறை என வழமையான காட்சிகள் கடந்து கொண்டிருந்தன.

அன்றைய நாள் ஏராளமான வேலைகளால் நிறைந்திருந்தது. சென்ற வாரம் என்னுடைய மகன் பதின்ம வயதை எட்டியிருந்ததால், இன்றைய மாலைநேரத்தில் “கேக்” வெட்டிக் கொண்டாடுவதற்குத் தீர்மானித்திருந்தோம். அதன் பின்பு, மகன் தன்னுடைய நண்பர்களோடு மடிசன் ஸ்கொயார் உள்ளரங்கில் கூடைப்பந்துப் போட்டியைப் பார்க்கச் செல்லவிருக்கிறான். நானும் எனது மனைவி ஆஷா பப்லாவும் இலண்டனுக்குச் செல்லும் கடைசி விமானத்தைப் பிடிப்பதற்காக “ஜே.எப்.கே” விமான நிலையத்திற்கு விரைய வேண்டும். நாங்கள் ஐரோப்பாவில் ஒரு வார காலப் பயணத்தைத் திட்டமிட்டிருந்தோம். 17 ஆம் தேதி, சனிக்கிழமை, இலண்டனில் “ருடேஸ் ஸ்பெசல்” என்ற திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்க்க எண்ணியிருந்தேன். தெற்காசியக் குடியேறி ஒருவர் நியூயோர்க் நகரத்தில், சமையல் கலைஞனாக உருவாகும் கனவுகளோடு வாழ்வதைச் சித்திரிக்கும் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்க நான் நிதியுதவி செய்திருந்தேன்.

திங்கட்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மிகுந்த ஆவலுடன் காத்திருந்தேன். எனது நீண்ட காலக் கனவொன்றைப் பற்றி அங்கே உரையாடவிருந்தேன். இலங்கையில் ஒரு முதலீட்டு நிதியத்தைக் கட்டியெழுப்புவதே அந்தக் கனவாகும். முப்பது வருடங்களாக, போர்ச் சூழல் காரணமாகச் சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கையின் முதலீட்டுச் சந்தைகளைப் பெருமளவு தவிர்த்தே வந்தனர். போர் முடிவுக்கு வந்திருப்பதால், சர்வதேச முதலீடுகளுக்குச் சாதகமான நிலைமைகள் இலங்கையில் உருவாகியிருந்தன.

செவ்வாய்க் கிழமையன்று நாங்கள் ஜெனீவாவுக்குச் செல்லவிருந்தோம். அங்கே என்னுடைய கலியன் முதலீட்டு நிதியத்தின் சுவிஸ் முதலீட்டாளர்களைச் சந்திப்பதற்கு ஏற்பாடாகி விருந்தது. அன்றைய தினம் எனது மனைவியின் ஐம்பதாவது பிறந்த நாளாகவுமிருந்தது. என்னுடைய மனைவி ஜெனீவா ஏரியில், ஒரு படகில் அமைதியான இரவுணவுடன் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட விரும்பினார். இருபத்து மூன்று வருடங்களுக்கு முன்னதாக, அந்த ஏரியின் நடுவேதான் ஆஷாவைத் திருமணம் செய்துகொள்வதற்கான விருப்பத்தை அவரிடம் தெரிவித்திருந்தேன். அந்த அற்புதத் தருணத்தைக் குறித்த நினைவுகளில் மூழ்கியவாறே, நான் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, என்னுடைய வீட்டுக் கதவை யாரோ முரட்டுத்தனமாக இடிக்கும் சத்தம் கேட்டது. நான் சற்றுத் திடுக்கிட்டவனாக உடற்பயிற்சியை நிறுத்திக் கொண்டேன். எனது மனைவி இரவு ஆடையுடனேயே என்னை நோக்கிப் பதற்றமாக ஓடி வந்தார். நான் கதவுக்கு அருகே சென்று “யார் கதவை இடிப்பது?” என்று உரத்த குரலில் கேட்டேன்.

“எப்.பி.ஐ! கதவைத் திறவுங்கள்” என்று கடுமையான குரலில் பதில் வந்தது. நான் உடனடியாகக் கதவைத் திறந்தேன். புலன் விசாரணைக் கூட்டாட்சிப் பணியகத்தின் ஓர் அதிகாரி வீட்டுக்குள் பாய்ந்து வந்தார். அவருக்குப் பின்னே மேலும் ஐந்து அதிகாரிகள் உள்ளே நுழைந்து, வீட்டு வாசலின் குறுக்காக வரிசையாக நின்றுகொண்டார்கள். முன்னே வந்த அதிகாரி “நீர் தானே ராஜ் ராஜரட்ணம்?” என்று இறுமாப்பாக அதிகாரக் குரலில் கேட்டார். நான் நிதானமாக “ஆம்” என்றேன்.

“பி.ஜே. காங்” என்ற பெயருடைய அந்த அதிகாரி வன்மம் கொப்பளிக்கும் தொனியில் “நீர் கைது செய்யப்படுகிறீர்” என்றார். என்ன நடக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை.

இது ஏதும் அதிகாலைக் கனவா? “எதற்காகக் கைது?” என்று நான் கேட்டேன்.

“சொல்கிறேன்; அதற்கு முன்பாக நானொன்று கேட்கிறேன். உம்மிடம் துப்பாக்கியோ, போதைப் பொருட்களோ உள்ளனவா?” என்று எனது கண்களை உற்றுப் பார்த்தவாறே அதிகாரி காங் கேட்டார்.

“இல்லை… நீங்கள் தவறான முகவரிக்கு வந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.”

“எல்லாம் சரியான முகவரிதான். உம்முடைய உடைகளை மாற்றிக்கொண்டு எங்களுடன் வாரும்” என்று உரக்கக் கூச்சலிட்டார் காங்.

நான் படுக்கையறைக்குள் சென்று, எனது உடற்பயிற்சி ஆடைகளைக் களைந்துவிட்டு பொருத்தமான உடைகளை அணிந்து கொண்டே, என்னுடைய மனைவியிடம் “கலியன் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு எனக்கு ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்யுமாறு சொல்லுங்கள்” என்றேன். முக்கியமாக “எந்த விமானப் பயணங்களையும் இரத்து செய்ய வேண்டாம்” என்றும் என்னுடைய மனைவியிடம் கூறினேன். ஏனெனில், நிச்சயமாக ஏதோ ஒரு குழப்பம் நிகழ்ந்திருக்கிறது என்றே நான் மிக உறுதியாக நம்பினேன். “எப்.பி.ஐ தவறுதலாக என்னைக் கைது செய்கிறார்கள். சற்று நேரத்திலேயே நான் விடுதலையாகி, வழமை போலவே அலுவல்களைக் கவனிக்கத் தொடங்கிவிடுவேன்” என்று சொல்லியவறே ஆஷாவைக் கட்டியணைத்து அவருக்குத் தைரியமும் ஆறுதலும் சொன்னேன். ஆஷா புரிந்து கொண்டு ஓரளவு சமாதானமானார். ஆனால், என்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் நான் எவ்வாறு தைரியம் சொல்வேன்? அவர்களது படுக்கையறையை நான் பார்த்த போது, அவர்கள் மிரட்சியுடன் தங்களுடைய போர்வைகளுக்குள் மறைந்திருந்து, கண்களில் நீர் முட்ட ஏக்கத்துடன் என்னைப் பார்த்தார்கள். எப்.பி.ஐ அதிகாரியின் உரத்த கூச்சலால் அவர்கள் அச்சமுற்றிருந்தார்கள். நான் அதிகாரிகளோடு கிளம்பும் போது, குழந்தைகள் என்னருகே வந்து ஏங்கிய கண்களோடு நின்றிருந்தார்கள். உண்மையில், அப்போது நான் எனது குழந்தைகளைக் குறித்தே கடும் துயருற்றேன்.

