ஐ.நா இனப்படுகொலை நியதிச்சட்டத்தின் 75 வருடங்கள் :நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள், சுவடியகங்கள்
Arts
18 நிமிட வாசிப்பு

ஐ.நா இனப்படுகொலை நியதிச்சட்டத்தின் 75 வருடங்கள் : நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள், சுவடியகங்கள்

February 27, 2024 | Ezhuna

மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய நோக்குகள், மரபுரிமைச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் , அவற்றின் தொடர் பேணுகையும் அதற்கான வழிமுறைகளும், சமயங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தக் கட்டுரைத்தொடர் மரபுரிமைசார் விடயங்களை வெளிப்படுத்தும். கள ஆய்வினையே பிரதான ஆய்வுமூலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைத்தொடரில், நூல்களில் இடம்பெற்றுள்ள மரபுரிமைசார் விடயங்கள், செவிவழிக்கதைகள், மக்களுடனான உரையாடல்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், ஊடகச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, விஞ்ஞானபூர்வமான நோக்குநிலையில் இந்தக் கட்டுரைத்தொடர் அமைகின்றது.

அநேக பெயர்களுள்
அவனது பெயரை மறந்துவிடுவோம் என அஞ்சுகிறேன்
அவனை மறக்க நான் அஞ்சுகிறேன்
மாரி மழையிலும், புயலிலும்
எம் இதயக் காயங்கள் ஆறக்கூடும்
என நான் அஞ்சுகிறேன்…

– மஹவுட் தர்வீஷ் (பலஸ்தீனம்) –

Image 1

“இனப்படுகொலை என்பது பாரிய எண்ணிக்கையிலான கொலைகளை மட்டும் குறிப்பதல்ல; திட்டமிடப்பட்ட வகையில் சுவடிக்காப்பகங்கள், நூலகங்கள் மற்றும் கல்லறைகள் உட்பட ஒரு சமூகத்தின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை அழிப்பதற்கான கட்டமைக்கப்பட்ட எந்தவொரு செயற்பாட்டுத் தொகுதியும் இனப்படுகொலைதான்.”

– சேராபிம் (2016) –

அடிப்படையில், இனப்படுகொலை என்பது குறிப்பிட்ட ஒரு மக்கட் கூட்டத்தையும், அவர்களது பண்பாட்டினையும் திட்டமிட்டு அழிக்கும் செயற்பாடாகும். உலகம் பூராவும் இவ்விதமான இனப்படுகொலைகளது பின்னணியில் உருவாக்கப்பட்ட, அவற்றை நினைவு கூர்வதற்கான நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், சுவடிக்கூடங்கள் காணப்படுகின்றன. இவை அவற்றை நினைவு கூர்தலுக்கான – அவற்றின் தடயங்களைப் பாதுகாப்பதற்கான இடங்களாகச் செயற்படும். அவ்வகையில் இவை ‘மறத்தல்’ அல்லது ‘மறக்கடித்தல்’ என்ற செயற்பாடுகளுக்கு எதிரான ‘நினைவுபடுத்தல்’ மற்றும் ‘நினைவுகூர்தலின்’ அரசியற் பிரநிதித்துவங்களாகும். வன்முறை – அநீதி தொடர்பான தொடர்ச்சியான உரையாடலுக்கான களங்களாக அமையும் இவ்விடங்கள் மனித குலத்திற்கான பொதுநீதியை தொடர்சியாகக் கோருகின்றன. மனிதனது வாழ்வதற்கான அனைத்து உரிமைகளையும் வற்புறுத்தும் அவை வரலாற்றில் மீளவும் ஒரு தடவை இத்தகைய படுகொலைகள் – மனித குலதிற்கு எதிரான அநீதிகள் இடம்பெறக் கூடாது என்ற கோரிக்கையை இடையறாது தமது இருப்பினூடாக வற்புறுத்துகின்றன. அவ்வகையில், சமூகங்களுக்கிடையே காணப்படும் சகிப்பின்மை, ஒடுக்குமுறை, வெளியேற்றுதல் மற்றும் சர்வாதிகாரத்தின் பேரழிவுகளை எடுத்துப் பேசும் இவை பார்வையாளர்கள் அவர்களுடன் எடுத்துச்செல்ல வேண்டிய மனித குல மாண்பைப் பேணும் நற்பெறுமானங்கள் பற்றிச் சிந்திக்க தூண்டுகின்றன. அதன் மூலம் மனித இருப்புக்கும் – அதற்கான அவர்களது உரிமைக்குமான சட்டப்பூர்வமான வெளியை உறுதிப்படுத்துவதற்கும், சமத்துவத் தன்மையுடைய சமூக மாற்றத்தை உருவாக்குவதற்குமான ஜனநாயகப் பண்புடைய சமூகத்தைக் கட்டியெழுப்ப முற்படுகின்றன. அமைதியான, வன்முறையற்ற, சமநீதியுடைய, உள்வாங்கும் தன்மையுடைய உலகம் அவற்றினது பிரதான இலக்காகும். பரந்த அர்த்தத்தில் அவை இத்தகைய மாற்றங்களுக்கான அரசியற் கருவிகளாகச் செயற்படுகின்றன. அவற்றிற்கான முன்னோடிச் செயற்பாடுகளுள் ஒன்றாக ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலைக்கு எதிரான நியதிச்சட்ட உருவாக்கம் காணப்படுகிறது. இத்தகைய பகைப்புலத்தில் தான் இனப்படுகொலை அருங்காட்சியகங்களும் தோற்றம் பெற்றன. பெருமளவிலான இந்த அருங்காட்சியகங்கள் ஹிட்லர் காலத்து படுகொலைகளை (ஹொலக்கோஸ்ட்டை) நினைவுகூரும் அருங்காட்சியகங்களாக காணப்படுகின்றன.

