பொலநறுவைக் கால சிங்கள அரசர்களின் நிர்வாகத்தில் பின்பற்றப்பட்ட சோழர்களின் நடைமுறைகள் : சாசனங்களை ஆதாரமாகக் கொண்ட ஆய்வு
Arts
17 நிமிட வாசிப்பு

பொலநறுவைக் கால சிங்கள அரசர்களின் நிர்வாகத்தில் பின்பற்றப்பட்ட சோழர்களின் நடைமுறைகள் : சாசனங்களை ஆதாரமாகக் கொண்ட ஆய்வு

June 25, 2024 | Ezhuna

தென்னாசியாவிலேயே தொன்மையான, தொடர்ச்சியான வரலாற்றுப் பாரம்பரியங்கள் கொண்ட நாடாக இலங்கை காணப்படுகின்றது. இந்நாட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துள்ளனர். அன்று தொட்டு இன்றுவரை பல்லினப் பண்பாடு கொண்ட மக்கள் வாழுகின்ற நாடாக இலங்கை காணப்படுகின்றது. இங்கு பல்லினப் பண்பாட்டை வெளிப்படுத்தும் உச்ச காலப் பகுதியாக பொலநறுவை இராசதானி யுகம் விளங்கியது. இப்பொலநறுவை இராசதானியானது இலங்கையினுடைய இராசதானி வரலாற்றில், அனுராதபுரம் சோழர்களினால் கைப்பற்றப்பட்ட பின்னர், அவர்களால் உருவாக்கப்பட்டதாகும். மகாவலி கங்கையைச் சூழவுள்ள பொலநறுவை, சோழர்களால் தலைநகரமாக்கப்பட்டு ஜெனநாதபுரமென அழைக்கப்பட்டது. இவர்களது நேரடி ஆட்சி கிட்டத்தட்ட 77 ஆண்டுகள் நிலவியது. கி.பி 1070 இல் முதலாம் விஜயபாகு சோழர் ஆட்சியை இலங்கையிலிருந்து அகற்றியதைத் தொடர்ந்து சிங்கள அரச வம்சத்தினரின் ஆட்சிக் காலம் மீண்டும் உதயமாகிறது.

சிங்கள மன்னர்கள் சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட பொலநறுவையை தமது தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இதனால் முதலாம் விஜயபாகு காலம் தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டில் பொலநறுவையை வெற்றிகொண்ட கலிங்கமாகனது ஆட்சியோடு பொலநறுவை வீழ்ச்சியடைந்தாலும், பொலநறுவை சிங்கள மன்னர்களின் இராசதானியாக விளங்கிய காலப்பகுதியிலும், அதனைத் தொடர்ந்து வந்த தென்மேற்கு இராசதானி காலத்திலும், தமிழர் – சிங்களவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் பொலநறுவைக் காலத்திலிருந்து பெருமளவு காணப்பட்டது. இதற்கு சோழர் ஆட்சியின் விளைவே முக்கிய காரணமாகும். இதனடிப்படையில் தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து அரசியல், நிர்வாகம், படை நடவடிக்கைகள், திருமண உறவுகள், கலை உருவாக்கங்கள் போன்றவற்றில் பொதுவான ஒத்துழைப்பு வழங்கினர். இதனால் முதலாம் விஜயபாகு, சோழர் ஆட்சியை இலங்கையிலிருந்து அகற்றினாலும் தொடர்ந்து வந்த சிங்கள அரச வம்சத்தினரது ஆட்சிக் காலத்திலும் தமிழ்ப் பண்பாடும், சிங்களப் பண்பாடும் இணைந்த வகையில் பல்லினப் பண்பாடு பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்றதை பாளி இலக்கியங்களில் ஆங்காங்கே வரும் குறிப்புகளும், தொல்லியல் சின்னங்களும், சாசனங்களும் உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறு சிங்கள மன்னர்களின் ஆட்சிக்காலப் பகுதியில் சிங்கள அரசர்களின் நிர்வாகத்தில் சோழர்களின் நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. அவற்றினை விரிவாக நோக்குவோம்.

சிங்கள அரசர்களின் நிர்வாகத்தில் பின்பற்றப்பட்ட சோழர்களின் அரசியல் நடைமுறைகள், சோழர் இலங்கையை விட்டு நீங்கிய பின்பு தொடர்ந்தும் சிங்கள மன்னர்களின் நிர்வாகத்தில் காணப்பட்டன. இதனால் தமிழர்கள் சிங்களவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் இச்சிங்கள மன்னர்களின் ஆட்சியில் பெருமளவு காணப்பட்டது. இதனால் சிங்கள மன்னர்களது ஆட்சி சோழர்களது நடைமுறைகள் தொடர்வதற்கு சாதகமாக அமைந்து கொண்டது. எடுத்துக்காட்டாக விஜயபாகு சோழருக்கு எதிராக போரிட்டானே தவிர தமிழருக்கு எதிராகப் போரிடவில்லையென அவனது பனாக்கடுவ செப்பேட்டில் குறிப்பிடப்பட்டதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மேலும், சிங்கள அரசர்களின் ஆட்சி நிர்வாகத்தில் தமிழ்ப் பிரதானிகளும் செயற்பட்டமை இவர்களின் ஆட்சியில் சோழர்களின் நடைமுறைகள் பின்பற்றப்பட்டமைக்கு சான்றாகும். அதாவது தக்கணதேச அரசனாக இருந்த மாணபரணனின் ஆட்சியில் மாக்கலிங்க கணபதி, விஜயாபரணன் ஆகிய தமிழ்ப் பிரதானிகள் பஞ்ச பிரதானிகள் என்ற குழுவில் உள்ளடங்கியிருந்தனர். இவர்கள் மாகல் என்ற பகுதியில் கம்மாளருக்கும், வண்ணாருக்கும் இடையே சமுதாய உறவுகளைக் குறித்து தகராறு நடைபெற்றபோது பழைய வழமைகளைப் பின்பற்றி விசாரித்துத் தீர்ப்பு வழங்கினர். இத்தீர்ப்பு தொடர்பான கட்டளையை, கி.பி 1118 இல் மாக்கலிங்க கணபதியின் பெயரால் தமிழில் “யுகாந்திரமாவும் நிற்பதாக அருளிச் செய்ய இக்கல்லு வெட்டு விக்சேன் மாக்கலிங்க கணவதியேன்” என்ற சாசனத் தொடரின் மூலம் அறியமுடிகின்றது. இச்சாசனம் தமிழில் எழுதப்பட்டதனூடாக மேற்படி இரு சமூக பிரிவினரும் தமிழர் என்பதையும், தக்கண தேச தமிழ்க் குடிகளின் சமுதாய வழமைகளைத் தமிழ் பிரதானிகளே விசாரணை செய்து தீர்ப்பு வழங்கினர் என்பதையும், அத்தீர்ப்பினை தமிழ் மொழியில் வெளியிட்டமையிலிருந்து பொலன்னறுவை இராசதானி காலச் சிங்கள அரசர்களின் நிர்வாகத்தில் தமிழ் பிரதானிகளுக்கும் தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.