எனது குழந்தைகளின் அஞ்சிய முகங்களும் ஏங்கிய கண்களும் என்னுடைய நெஞ்சில் எப்போதும் அழியாமல் ஆணியாகத் தைத்திருக்கின்றன. இதை எழுதும்போதே அந்தக் காட்சி எனது மனதில் தோன்றி, கைகள் நடுக்கமெடுக்கின்றன. அச்சமுற்றிருந்த குழந்தைகளை மேலும் கலங்கடிப்பது போன்று அதிகாரி காங் என்னைப் பார்த்து “உம்முடைய கைகளை நீட்டும்” என அதிகார மமதையோடு சீறினார். கருநீல நிறத்தில் மேலங்கிகளை அணிந்திருந்த எப்.பி.ஐ அதிகாரிகள் இருளைப் போன்று என் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள். எனது குழந்தைகளின் கண்களுக்கு முன்னாலேயே எனக்குக் கைவிலங்கு மாட்டப்பட்டது.

என்னை அழைத்துச் செல்லும்போது, “உம்முடைய மகனை ஒரு முறை நன்றாகப் பார்த்துக்கொள்ளும்; இனி இருபது வருடங்களுக்கு நீர் அவனைப் பார்க்கப் போவதில்லை” என்று அதிகாரி காங் சொன்னார். பின்பு, எனது மனைவியின் மீது அவர் பார்வையை ஓட்டிவிட்டு “உம்முடைய மனைவி ஒன்றும் அவ்வளவாகக் கவலைப்படுவதாகத் தெரியவில்லையே… நீர் சேர்த்து வைத்திருக்கும் பணத்தையெல்லாம் எவ்வாறு ஆடம்பரமாகச் செலவு செய்வது என்ற சிந்தனையில் அவர் ஆழ்ந்திருக்கிறார் என நினைக்கிறேன்” என்று என்னிடம் சொன்னார். அமெரிக்கப் புலனாய்வுத்துறையின் பொறுப்பு மிக்க உயரதிகாரி இப்படி “ஜேம்ஸ் பொண்ட்” திரைப்பட வில்லனைப் போலக் குரூர நகைச்சுவை செய்வதைப் பார்த்து நான் திகைத்துப் போனேன். எனக்குச் சினம் உச்சிக்கு ஏறியது. ஆனால், அதிகாரியை முறைத்துப் பார்ப்பதைத் தவிர என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த இழிசெயலுக்காக அதிகாரி காங்கை நீதிமன்றத்தில் பதில் சொல்ல வைப்பேன் என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டேன். ஆனால், நீதிமன்றத்தில் என்னுடைய வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தான் இப்படியெல்லாம் சொல்லவில்லை என்று அதிகாரி காங் அப்பட்டமாகப் பொய் சொன்னார். நீதிமன்றமும் அந்தப் பொய்யை ஏற்றுக்கொண்டது.

காங் என்னை மட்டுமே இப்படி மிரட்டவில்லை. எனக்குக் கீழே வேலை செய்த கலியன் நிறுவன நிதி மேலாளர்களையும் பகுப்பாய்வாளர்களையும் எனது தொழிற்துறைச் சகாக்களையும் இவ்வாறே கடுமையாக மிரட்டியதாகப் பின்னால் அறிந்துகொண்டேன். இத்தகைய மிரட்டல்கள் என்னையும் எனது குடும்பத்தையும் எனது ஊழியர்களையும் அச்சுறுத்திப் பணிய வைக்கும் முயற்சியாகும். என்னுடைய வழக்கு நடைபெற்ற காலம் முழுவதுமே இப்படியான அச்சுறுத்தல்களையும் பொய்களையும் எப்.பி.ஐ உருவாக்கியவாறேவிருந்தது. பிரதிவாதிகளையும் சாட்சியங்களையும் இவ்வாறாக மிரட்டிப் பணிய வைக்கும் பாரம்பரியத்தை ஜே. எட்ஜர் ஹூவர் காலத்திலிருந்தே எப்.பி.ஐ. கடைப்பிடித்து வருகிறது.

கறுப்பு நிறத்திலான ஒரு வாகனத்திற்குள் என்னைத் திணித்து, நியூயோர்க்கின் எப்.பி.ஐ அலுவலகத்திற்குக் கொண்டு சென்றார்கள். வழியில் எந்த உரையாடல்களும் நிகழவில்லை. அந்த வாகனம் சகிக்க முடியாத அமைதியால் நிரம்பிவிருந்தது. எனது மூளை குழம்பிப் போயிருந்தது. என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? ஏன் இப்படியொரு அவசரக் கைது? எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

இதைப்பற்றியெல்லாம் எனக்குப் பின்னர்தான் மெல்ல மெல்லப் புரிந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலைக் கைதுகளைக் காவல்துறையினர் மேற்கொள்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. இதுவும் எப்.பி.ஐ யின் அச்சுறுத்தும் தந்திரங்களில் ஒன்று. அதிகாலையில் கைதாகும் நபர் தூக்கக் கலக்கத்துடன் செயலற்றுக் காணப்படுவார். வாரயிறுதி நாட்களில் ஒரு வழக்கறிஞரைத் தொடர்பு கொள்வதும் சிரமம். அந்த இடைவெளிக்குள் கைதியை உருட்டி மிரட்டிக் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தைப் பெற்றுவிடலாம்.

எப்.பி.ஐ அலுவலத்தில், சாளரங்களே இல்லாத ஆனால், ஒளி பிரகாசித்த ஓர் அறைக்குள் நான் தள்ளப்பட்டேன். அங்கே பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசமே தெரியாது. ஒரு மேசையின் முன்னே இருந்த நாற்காலியில் நான் உட்கார வைக்கப்பட்டேன். என்னை இழுத்துவந்த அதிகாரிகள் எனக்கு எதிரே முதுகுகளைச் சுவரில் சாய்த்தவாறே நின்றுகொண்டார்கள். ஏதோவொரு வலுவான மிருகத்தை வேட்டையாடிய வேட்டைக்காரர்களின் உடல்மொழி அவர்களிடமிருந்தது. அதிகாரி காங் எனக்கு முன்னேயிருந்த மேசையில் குற்றப் பத்திரிகையைத் தூக்கிப் போட்டார். நான் “உட்தகவல் வணிகம்” (Insider Trading) செய்தேன் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். நான் சற்றுத் திகைத்துத்தான் போனேன்.

பங்குச் சந்தை வணிகத்தில் “உட்தகவல் வணிகம்” சட்ட விரோதமானது. ஒரு நிறுவனத்தினுடைய பங்குகளின் மதிப்பு ஏறவோ இறங்கவோ இருக்கும் தகவலை, அந்த நிறுவனத்தின் அலுவலர் ஒருவரிடமிருந்து இரகசியமாக அறிந்துகொண்டு, பங்குகளின் ஏற்ற இறக்கங்கள் பகிரங்கமாகச் சந்தையில் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது அல்லது விற்பதே உட்தகவல் வணிகம் எனப்படும். நான் ஒரு போதுமே இந்தச் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டதில்லை. நான் சந்தையில் பங்குகளை வாங்கவும் விற்கவும் எனது கலியன் நிறுவனப் பகுப்பாய்வாளர்களின் நீண்ட, துல்லியமான ஆய்வுகளையே நம்பியிருந்தேன். இரகசியமாகத் துப்புகளைப் பெற்று, அதற்கு இலஞ்சம் கொடுக்கும் வழக்கமெல்லாம் கலியன் நிறுவனத்தில் கிடையவே கிடையாது. நான் நடத்திய அத்தனை வணிகச் செயற்பாடுகளுக்கும் முறையாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இருக்கின்றன.

அதிகாரி காங் முதலில் ஆர்ப்பாட்டமாக ஒரு வேலையைச் செய்தார். பதிவு செய்யப்பட்டிருந்த சில தொலைபேசி உரையாடல்களை விசாரணை அறையில் அவர் ஒலிக்கச் செய்தார். எனது கைபேசி கடந்த சில வருடங்களாகவே எப்.பி.ஐ அதிகாரிகளால் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது என்று புரிந்து கொண்டேன். காங் ஒலிநாடாவை நிறுத்திவிட்டு, தன்னுடைய கேள்விகளை என்மீது வீசத் தொடங்கினார்.