குறிப்பாக 2 ஆம் உலகமகாயுத்தத்துக்கு பிற்பட்ட காலத்தில் தொடங்கி இன்றுவரைக்கும் அவை இத்தகைய மனிதகுலத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மையமாகக்கொண்ட நினைவிடங்களை உற்பத்திசெய்தவாறே உள்ளன. இந்த செயற்பாட்டினுடைய முன்னோடி முயற்சியாக 1939 இல் அல்பிரெட் வீனர் என்பவரால் உருவாக்கப்பட்ட Jewish Central Information Centre in London கருதப்படுகிறது. இந்த சுவடிக் காப்பகமே பின்வந்த அருங்காட்சியகங்களுக்கான அடித்தளம் என்று கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அமைந்த வாஷ்ங்டன் டி.சியிலுள்ள அமெரிக்க ஹொலக்கோஸ்ட் அருங்காட்சியகம் முதல் கம்போடியாவில் உருவாக்கப்பட்ட Tuol Sleng இனப்படுகொலை அருங்காட்சிகம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களிலும் நினைவிடங்களினதும் பெயர்கள் காணப்படுகின்றன. 1961 இல் உருவாக்கப்பட்ட நினைவுகளின் கூடம் (Hall of Remembrance) ஹொலக்கோஸ்ட் பற்றிய பிரதானமான முன்னோடி அருங்காட்சியகமாக கருதப்படுகிறது. ஒரு முடிவடையாத நெருப்பு, அதிலிருந்து வெளிவரும் புகை இனப்படுகொலையின் நினைவாக இந்த இனப்படுகொலை அருங்காட்சியத்தில் எரிந்து கொண்டிருக்கிறது.