எனக்கான வழக்கறிஞர் இல்லாத இடத்தில், நான் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டுமென்று சட்டப்படி எந்தக் கட்டாயமுமில்லை. ஆனாலும், நான் அதிகாரி காங்குடைய கேள்விகள் அனைத்திற்கும் நேர்மையாகவும் விளக்கமாகவும் துணிச்சலாகவும் பதிலளித்தேன். ஏனெனில், என்னிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை. எனது வணிக நடவடிக்கைகள் அனைத்துமே வெளிப்படையானவை, சட்டபூர்வமானவை.

அந்த விசாரணை எனக்குப் பயம் காட்டி, அச்சுறுத்தும் நோக்கத்துடனேயே நடத்தப்பட்டது. என்மீது சுமத்தப்பட்டிருக்கும் உட்தகவல் வணிகக் குற்றத்தை நான் ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும் பங்குச் சந்தை வணிகத்திலும் முதலீட்டு நிதியத்தொழிலிலும் வெற்றிகண்ட சிலருக்கு எதிராக என்னுடைய வாக்குமூலம் அமைய வேண்டுமென்றும் எப்.பி.ஐ. அதிகாரிகள் என்னை நிர்ப்பந்தித்தார்கள். நான் இரண்டையுமே செய்யவில்லை.

பங்குச் சந்தையும் முதலீட்டு நிதியங்களும் எவ்வாறு இயங்குகின்றன என்பதைக் குறித்து என்னை விசாரணை செய்த அதிகாரிகளுக்குச் சுத்தமாகத் தெரியாது என்பதை நான் சீக்கிரமே புரிந்துகொண்டேன். குறிப்பாக, முதலீடு சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் கடுமையான பகுப்பாய்வுகளைப் பற்றி அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதிருந்தது. மிகக் கவனமாக மேற்கொள்ளப்படும் முதலீட்டு நிதியத் தொழிலின் அமைப்பு, அதிலுள்ள இடர்கள், நிர்வாகம், நிதி மேலாளர்கள் இயங்கும் முறைகள் போன்றவற்றைக் குறித்து விசாரணை அதிகாரிகளுக்கு எந்தத் தெளிவுமில்லை. நான் அவற்றை விளக்கினாலும், விளங்கிக்கொள்வதற்கு அவர்கள் அக்கறை காட்டவில்லை. அவசர அவசரமாக என்மீது உட்தகவல் வணிகம் என்ற குற்றத்தைச் சுமத்தி, என்னைச் சிறைக்கு அனுப்புவதிலேயே அந்த அதிகாரிகள் குறியாக இருந்தார்கள். நானோ என்னுடைய நேர்மையான பதில்களால் அவர்களை முறியடிக்க முடியும் என்ற அப்பாவித்தனமான நம்பிக்கையோடு, அதிகாரிகளுக்குச் சளைக்காமல் பதிலளித்தவாறு இருந்தேன். விசாரணை எந்தத் திசையிலும் நகர வழியின்றி, அந்த மூடிய அறைக்குள்ளேயே தேங்கிக் கிடந்தது.

காலை ஒன்பது மணிக்கு, எனது அலுவலகத்துடன் தொலைபேசி வழியாகத் தொடர்புகொள்ள அனுமதிக்கப்பட்டேன். அலுவலகத்தில் இருந்தவர்கள் எனக்காக ஒரு வழக்கறிஞரைத் தேடும் முயற்சியில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தார்கள். எனக்கென்று பிரத்தியேக வழக்கறிஞர் எவரும் இருக்கவில்லை. சில மணிநேரங்களின் பின்பாக ஒரு வழக்கறிஞர் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் யார்? அவரின் சட்ட நிபுணத்துவம் எத்தகையது? என்பது பற்றியெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது. அதே போன்று, அந்த வழக்கறிஞரும் என்னைப் பற்றியோ, கலியன் என்ற என்னுடைய நிறுவனத்தைப் பற்றியோ எதுவுமே அறிந்திருக்கவில்லை.

ஆனாலும், அவர் உடனடியாகவே தொலைபேசி வழியாக ஒரேயொரு மிகச் சிறந்த ஆலோசனையை எனக்கு வழங்கினார்.

அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு சொன்னார். என்னாலும் எப்.பி.ஐ அதிகாரிகளுக்கு எதையுமே புரியவைக்க முடியாததால், வழக்கறிஞரது ஆலோசனையை நான் மனதார ஏற்றுக் கொண்டேன்.

எப்.பி.ஐ அதிகாரிகள் என்னை மூடிய அறைக்குள் விசாரணை செய்துகொண்டிருந்த அதேவேளையில், நியூயோர்க் தென்மாவட்டத்தின் அரசுத் தலைமை வழக்குரைஞரான ப்ரீத் பராரா அவர்கள் தனது அலுவலகத்தில் ஓர் ஊடகச் சந்திப்பை ஏற்பாடு செய்து, உலககெங்குமுள்ள தொலைக்காட்சித் திரைகளில் நேரலையில் தோன்றிப் பேசிக்கொண்டிருந்தார். ஊடகவியலாளர்களின் கமெராக்களுக்கு முன்பு மிடுக்காக நிற்பதில் அவர் கட்டுக்கடங்காத தாகத்தைக் கொண்டிருக்கிறார் என்பது முழு அமெரிக்காவுக்குமே தெரியும்.

Preed Parara

எப்.பி.ஐ அதிகாரிகளோடு, எஸ்.இ.ஸி. எனக் குறுக்கிச் சொல்லப்படும் “பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையம்” சார்ந்த அதிகாரிகளையும் ஊடகச் சந்திப்பில் ப்ரீத் பராரா தன்னோடு வைத்திருந்தார். என்னைக் கைது செய்ததைக் குறித்துப் பெருமிதம் பொங்கிவழிய தடல்புடலாக அவர்கள் ஒருவரையொருவர் பாராட்டித் தள்ளினார்கள். “கலியன் முதலீட்டு நிதியத்தின் நிறுவனரும், தலைமை நிறைவேற்று அதிகாரியுமான “பில்லியனர்” ராஜ் ராஜரட்ணம் மீது எஸ்.இ.ஸி உட்தகவல் வணிகக் குற்றம் சுமத்தியுள்ளது” என்ற தலைப்போடு ஓர் அறிக்கையை எஸ்.இ.ஸி ஊடகங்களுக்கு வெளியிட்டது. இந்த அறிக்கையின் பின்புதான் “பில்லியனர்” என்ற அடைமொழி என்னுடன் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டது.

ஊடகச் சந்திப்பில், அரசுத் தலைமை வழக்குரைஞர் பராரா பல வரைபடங்களை வெளியிட்டார். பராராவின் கற்பனையால் வரையப்பட்ட “உட்தகவல் வணிக வலையமைப்பு” வரைபடங்களின் மையத்திலிருக்கும் “தலைமைச் சதிகாரன்” பாத்திரத்தை அவர் எனக்கு வழங்கியிருந்தார். அந்த வரைபடங்களில் என்னோடு கோர்த்துவிடப்பட்டிருந்தவர்களில் ஒரு சிலரை மட்டுமே எனக்குத் தெரியும்.

wall street

“இந்த வழக்கு வால் ஸ்ட்ரீட்டுக்கும் முதலீட்டு நிதியங்களுக்கும் மாபெரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று அந்த ஊடகச் சந்திப்பில் பராரா கொக்கரித்திருந்தார். தனது உரையில் 1987 இல், வெளிவந்திருந்த “வால் ஸ்ட்ரீட்” என்ற திரைப் படத்தில் “கோர்டன்” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த மைக்கல் டக்ளஸ் கூறும் “பேராசை எப்போதுமே நல்ல விடயமில்லை” என்று வாக்கியத்தை அவர் குறிப்பிட்டுக் காட்டினார். ஊடக வெளிச்சத்தில் தன்னைத்தானே முன்நிறுத்துவதில் பராரா மகா நிபுணர். அவருடைய விளம்பர வெறிக்கும் தொழில் உயர்வுக்கும் நானே தூண்டில் புழு.

அங்கிருந்த எஸ்.இ.ஸி பிரதிநிதியும் பராராவுக்குச் சற்றும் குறைந்தவரல்ல. அவர் “பில்லியனர் ராஜ் ராஜரட்ணம் இந்தப் பிரபஞ்சத்தின் முதல்வர் அல்ல, அவர் உட்தகவல் வணிகம் எனும் ஊழல் குகையின் முதல்வர்” என்று நாடகப் பாணியில் சொன்னார். ஊடகவியலாளர்களையும் பொதுமக்களையும் வலிந்து சிரிக்கச் செய்வதற்காக, சிரிப்பு வாயு நிரம்பிய பலூனை வெடிக்கச் செய்ததைப் போன்று அதுவிருந்தது.

இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், உட்தகவல் வணிகத்தின் மூலமாகப் பங்குச் சந்தையில் நான் நடத்தியிருப்பதாகச் சொல்லிக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த குறிப்பிட்ட வணிகங்களில் மொத்தமாக முப்பது மில்லியன் டொலர்கள் நட்டத்தை என்னுடைய கலியன் நிறுவனம் சந்தித்திருக்கிறது என்ற உண்மையை பராரா மிகவும் தந்திரமாக அந்த ஊடகச் சந்திப்பில் மறைத்துவிட்டார். அந்த உண்மையைச் சொல்லியிருந்தால் ஊடகவியலாளர்களிடம் அது சந்தேகங்களைக் கிளப்பிவிடும் என்பதால் பராராவும் அரசுத் தரப்பினரும் மிகவும் கவனமாகத் தங்களது புனைகதையை எழுதினார்கள்.

பராரா ஊடகச் சந்திப்போடு நிறுத்திக்கொள்ளவில்லை. இதற்குப் பின்னர், அவமானநடை என்ற மோசமான நிகழ்வை ஏற்பாடு செய்வதில் அவர் ஆர்வமானார். இந்த நிகழ்ச்சியின் ஒரே நோக்கம், விசாரணைக் கைதியை ஊடகங்களுக்கும் பொது மக்களுக்கும் காட்சிப் பிராணியாக்கி அவமானப்படுத்துவதே.

அரசுத் தலைமை வழக்குரைஞர் ப்ரீத் பராராவிடம் வானளாவிய அதிகாரம் குவிந்து கிடந்தது. இதுவும் அமெரிக்க நீதி முறைமையின் குறைபாடுகளிலொன்று. பராரா என்னை அவமான நடையில் தள்ளுவதற்குத் தீர்மானித்துவிட்டார். இதுவரைக்கும் குற்றவாளி எனத் தீர்ப்பிடப்படாத நான் எனது முதுகுக்குப் பின்னாகக் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் எப்.பி.ஐ. அலுவலகத்திலிருந்து ஐம்பது அடிகள் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனம்வரை ஏராளமான ஊடகவியலாளர்களின் முன்னே, என்னைச் சுற்றி எல்லாத் திசைகளிலும் கமெராக்கள் மின்னலடிக்க ஊர்வலம் விடப்பட்டேன்.

நூற்றுக்கணக்கான தொலைக்காட்சிகளில் எனது அவமான நடை நேரலையில் ஒளிபரப்பாகியது. எண்ணுக்கணக்கற்ற பத்திரிகைகளின் முதல் பக்கங்களை என்னுடைய அவமான நடை அலங்கரித்துப் பத்திரிகைகளின் விற்பனையை எகிறச் செய்தது. ஆனால், என்னை அவமானப்படுத்துவதில் குறியாக இருந்த அமெரிக்க நீதித்துறை என்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்ற வலைப்பின்னலை நான் விளங்கிக் கொள்ளவோ, அவற்றை மறுதலிக்கவோ எனக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. இத்தகைய செயற்பாடு கடுமையான அநீதி மற்றும் பாரபட்சம் என்று ஜனநாயக நாடுகளில் கருதப்படும். மாபெரும் ஜனநாயக நாடென்று தன்னைப் பெருமையுடன் பீற்றிக்கொள்ளும் அமெரிக்காவில், நீதித்துறை இவ்வாறு தான்தோன்றித்தனமாகவும் பாரபட்சமாகவும் நடந்துகொண்டதைக் கண்டு நான் திகைத்துத்தான் போனேன்.

இரண்டு மாதங்களுக்கு முன்புவரை இந்த ப்ரீத் பராரா எந்தப் பிரபலமுமற்ற சாதாரணமான ஒரு வழக்கறிஞர். செனட்டர் சக் சுமெரின் சட்ட ஆலோசகராக இருந்தவர். அரசுத் தலைமை வழக்குரைஞர் பதவியைப் பெற்றுக்கொண்டதும், ஒரே வழக்கில் பெரும் புகழடைவதற்கும் அதிகாரப் படிகளில் மேலேறிச் செல்வதற்கும் என்னுடைய வழக்கே சாலவும் சிறந்தது என்ற முடிவுக்கு பராரா வந்திருக்க வேண்டும். “பில்லியனர்” என்ற அடைமொழியை அவர் திட்டமிட்டே என் மீது திணித்துக் கொண்டிருந்தார். நாட்டில் ஏற்பட்டிருந்த மோசமான பொருளாதார நெருக்கடியால் தவித்துக்கொண்டிருந்த மக்களுக்கு என்னைத் தீனியாகப் போடுவதற்குத் திட்டமிட்டார். “வால் ஸ்ட்ரீட் ஷெரீப்” என்ற மகுடத்தைத் தனது தலையில் சூடுவதற்கு அவர் தவியாகத் தவித்துக் கொண்டிருந்தார்.

எனக்கு முன்போ அல்லது பின்போ, உட்தகவல் வணிகக் குற்றம் சுமத்தப்பட்ட எவருமே அவமான நடைக்கு உட்படுத்தப்படவில்லை. ஆனால், அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் என்மீது சுமத்தப்பட்ட குற்றங்களிலும் பல மடங்குகள் அதிகமாகவிருந்தன. ஆரம்பம் முதலே எனது வழக்கில் அரசுத் தரப்பு பாரபட்சமாக நடந்துகொண்டது என்பதை நீங்கள் இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம்.

அவமான நடை நிறைவேறியதும், நான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கே எனது குடும்பத்தினரும் நண்பர்களும் வந்திருந்தார்கள். மதியத்திற்கு மேல் என்னுடைய வழக்கறிஞரைச் சந்தித்தேன். அவர் என்னைக் குறித்த சில அடிப்படைத் தகவல்களை என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். நான் ஏதாவது தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகள் வழங்கியிருக்கிறேனா எனக் குறிப்பாகக் கேட்டார்.

என்னைப் பிணையில் விடுவிப்பதற்கான ஆவணங்களை வழக்கறிஞர் தயார் செய்யத் தொடங்கியவாறே, என்னுடைய சகோதரர் ரங்கனிடம் கடந்த ஐந்து வருடங்களுக்கான எனது வருமானவரி அறிக்கைகளின் நகல்களை கலியன் அலுவலகத்திலிருந்து எடுத்துவருமாறு சொன்னார். நான் செய்திருந்த அறப்பணிகளுக்கும் வழங்கியிருந்த நன்கொடைகளுக்குமான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காகவே வருமானவரி அறிக்கைகளின் நகல்களை வழக்கறிஞர் கேட்டார். ரங்கனும் துரிதமாகச் செயற்பட்டு, வழக்கறிஞர் கூறியவாறே வருமானவரி அறிக்கைகளின் நகல்களை எடுத்துவந்தார். ஆனால், அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள், “ரங்கன் அந்த நேரத்தைப் பயன்படுத்தி கலியன் அலுவலகங்களிலிருந்த இரகசியக் கோப்புகளை அழித்துவிட்டார்” என நீதிமன்றத்தில் புதியதொரு குற்றச்சாட்டைப் பின்பு புனைந்தார்கள்.

நீதிமன்றத்தில் நிகழ்ந்த பிணை மனுக்கள் மீதான விசாரணையின் போதுதான், வோற்ரன் வணிக மேலாண்மைப் பள்ளியில் என்னுடன் கல்வி பயின்றவரும் நிதித் தொழிற்துறையில் எனது சகாவுமான அனில் குமாரும் அன்று காலையில் கைதுசெய்யப்பட்டிருந்தது எனக்குத் தெரியவந்தது. அவர் நீதிபதி டக்ளஸ் ஈற்றன் முன்னால் நிறுத்தப்பட்டபோது, தான் நிரபராதி என்றே வாக்குமூலம் அளித்தார்.