அதேசமயம், 1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்த அதே வருடத்திற்றான் மேற்படி ஐக்கிய நாடுகள் சபை இனப்படுகொலைக்கு எதிரான மேற்படி நியதிச்சட்டத்தையும் உருவாக்கியது. அவ்வகையில், அவை இரண்டிற்கும் வயது ஒன்றாகும்; 75 வருடங்கள். அதேநேரம், இவ் இரண்டு களங்களிலும் இனப்படுகொலை தொடர்பான நியாயங்கள் – செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பது நீதி தொடர்பிலான ஆழமான வாதத்திற்கு வழி திறக்கும். அவை நீதியின் அநீதியை அல்லது நீதி விளையாட்டு (Justice game) எனும் இராஜதந்திரத்தின் அறமின்மையையும் சுட்டிக் காட்டி நிற்கின்றன என்பது மிகவும் வருத்தத்திற்குரிய முரண்நகையாகும். இவ்வகையில் இருபதாம் நூற்றாண்டு பல இலட்சம் மனிதப் பலிகளைக் கண்டது. 187 இலட்சத்திற்கு அதிகமானவர்கள் இருபதாம் நூற்றாண்டிற் பலியானதாக ஹொப்ஸ்பாம் குறிப்பிடுகிறார். இவற்றின் பின்னணியில் பலியிடப்படுகை (victimization) என்பது இன்று முக்கியமான அரசியல் அறம் மற்றும் சமூகம் சார்ந்த பேசுபொருளாக உள்ளது.

ஆனால் எது இனப்படுகொலை? எது இனப்படுகொலை இல்லை; எதை நினைவுகூர்வது ? எதனை நினைவுகூர்வதில்லை என்பதில் உலகம் எல்லோருக்கும் சமனான ஒரு நீதிபரிபாலனச் சட்டகத்தைக் கொண்டிருப்பதில்லை. என்பதனால் இனப்படுகொலை என்பதை பிரகடனப்படுத்தலில் சர்வதேச அரசியலை மையமாகக்கொண்ட அசமத்துவம் காணப்படுகிறது. ஒருபக்கம் நீதியைக் கோரும் அரசுகள், இன்னொரு பக்கம் அநீதியை அங்கீகரிக்கவும் – உற்பத்தி செய்யவும் செய்கின்றன. இதன்காரணமாக பலநூற்றுக்கணக்கான இனப்படுகொலைகள் இன்றுவரைக்கும இனப்படுகொலைகளாக அங்கீகரிக்கப்படவில்லை. ஹிட்லரது இனப்படுகொலைகள் உலகத்திற்கு முன்னால் காணப்படுகின்ற மோசமான இனப்படுகொலையின் உதாரணமாக இருந்தபோதிலும் ஹொலக்கோஸ்ட் அருங்காட்சியகங்களை அமைப்பவர்கள் யாவரும் எப்போதும் கண்டிக்கத்தக்க ஹிட்லரது இனப்படுகொலைகளுக்கு அப்பால் தமது சொந்த அரசியல் நலனுக்காக ஹொலக்கோஸ்டை விநியோகம் செய்தலை அறம்சார்ந்த நீதிக்கான ஒரு பயில்வு போல் முன்னிறுத்தினாலும் அதற்குள் உள்ளடங்கிய அவர்களுக்கேயான சொந்த அரசியல் இலாபங்கள் உள்ளன.

ஒப்பீட்டளவில் அதிகமாக ஹொலக்கோஸ்ட் அருங்காட்சியகங்களைக் கொண்ட அமெரிக்கா, ஹிட்லரது யூத இனப்படுகொலையை நினைவுகூர்தல் என்ற போர்வையின் கீழ் இஸ்ரேலின் இருப்புக்கான வரலாற்றுத் தர்க்கத்தை உருவாக்கும் மறைமுக அரசியலை செய்கின்றது. அதேநேரம் அது பலஸ்தீனில் நடக்கும் படுகொலைகளை நீதியின் பாற்பட்டு பார்ப்பதில்லை. இந்த நிலவரம் நீதியின் அசமத்துவம் என்பதை மட்டுமன்றி இனப்படுகொலைகளுக்கு எதிரான அருங்காட்சியகங்கள் எல்லாப்பொழுதுகளிலும் மனிதகுல மாண்பிற்கு எதிரான இழிசெயலாக சாட்சியம் செய்தலை மட்டும் நோக்கமாகக் கொண்டிருப்பதில்லை என்கின்ற மோசமான யதார்த்தத்தையும் எடுத்துச் சொல்கிறது.