Anil Kumar

கலிபோர்னியாவில் இருந்த அனில் குமாரின் வீட்டைப் பிணையமாக எடுத்துக்கொண்டு, அவரைப் பிணையில் விடுவிக்க நீதிபதி சம்மதித்தார். அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் நீதிபதியின் முடிவை ஆட்சேபிக்கவில்லை. ஆனால், அனில் குமார் சீக்கிரமே எப்.பி.ஐ யின் அச்சுறுத்தலுக்குப் பணிந்து போய், தனது வாக்குமூலத்தைத் தலைகீழாக மாற்றுவாரென்றோ, பல்வேறு சரடுகளுள்ள நீண்ட கதையொன்றைப் புனைந்து எனக்கு எதிராகவே சாட்சியம் சொல்வாரென்றோ அப்போது என்னால் ஊகம் கூடச் செய்ய முடியாமலிருந்தது.

நீதிபதி டக்ளஸ் ஈற்றன் அவர்கள் அடுத்ததாக எனது பிணை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது, அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் பரபரப்பாகச் செயற்படத் தொடங்கினார்கள். என் மீதான விசாரணைகள் முடியும் வரை என்னைச் சிறையில் வைத்திருக்க அவர்கள் விரும்பினார்கள். உலகத்தின் பல நாடுகளில் எனக்கு ஏராளமான சொத்துகள் உண்டென்றும் இலங்கைக்கு அல்லது வேறொரு நாட்டுக்கு நான் தப்பியோட வாய்ப்புகள் உண்டென்றும் அரசுத் தரப்பு வழங்குரைஞர்கள் வாதிட்டு எனது பிணை மனுவை நிராகரிக்குமாறு நீதிபதியை வேண்டினார்கள். நீதிபதி என்னை உற்று நோக்கினார்.

நீதிபதியொருவர் பிரதிவாதியைப் பிணையில் விடுவிக்க மறுப்பதற்குப் பொதுவாக இரண்டு காரணங்கள் உள்ளன. பிரதிவாதி சமூகத்திற்கு ஆபத்தை உண்டாக்கக்கூடும் என்பது முதல் காரணம். பிரதிவாதி நாட்டைவிட்டுத் தப்பிச் செல்லக் கூடும் என்பது இரண்டாவது காரணம்.

நான் சமூகத்திற்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பேர்வழி என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர்களால் வாதிட முடியவில்லை. எனவே, நான் அமெரிக்காவிலிருந்து தப்பித்துச் செல்லக்கூடும் என்ற காரணத்தை வலியுறுத்தியே அவர்கள் வாதிட்டார்கள். தங்களுடைய வாதத்திற்குத் துணை சேர்க்கப் பச்சைப் பொய்களைப் பந்துகளாக நீதிமன்ற மேசையில் உருட்டினார்கள். எனது சகோதரி ஒருவர் தென்னாபிரிக்காவில் வசிக்கிறார் என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் நீதிபதியிடம் அடித்துக் கூறினார்கள்.

எனக்கு இரண்டு சகோதரிகள் மட்டுமே இருக்கிறார்கள். ஒருவர் நியூயோர்க்கிலும் மற்றவர் சிங்கப்பூரிலும் வாழ்கிறார்கள். இல்லவே இல்லாத சகோதரியைத் தென்னாபிரிக்காவில் அரசுத்தரப்பு வழக்குரைஞர்கள் உருவாக்கியதற்கு ஒரு வலுவான காரணமுண்டு. அந்த நாடு குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் செய்திருக்கவில்லை. எனவே, நான் இரகசியமாகத் தப்பித்துத் தென்னாபிரிக்காவுக்கு எனது சகோதரியிடம் சென்றுவிடுவேன் என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் ஒரு திகில் கதையை உருவாக்கினார்கள்.

“தென்னாபிரிக்கச் சகோதரி” என்ற பொய்யே நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்துவதற்காக அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் இட்டுக்கட்டிய நீண்ட பொய்யுரைகளின் வரிசையில் முதலாவது பொய்யாகும். என்ன பொய் சொல்லியாவது, என்ன தந்திரம் செய்தாவது என்மீதான வழக்கில் வெற்றிபெற வேண்டும் என்பதே அரசுத் தரப்பு வழக்குரைஞர்களின் நோக்கமாக இருந்தது.

எனது வாழ்க்கையில் இதற்கு முன்பு நான் ஒருபோதுமே நீதிமன்ற வாசற்படியை மிதித்ததில்லை. அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் செய்யக் கூடிய சூழ்ச்சிகளைக் குறித்து நான் கற்பனை கூடச் செய்ததில்லை. அமெரிக்காவில் நீதி பரிபாலனம் சட்ட பூர்வமாகவும் அறம் சார்ந்தும் நடக்கிறதென்றும், அரசுத் தரப்பு வழக்குரைஞர்களும் எப்.பி.ஐ அதிகாரிகளும் நீதிமன்றத்தில் பொய்யுரைக்க முடியாதென்றும் அமெரிக்காவின் பெரும்பாலான குடிமக்கள் நம்புவதைப் போலவே நானும் நம்பியிருந்தேன். ஆனால், அந்த நம்பிக்கை மிகப் பெரிய மூடநம்பிக்கை எனத் தெரிந்துகொள்வதற்கு நான் கொடுத்த விலை மிகவும் அதிகம். இந்தப் பொய்யர்களால் எனது முதலீட்டு நிதியத் தொழில் முழுவதுமாக அழிக்கப்பட்டது. உற்சாகமும் நிம்மதியும் நிறைந்திருந்த எனது வாழ்க்கை இந்தப் பொய்யர்களால் தடம் புரட்டப்பட்டது.

நீண்ட வாதப் பிரதிவாதங்கள் நீதிமன்றத்தில் நிகழ்ந்ததன் பின்பு, நீதிபதி டக்ளஸ் ஈற்றன் என்னை நூறு மில்லியன் டொலர்கள் பிணையத் தொகையில் விடுவித்தார். இருபது மில்லியன் டொலர்கள் சொத்துகளாகவும், மிகுதித் தொகைக்கு என்னுடைய நலன் விரும்பிகள் ஐவர் பொறுப்பேற்று உத்தரவாதம் அளித்தும் இது நிகழ்ந்தது. அமெரிக்க வரலாற்றிலேயே அதி உச்சமான பிணையத்தொகை என்னுடைய வழக்கிலேதான் பெறப்பட்டது. நாட்டின் வரலாற்றிலேயே ஆகப் பெரிய நிதி மோசடியைச் செய்த பேர்னி மேடோஃபுக்கு நீதிமன்றத்தில் நிர்ணயிக்கப்பட்ட பிணையத்தொகை பத்து மில்லியன் டொலர்களே. என்னுடைய விடயத்தில் பாரபட்சமான, சமனற்ற நீதியை வழங்குவதற்கு அமெரிக்க நீதித்துறை கங்கணம் கட்டிக் கொண்டு கடைசிவரை ஆடியது.

எனது பிணையத்தொகைக்கு உத்தரவாதம் நின்றவர்களில் ஒருவர் “ஹார்லம் குழந்தைகள் வலயம்” என்ற தொண்டு நிறுவனத்தை இயக்கிவரும் ஆஃப்ரோ அமெரிக்கரான ஜெஃப்ரி கனடா. அவருடைய தொண்டு நிறுவனம் வறுமையான சூழலில் வளரும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக பாடசாலைகளை நடத்துவது உட்பட பல்வேறு அறப்பணிகளைச் செய்துவருகிறது. நான் அமெரிக்காவை விட்டுத் தப்பியோடினால் ஜெஃப்ரி கனடா எல்லாவற்றையும் இழந்துவிடுவார். அவரிடம் ஊடகங்கள் “ராஜ் ராஜரட்ணம் நாட்டை விட்டுத் தப்பியோடிவிடுவார் என்ற சந்தேகம் உங்களுக்கில்லையா?” எனக் கேட்டபோது “எனக்கு ராஜ் ராஜரட்ணம் மீது துளியளவு சந்தேகமும் கிடையாது! அவருடைய குணாதிசயங்களை நான் நன்கறிவேன்” என்று ஜெஃப்ரி கனடா கூறியது மிகவும் சரியானது. நான் அரசுத் தரப்பின் சூழ்ச்சிகளுக்கு அஞ்சி நாட்டை விட்டுத் தப்பியோடவோ, ஒளியவோ போவதில்லை. நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கப் போராடப் போகிறேன். என் மீது வீசப்பட்டிருக்கும் சதிவலையைக் கண்ணி கண்ணியாக அறுத்தெறியும் மன உறுதியுடன் நான் இந்த வழக்கை எதிர்கொள்வேன்.

அரசுத் தரப்பு என்னைக் குறிவைத்ததற்கு வேறொரு வலுவான காரணமுள்ளது. ஒக்டோபர் 2009 இல் அமெரிக்காவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் பொருளாதாரக் கட்டமைப்பு அதல பாதாளத்தில் சரிந்து கிடந்தது. அமெரிக்காவின் வங்கிகளும் பெரும் நிதி நிறுவனங்களும் திவாலாகின. இதனால், அமெரிக்காவில் பல இலட்சம் மக்கள் தங்களது வீடுகளையும் வாழ்நாள் சேமிப்புகளையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தார்கள். நாடு முழுவதும் கொந்தளிப்பும் கொதிப்பும் பரவியிருந்தன.

முழு அமெரிக்காவுமே வால் ஸ்ட்ரீட்டுக்கு எதிராகவிருந்தது. ஆனால், பெரும் வங்கிகள் மீது அரசாங்கத்தால் குற்றம் சுமத்த முடியவில்லை. “பெரும் வங்கிகளில் கைவைத்தால் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு முற்றுமுழுதாக நொறுங்கிவிடும். பெரும் வங்கிகளின் இயக்குனர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள்” என்றெல்லாம் அரசாங்கம் சாக்குப்போக்குகளைச் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால், பொதுமக்களும் ஊடகவியலாளர்களும் உணர்ச்சிகரமான எதிர்வினைகளில் இறங்கினார்கள்.

மக்களையும் ஊடகங்களையும் திருப்தி செய்வதற்காக, யாராவது ஒருவரைப் பிடித்துக் குற்றம் சுமத்தி அரங்கில் நிறுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. இந்த ஊழல்வாதியே அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என்று கூறி, அகப்பட்டவர் மீது பழியைப் போட்டுவிட்டு அரசு தனது பொறுப்பிலிருந்து நழுவ நினைத்தது. இவ்வாறு அகப்பட்டவன் நானாக இருந்தேன்.

பங்குச் சந்தையில், எட்டு நிறுவனங்களின் பங்குகளை நான் உட்தகவல் வணிகத்தினால் கையாண்டேன் என முதலில் என் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தாலும், பின்பு அது முப்பத்து நான்கு வணிக நிறுவனங்களின் பங்குகள் சார்ந்த குற்றங்களாக அதிகரிக்கப்பட்டன. வழக்கு விசாரணையின்போது, அது மீண்டும் எட்டு நிறுவனப் பங்குகளது வணிகத்திற்கான குற்றங்களாகக் குறைக்கப்பட்டு, “கோல்ட்மன் சாக்ஸ்” பங்குகளில் உட் தகவல் வணிகம் செய்ததாகப் புதிதாக ஒரு குற்றச்சாட்டு சேர்க்கப்பட்டு, மொத்தமாக ஒன்பது குற்றங்கள் என்மீது சுமத்தப்பட்டன.

என்னுடைய கைதுக்கு மூலகாரணமாகயிருந்த அரசுத் தலைமை வழக்குரைஞர் ப்ரீத் பராரா சட்டத்தைக் கிஞ்சித்தும் மதிக்காதவராகக் காணப்பட்டார். குற்றம் சுமத்தப்பட்டவர்களை பராரா கடுமையாக மிரட்டுவார். அவமான நடை உண்டென்பார். சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டால் கிடைக்கும் நன்மைகளைப் பட்டியலிட்டுப் பேரம் பேசுவார். பொய்ச் சாட்சியங்களை மிகுந்த கற்பனைத் திறனுடன் உருவாக்கி அச்சுறுத்துவார். குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிராகச் சாட்சியம் கூறுமாறு குற்றம் சுமத்தப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொழில் பங்காளிகளுக்கும் அழுத்தம் கொடுத்துப் பொய் வாக்குமூலங்களைப் பெறுவார். அந்த வாக்குமூலங்களை ஊடகங்களுக்குக் கசியவிட்டு, குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர் குறித்து மிக மோசமான பிம்பத்தைப் பொதுவெளியில் உருவாக்குவார். அவர் இந்தச் சூழ்ச்சித்திறனை அவரது முன்னோடி அரசுத் தலைமை வழக்குரைஞரும், பின்பு நியூயோர்க் நகரத்தின் மேயர் பதவியை வகித்தவருமான ரூடி யூலியானியிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கலாம்.

செய்தி ஊடகங்களைக் கையாள்வதில் பராரா மிகப்பெரும் தந்திரசாலியாக இருந்தார். அவர் என்னைக் குறித்து ஊடகங்களில் கசியவிட்ட செய்திகள் பொதுமக்களைக் கொந்தளிக்க வைத்தன. அவர்களுடைய கோபம் இயல்பாகவே என்னையும் எனது முதலீட்டு நிறுவனத்தை நோக்கியும் திரும்பியது. இந்தச் சூழலால் என்னுடைய நிறுவனத்தின் நிர்வாகிகளும் எனது தொழில் பங்காளிகளும் அச்சத்தில் வீழ்ந்து தளர்ந்துபோனார்கள். எனக்கு எதிராக மிகப்பெரிய ஊடகப் போரை அரசு திட்டமிட்டே நிகழ்த்தியது.

பராராவின் பொய்யுரைகளை “நம்பத் தகுந்த அரசியல் வட்டாரங்களிலிருந்தும் விசாரணைக் குழுவினரோடு நெருக்கமானவர்களிடமிருந்தும் கிடைத்த செய்திக் கசிவுகள்” எனக் குறிப்பிட்டு ஊடகங்கள் உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருந்தன. நிலைமைகளைக் கவனத்துடன் ஆராய்ந்து உண்மைகளை வெளியிடாமல், பரபரப்பை மட்டுமே செய்தியாக்கும் ஊடக அசிங்கம் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. “மிகப்பெரிய உட்தகவல் வணிகக் கும்பலை அரசாங்கம் கண்டுபிடித்தது” என ஊடகங்களில் நாள் தவறாமல் செய்திகள் வெளியாகின. ராஜ் ராஜ ரட்ணம் ஏன் குற்றவாளி என்பதை விளக்கும் அரசுத் தரப்பு வழக்குரைஞர்களின் உரைகளோடு தலைப்புச் செய்திகள் வெளியிடப்பட்டன. நான் சிறைக்கு அனுப்பப்பட்ட பிறகும் இந்த ஊடகப் பேரலை ஓயவில்லை. பின்னும் பல வருடங்களுக்கு நானே தலைப்புச் செய்தியாக இருந்தேன்.

ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மையும் பொய்களைப் பணமாக்கும் அவசரமும் அரசுத் தரப்பு வழக்குரைஞர்களின் சூழ்ச்சிகளுக்கு மூடுதிரையாகின. அவர்களைக் கேள்வி கேட்க ஆட்களற்றுக் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தார்கள். தாங்கள் எண்ணியவற்றைத் தங்குதடையின்றிச் செய்துகொண்டே போனார்கள். இவர்களின் இந்த அராஜகப் போக்கு பலருடைய வாழ்க்கையை நாசமாக்கத் தொடங்கியது. கையில் கிடைத்தவர்களின் தலையிலெல்லாம் ஆதாரமற்ற வழக்குகள் சுமத்தப்பட்டன.

பராரா தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு சட்டத்தின் விதிகளை நளினமாக உடைத்தார். குற்றவியல் வழக்கின் வரையறைகளுக்குப் பொருந்திவராத வணிகத்துடன் தொடர்புடைய வழக்குகளையும் வலிந்து குற்றவியல் வழக்குகளாக்கினார். வெற்றி ஒன்றையே குறிவைத்து பராரா நீதி நியாயமின்றி வெறித்தனமாக இயங்கிக்கொண்டிருந்தார்.