Image 2

கம்போடியாவிலும் ருவாண்டாவிலும் உள்ள இனப்படுகொலை அருங்காட்சியகங்கள் மண்டையோடுகளினால் உருவாக்கிய நிலப்பரப்புகளையும், எலும்புகளினாலும் கொலையுண்டவர்களின் ஆடைகளினாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஒளிப்படங்களினாலும் உருவாக்கிய ‘புதிய’ வன்முறைகளின் நிலப்பரப்புகளையும் எப்போதும் பார்த்து, உலகம் நீதியின் பார்ப்படுவதோ குற்றச்செயல்களுக்கு எதிராக அணிதிரள்வதோ தேசங்கள்-இனங்களது சுயாதீனத்தை ஒப்புக்கொள்வதோ கிடையாது. பதிலாக பெரும்பாலான சமயங்களில் அவை அவரவருக்கு ஏற்ற வகையில் அவரவர்களை நியாயப்படுத்தும் அரசியல் தர்க்கமாகவே நிலைநிறுத்தப்படுகிறது.

Image 3

இந்தநிலையில் இவ்வகையான அருங்காட்சியகங்களின் விளைபயன் என்ன என்கின்ற கேள்வி பிரதானமானது. அதேபோலவே விளிம்புநிலைப்படுத்தப்பட்டு அரசில்லாத் தரப்புகளாக உள்ள மக்கள் கூட்டங்களின் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைகளை நிலைநிறுத்த முடியாமையின் யதார்த்தத்தை சிலவேளைகளில் இனப்படுகொலைகளை பேசும் அல்லது பேச அனுமதிக்கப்பட்ட அருங்காட்சியகங்கள் எவ்வாறு அதனை மறுத்த சமூகங்களுக்கு முன்னால் ஒரு இரண்டகத் தன்மையின் கட்டுமானமாக தோற்றம் பெற்றுள்ளது என்பது இதன்தொடர்ச்சியாக உருவாகும் இன்னொரு நிலவரமாகும். இருந்தபோதிலும் வரலாற்றுக்கு சாட்சியமாக இருத்தல் மேலாதிக்கமான வரலாற்று உரையாடல்களை குழப்பிவிடுதல் என்பனவற்றின் பின்னணியில் இவற்றினது இருப்பு முக்கியமானது.

இந்தப் பின்னணியில் ஈழத்தமிழர்களின் பண்பாட்டு வரலாற்று உருவாக்கத்தின் சமகாலத்தில் இனப்படுகொலை அருங்காட்சியகம் என்பது தவிர்க்கப்பட முடியாத ஒரு தேவையாக உருவாகிறது. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் மீதான படுகொலைகள் சர்வதேச அரசியலின் தேவைகளின் பகைப்புலத்தில் இனப்படுகொலையாக பிரகடனப்படுத்தப்படாத ஒரு தந்திர அரசியலின் சமகால உதாரணங்களில் ஒன்றாகக் காணப்படுகிறது. இருந்தபோதிலும். ஒரு கூட்டு நினைவாக பாதிக்கப்பட்ட மக்களின் தரப்பிலிருந்து அது படுகொலையின் நினைவாக கருதப்படுகையில் அதற்கான அருங்காட்சியகங்களை உருவாக்குதல் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டிய அவர்களது தார்மீக உரிமையாக பார்க்கப்பட வேண்டும். ஆனால் உடன்நிகழ்கால உலக ஒழுங்கும் அரசியலும் அதற்கான வாய்ப்பை பொதுவெளியில் மிகப்பெரியளவில் அங்கீகரிக்காத ஒன்றாகவே வைத்துள்ளது.

அதேசமயம் ‘அரசற்ற ஒரு தரப்பாக’ ஈழத்தமிழர்கள் தமக்கான நினைவிடங்களை அமைத்தல் என்பது இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஒரு உடனடி விளைவாக இனப்படுகொலை அருங்காட்சியகம் என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே அவர்களுக்கு முன்னால் காணப்படுகின்றது.