என்னை வழக்குகளுக்குள் மாட்டிவிடுவதற்குச் சில வாரங்களுக்கு முன்னதாகத்தான், பராரா தன்னுடைய அலுவலகத்தின் பொதுசனத் தொடர்பு அதிகாரியாக எலின் டேவிஸ் என்ப வரைப் புதிதாக நியமித்திருந்தார். எலின் டேவிஸ் தன்னுடைய முதல் வேலையாக பராராவின் பொதுசனத் தொடர்பு அதிகாரிகள் அணியை விரிவாக்கினார். மூன்று அதிகாரிகளுடன் இருந்த அந்த அணி பதினான்கு அதிகாரிகளைக் கொண்டதாக ஊதிப் பெருத்தது. எலின் டேவிஸ், தொலைக்காட்சி நாடகத்துறையில் தயாரிப்பாளராகப் பழுத்த அனுபவம் வாய்ந்தவர். எனவே, தன்னுடைய ஆற்றல்களையும் நாடகத் திறன்களையும் அரசுத் தரப்பின் தவறுகளுக்கு வெள்ளையடிக்க அவர் உபயோகித்தார்.

என்மீது தொடுக்கப்பட்ட வழக்கைப் பொறுத்தவரை, அரசுத் தரப்பின் நோக்கம் நீதியை நிலைநாட்டுவது அல்ல. மாறாக, பொருளாதாரக் கட்டமைப்புச் சிதைவு காரணமாகக் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துத் தத்தளித்துக் கொண்டிருந்த, பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதில் முன்னேற முடியாத அரசாங்கத்தின் கையாலாகாத்தனத்தை மூடிமறைப்பதே இந்த வழக்கின் அடிப்படையாகும். அரசாங்கத்தின் மீது அதிருப்தியால் கொதித்துக்கொண்டிருந்த மக்களின் கவனத்தை என்னை நோக்கித் திசை திருப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

ப்ரீத் பராராவுக்கு மிகவும் பிடித்தமான பத்திரிகையாளர் “த வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்” இதழின் புலனாய்வு நிருபர் சுஸான் புல்லியம். இந்த நிருபர் எனது வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்குப் பல மாதங்களுக்கு முன்னரே, என்னுடைய கலியன் நிறுவனம் குறித்துத் திகிலான, ஆனால், கவர்ச்சியான தலைப்புகளுடன் பல கட்டுரைகளை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரைகளை எழுதுவதற்காக என்னுடைய நண்பர்களுடனும் தொழிற்துறைச் சகாக்களுடனும் அவர் பேசியிருந்தார். ஆனால், அவர்கள் என்னைப் பற்றி நன்றாகக் கூறிய செய்திகளில் ஒன்றைக் கூடத் தன்னுடைய கட்டுரைகளில் சுஸான் புல்லியம் குறிப்பிட்டதேயில்லை. தனது கட்டுரைகளுக்கான சான்றாதாரங்கள் அரசுத் தரப்பு வழக்குரைஞர் குழாமுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பெறப்பட்டவை என்றே அவர் குறிப்பிட்டார்.

என்னுடைய விடயத்தில் அநேகமான நிருபர்கள் கண்மூடித்தனமாகவே செய்திகளை வெளியிட்டார்கள். அரசுத் தரப்பு வழங்கிய மிதமிஞ்சிய தகவல்களால் அவர்கள் மூழ்கடிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் அந்தத் தகவல்களின் நம்பகத் தன்மையைக் குறித்து அலசி ஆராயாமல், முற்றிலும் தவறான செய்திகளையே வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். உதாரணமாக, ஹில்டன் நிறுவனத்தின் 400,000 பங்குகளை கலியன் தொழில்நுட்பத்துறை முதலீட்டு நிதியத்திலிருந்து விலைக்கு வாங்கிவிட்டேன் என்பது என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் ஒன்றாகும்.

கலியன் தொழில்நுட்பத்துறை முதலீட்டு நிதியத்திற்கு வழங்கப்பட்டிருந்த உரிமம் தொழிநுட்பத்துறையில் முதலீடு செய்வதாகும். எனவே ஹில்டன் பங்குகளை வாங்கியது சட்ட விரோதம் என்பது ஊடகங்களின் ஒற்றைப் பார்வை. ஆனால், உண்மை என்ன? கலியன் தொழில்நுட்பத்துறை முதலீட்டில் 25% நிதியைத் தொழில்நுட்பத்துறை சாராத துறைகளிலும் முதலீடு செய்யலாம் என்பதும் உரிமத்தின் ஒரு விதியாகும். அந்த விதிக்கு அமையவே நாங்கள் ஒக்டோபர் 2009 வரையிலான ஐந்து வருட காலத்தில் 20% நிதியைத் தொழிநுட்பத்துறை சாராத பங்குகளில் முதலீடு செய்திருந்தோம். அவற்றில் ஹில்டன் பங்குகள் மட்டுமல்லாமல், தொழிநுட்பத்துறை சாராத வேறு சில நிறுவனங்களின் பங்குகளும் இருந்தன. இது பற்றி எந்த வொரு நிருபரும் எழுதவேயில்லை. ஊடகங்கள் ஆராய்ந்து தெளியாமல், அரசுத் தரப்பு வழக்குரைஞர்களின் பொய்களையும் மழுப்பல்களையும் வாங்கி அப்படியே வாந்தி எடுத்தன.

அன்றைய நாள் எனக்குக் கடுமையான மனவுளைச்சலையும் உடற்சோர்வையும் ஏற்படுத்தியிருந்தது. நீதிமன்றத்தில் எனக்குப் பிணை வழங்கப்பட்ட பின்பாக, இரவு ஏழு மணியளவில் நீதிமன்றத்திலிருந்து எனது வீட்டுக்குப் புறப்பட்டேன். நீதிமன்ற வளாகத்திலோ தெருவிலோ நிருபர்கள், படப்பிடிப்பாளர்கள் எவருமே காணப்படவில்லை. என்னை எதிர்பார்த்து என்னுடைய வீட்டின் முன்னாலும் அவர்கள் காத்திருக்கவில்லை.

எனது தரப்பு நியாயத்தைக் கேட்பது அவர்களுக்குத் தேவையற்றதாகவிருந்தது. பராரா கொடுத்த பொய்ச் செய்திகளே அவர்களுக்கு அன்றைக்குப் போதுமானவையாக இருந்திருக்க வேண்டும். பரபரப்புக்கள் எல்லாம் ஓய்ந்துவிட்டன போலும் என்று நினைத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தேன்.

எனது பெற்றோர், சகோதரர், சகோதரி, நண்பர்கள் ஆகியோரால் வீடு நிறைந்திருந்தது. அன்பான வார்த்தைகளும் ஆறுதல் செய்திகளும் என்னைச் சூழ்ந்தன. நான் அமைதியாக இரவு உணவை முடித்துக்கொண்டு, அவர்களிடமிருந்து விடை பெற்று என்னுடைய படுக்கையறைக்குச் சென்றேன். அன்றைய நாளின் நிகழ்வுகளை நான் தனிமையிலிருந்து சிந்திக்கவும் ஆராயவும் எனக்கு நேரம் கிடைத்தது.