ஆனால் தேசம் என்பது தேசங்கடந்தும் பௌதீக அர்த்தமுடைய ஒன்றாக அல்லாமல், பூச்சிய வெளியும் ஒரு தேசவெளியாக மாற்றப்படலாம் என்ற எண்ணப்பிரகாரத்தின் கீழ் இனப்படுகொலைக்கான எண்மிய அருங்காட்சியகங்களுக்கான வாய்ப்பு ஒப்பீட்டளவில் சாத்தியமுள்ளதாக காணப்படுகிறது. ஆனால் அதனை உருவாக்குவதற்கான ஒன்றிணைந்த எந்த நிகழ்ச்சிநிரலும் எப்போதும் போல ஈழத்தமிழ்த் தரப்புகளிடம் இல்லை. கம்போடியாவிலோ, ருவாண்டாவிலோ உள்ளது போல் பௌதீக எச்சங்களைக் கொண்டு அல்லது அதன் விஸ்தரிப்பாக இருக்கக்கூடிய ஆவணங்கள் முதலியவற்றையும் உள்ளடக்கிய பௌதீக அருங்காட்சியகம் ஒன்று உடனடிச் சாத்தியமற்ற ஒன்றாக இருக்கும் போது எண்மிய – பூச்சிய தொழில்நுட்பத்தின் வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொண்டும் இனப்படுகொலை அருங்காட்சியகத்தை ஈழத்தமிழர்களால் உருவாக்க முடியும்.

இது ஒருபுறம் இருக்க புலம்பெயர்ந்த நாடுகளின் அரசியல் சட்ட நியமங்களுக்கு உட்பட்ட வகையில் ‘தேசம் கடந்த இனப்படுகொலை அருங்காட்சியகங்களை’ பௌதீக ரீதியாக உருவாக்கும் முயற்சிகளை ஈழத்தமிழர்கள் பரிசோதித்துப் பார்ப்பதற்கான சாத்தியமான நிலவரங்கள் உலகளாவிய ரீதியில் உண்டு. ஆனால் குழுக்களாகவோ, வாய்ச்சொல்லில் வீரர்களாகவோ, செத்தபாம்படித்து மகிழும் தரப்புகளாகவோ அல்லது அரசியல் நிதி மூலங்களை வலுவான ஒரு பொறிமுறைக்கூடாக ஒரு பெரும் முதலீடாக மாற்றுவதற்கான பொறிமுறையைக் கொண்டிராத எந்தவொரு தலைமையும் அற்ற ஈழத்தமிழர்கள் அதைச் செய்ய முடியுமா என்பது நம் முன்னால் உள்ள அடுத்த கேள்வியாகும்? இத்தகைய பின்னணியில் அண்மைய கடந்த ஆண்டுகளில் கனடா-பிரம்டன் நகரசபை ஈழத்தமிழ் இனவழிப்புக்கு எதிரான நினைவுச் சின்னத்தை உருவாக்கியுள்ளது. இதன் பரிணாமமாக சுவடியகங்களும், அருங்காட்சியகங்களும் கூட அவசியமானவை. .

நினைவுகளை முதலீடாகவும் கடந்த கால எச்சங்களை தடயமாகவும் பாதுகாக்காத, மறுவிநியோகம் செய்யாத எந்தவொரு மக்கள் கூட்டமும் தமது அரசியல் அபிலாசைகளையும் தேவைகளையும் அதிக தூரம் எடுத்துச்செல்ல முடிவதில்லை.


ஒலிவடிவில் கேட்க

6539 பார்வைகள்

About the Author

பாக்கியநாதன் அகிலன்

பாக்கியநாதன் அகிலன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும் (கலை வரலாறு), பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் (கலை விமர்சனம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளாகப் பணிபுரியும் அகிலன் தனது கலாநிதிப்பட்ட ஆய்வை புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுவருகின்றார்.

'பதுங்குகுழி நாட்கள்', 'சரமகவிகள்', 'அம்மை', 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்பன இவரது கவிதைத் தொகுப்புகளாகும்.

இவரின் ஏனைய நூல்களாகக் 'காலத்தின் விளிம்பு' என்ற மரபுரிமை சார்ந்த நூலும் 'குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்கள் ஐந்து' ஆகியவை அமைவதுடன் 'வெங்கட்சாமிநாதன் – வாதங்களும், விவாதங்களும்' என்ற நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராகவும் உள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)