எனக்கு வழங்கப்பட்டிருந்த குற்றப்பத்திரிகையை நான் கவனமாக வாசித்தேன். கலியன் நிறுவனத்தின் மிகக் கூர்மையான பகுப்பாய்வாளர்களால் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு எடுத்த வணிகத் தீர்மானங்களை அநியாயத்திற்கு உட்தகவல் வணிகத்துடன் முடிச்சுப்போட்டு குழப்பமான அர்த்தங்களைக் கொடுக்கும் மழுப்பலான, மங்கலான வாக்கியங்கள் வேண்டுமென்றே குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருப்பதைக் கவனித்தேன். என்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் எவை என்பதை நான் சரியாக விளங்கிக்கொள்வதற்கு முன்னதாகவே நான் குற்றவாளி ஆக்கப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டிருப்பதாக உணர்ந்தேன். குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் எட்டுப் பங்குச் சந்தை வியாபாரங்களிலும், கலியனின் மிகக் கூர்மையான நிதிப் பகுப்பாய்வாளர்களால் பரிசீலிக்கப்பட்டு எனக்குக் கொடுக்கப்பட்ட விரிவான அறிக்கைகளின் வழியேதான் நான் ஈடுபட்டிருந்தேன். அந்த ஆய்வு அறிக்கைகள் கோப்புகளில் இடப்பட்டு கலியன் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. எமது கலியன் நிறுவனத்தின் பகுப்பாய்வு முறை துல்லியமும் கண்டிப்பும் நிறைந்ததாகும். அங்கே உட்தகவல் வணிகம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசுத் தரப்புக்கோ இதெல்லாம் பொருட்டில்லாமலிருந்தது. அவர்கள் என்னுடைய கைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டு, பேசப்பட்டிருந்த துண்டு துணுக்குச் சொற்களை அவர்களுக்கு ஏற்றமுறையில் திரித்து வைத்துக்கொண்டு குற்றப் பத்திரிகையைப் புனைந்திருக்கிறார்கள். உண்மைக்கு முற்றிலும் புறம்பான ஒரு வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

உதாரணமாக, நிதி மேலாளரான டானியல் கேஸியோடு நான் நடத்திய உரையாடலை தங்கள் வசதிக்கு ஏற்றவகையில் மலினமான தந்திரத்தால் வளைத்திருந்தார்கள். அதாவது “இரகசியமாக வைத்திருங்கள்” என்ற எனது வார்த்தையைப் பிடித்துத் தொங்கினார்களே தவிர, எந்தச் சந்தர்ப்பத்தில், எது தொடர்பாக இப்படிக் கூறினேன் என்பதை மறைத்து விட்டார்கள். தொலைபேசி உரையாடலின் உள்ளடக்கம் பங்குச் சந்தை குறித்த இரகசியத் தகவல்களே என்று மொட்டையாக வாதிட்டார்கள்.

உண்மையில் என்ன நடந்ததென்றால், ஒரு மாலை வேளையில் நான் எனது குடும்பத்தினருடன் ஓய்வாக நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தபோது, டானியல் கேஸி அலைபேசியில் என்னை அழைத்தார். “அக்கமாய் நிறுவனப் பங்குகளின் மதிப்பு இறங்கப் போகிறது எனத் தெரியவருகிறது” என்றார். நான் பதிலுக்கு “நாங்கள் அதை எங்களது பகுப்பாய்வுகள் வழியாக ஏற்கனவே அறிந்திருக்கிறோம். அந்த நிறுவனத்தின் பங்குகள் இறக்கத்தைச் சந்திக்கும் என்று நாம் ஏற்கனவே பந்தயம் கட்டி, சொற்பமான பங்குகளையே வாங்கியுள்ளோம்” என்றேன்.

பங்குச் சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடையும் எனப் பந்தயம் கட்டுவதை மிக இரகசியமாகவே வைத்திருக்க வேண்டும். இல்லையெனில், எல்லோரும் அடித்துப்பிடித்து பங்குகள் வீழும் எனப் பந்தயம் கட்டினால், அதுவே அந்த நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றத்திற்கு வழி வகுத்துவிடும். இதனாலேயே நான் டானியல் கேஸியிடம் “இரகசியமாக வைத்திருங்கள்” என்றேன். இதற்கும் உட்தகவல் வணிகத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பது வெளிப்படை. ஆனால், இந்த ஒரு சாதாரண வார்த்தையைப் பூதாகரமாக்கி என்மீது உட் தகவல் வணிகம் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது.

எனது வணிக நடவடிக்கைகள் முழுவதுமே எழுத்து மூலமாகவே நடைபெறும். எனவே, எனது அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாகவே இருந்தன. எமது பகுப்பாய்வாளர்களின் பரிந்துரைகளும் வெளிப்படையாகவே இருந்தன. சட்டத்துறையைப் பொறுத்தவரை, ஆவணங்கள் ஒருவருக்கான நற்சான்றுப் பத்திரங்கள் அல்ல என்பதே அவர்களது நிலைப்பாடு. அரசுத் தரப்புக்கு என்னுடைய வணிக ஆவணங்கள் முழுவதையுமே பார்வையிடும் வாய்ப்பு இருந்தபோதும், அவர்கள் ஆவணங்களைச் செல்லாக்காகிதங்களாக உதாசீனம் செய்தார்கள். இமை வெட்டும் நொடிக்குள் எனது வாழ்வு பூகம்பப் பிளவுக்குள் வழுவிச் சென்றது.

நிகழச் சாத்தியமே இல்லாத ஒரு விடயம் நிகழ்ந்து, அது ஆழமான பின்விளைவுகளைக் கொண்டதாக அமையும்போது, அதைக் குறிப்பிடும் “கறுப்பு அன்னம்” என்றொரு பழமொழி இலத்தீன் மொழியில் உண்டு; ஆங்கிலத்திலும் வழக்கிலுள்ளது. அதுதான் என் வாழ்வில் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நான் கனவிலும் நினைத்திராதவாறு என்னுடைய வாழ்க்கை தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது. என்னைச் சுற்றிப் பயமுறுத்தல்கள், அவதூறுகள், அவசரத் தீர்ப்புக்கள் பின்னிக்கிடக்கின்றன. இந்த உலகம் என்னை எதை நோக்கி இழுத்துச் செல்கிறது என்பதை அறிய முடியாமல், படுக்கையில் விழுந்து கண்களை இறுக மூடிக்கொண்டேன்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

11713 பார்வைகள்

About the Author

ராஜ் ராஜரட்ணம்

திரு ராஜ் ராஜரட்ணம் அவர்கள் 1957 இல் கொழும்பில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கொள்ளுப்பிட்டி புனித தோமையர் கல்லூரியில் கற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று பள்ளிப் படிப்பை நிறைவுசெய்து சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றார். 1983 இல் பென்சில்வேனியா உவார்ட்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். ராஜ் ராஜரட்ணம் தனது பணியை முதன்முதலில் சேஸ் மான்ஹட்டன் வங்கியில் கடன் வழங்கும் அதிகாரியாகத் தொடங்கினார். 1985 இல் நியூயோர்க்கின் நீடம் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1987 இல் அந்நிறுவனத்தின் ஆய்வுப் பகுதியின் தலைவராகவும், மார்ச் 1991 இல் அந்நிறுவனத்தின் தலைவராகவும் ஆனார்.

1997 இல் தனது சொந்த நிறுவனமான கலியன் முதலீட்டு நிதியத்தை ஆரம்பித்தார். இந்நிதியத்தைப் பின்னர் அவர் கலியன் குழுமம் எனப் பெயர் மாற்றினார். இது உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றாக மாறியது. ஒரு காலகட்டத்தில் கலியன் குழுமம் 180 பணியாளர்களுடன் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிருவகித்தது.

2009 இல் அமெரிக்கப் புலனாய்வுப் பணியகம் ராஜ் ராஜரட்ணத்தைத் திட்டமிட்டுக் கைது செய்தது. உட்தகவல்களைப் பெற்று வர்த்தகம் செய்ததாகவும் 0.01 சதவீதம் குற்றமிழைத்ததாவும் அவர் மீது பொய்க்குற்றச் சாட்டுக்களை முன்வைத்தது. குற்றத்தைப் ஒப்புக்கொள்ளுமாறு அவர்மீது பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகித்தது. தான் நிரபராதி என்பதில் உறுதியாக நின்ற ராஜ் ராஜரட்ணம் அமெரிக்க நீதித்துறையில் உள்ள பேராசை பிடித்த சில தனிபர்களின் சதிகளாலும் பொய்ச்சாட்சிகளாலும் வஞ்சிக்கப்பட்டார். 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற ராஜ் ராஜரட்ணம் அவர்கள் 7 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து ராஜ் எழுதிய நூல் Uneven Justice என்ற பெயரில் 2021 இல் வெளிவந்தது. இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு 2024 இல் யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண போதனா மருத்துவமனை மன்றத்தால் வெளியிடப்பட்டது. ராஜ் ராஜரட்ணம் தற்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் மீள்கட்டுமானப் பணிகளுக்கு பல்வேறு வழிகளில் உதவி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)