சிங்கள மன்னர்கள் சோழர்களுடைய நிர்வாக அமைப்பை மேல்மட்டத்தில் மாற்றியமைத்து ஏனைய மட்டங்களில் பழைய நிர்வாக அமைப்பையே தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தியிருந்தனர். அதாவது, சோழர் ஆட்சியில் பின்பற்றப்பட்ட தமிழ் நிர்வாக முறை முதலாம் விஜயபாகுவின் ஆட்சியுடன் சிங்கள நிர்வாக முறைக்கு மாறியது. ஆயினும் அவன் ஆட்சி காலத்திலிருந்து தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த இடங்களில் நிர்வாகம், வாணிபம், மதம் சார்ந்த செய்திகள், ஆணைகள் தமிழில் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் விஜயபாகு, முதலாம் பராக்கிரமபாகு, கஜபாகு, நிஸங்க மல்லன் ஆகிய சிங்கள மன்னர்களின் ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகளை உதாரணமாக குறிப்பிடலாம். மற்றும் சோழ மன்னர்களைப் போல், பின் வந்த சிங்கள மன்னர்களும் மெய்க்கீர்த்தி எழுதும் முறையினை கையாண்டார்கள். இதிலிருந்து சோழர்களின் நடைமுறைகள் சிங்கள அரசர்களின் நிர்வாகத்தில் பின்பற்றப்பட்டதனை அவதானிக்க முடிகின்றது.

இக்காலச் சிங்கள மன்னர்கள், சோழரால் உருவாக்கப்பட்ட தலைநகரமான ஜனநாதமங்கலத்தையே (பொலநறுவையையே) தொடர்ந்தும் ஆட்சித் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இதனால் சோழர்களுடைய அம்சங்கள் இவர்களின் நிர்வாகத்திலும் பின்பற்றப்பட்டன. அதாவது முதலாம் விஜயபாகு சோழர் ஆட்சியை நீக்கிவிட்டு அனுராதபுரத்தில் முடிசூடிக்கொண்டாலும், பொலநறுவையையே தனது மைய ஆட்சிப் பீடமாகக் கொண்டிருந்தானென அவனது அம்பகமுவ கல்வெட்டினூடாக அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. இச்செயற்பாட்டினால் சோழர்களின் நடைமுறைகள் சிங்கள அரசர்களின் நிர்வாகத்திலும் பின்பற்ற இவர் துணைபுரிந்தார்.

சோழ நிர்வாகத்தில் இருந்த தமிழ் மன்னர்களைப் போல், சோழருக்கு பின் ஆட்சி பீடம் ஏறிய சிங்கள மன்னர்களும் பிரதேசங்களை மண்டலங்களாகப் பிரித்து நிர்வாகம் செய்யும் முறையைக் கடைப்பிடித்தனர். உதாரணமாக முதலாம் பராக்கிரமபாகு தக்கண தேச அதிபதியாகியபோது மண்டலிகரை நியமித்தானென அவனால் வெளியிடப்பட்ட கல்வெட்டுகளில் ஒன்றான தெவனகலக் கல்வெட்டு கூறுகின்றது. சிங்கள மொழியில் ‘மண்டலிக’ என்பது மண்டல அதிபருக்குரிய பதவிப் பெயராகும். 

பொலநறுவை இராசதானிக் காலத்தில் வெளியிடப்பட்ட கல்வெட்டுகளில் அதிகாரி, முதலி முதலான பெயர்கள் காணப்படுகின்றமை, முதலாம் விஜயபாகு மன்னன் ஆட்சியின்போது தமிழ் லிகிதர் நூல் எனும் பதிவேடு காணப்பட்டமை (நடராசா 1973:24), முதலாம் விஜயபாகு இறந்தபோது தந்த தாது கோவிலின் பாதுகாப்புப் பொறுப்பினை தமிழ்ப் படை வீரர்கள் எடுத்துக்கொண்டமை போன்றன சிங்கள மன்னர்கள் தமிழ்ப் பண்பாட்டிற்கு தமது பங்களிப்பினை மேற்கொண்டமைக்குச் சான்றாகும். 

சிங்கள மன்னர்களின் ஆட்சியில் தமிழ் அதிகாரிகள் படை அமைப்பிலும், நிர்வாக சேவையிலும் உயரிய பதவிகளில் சேவை ஆற்றியதோடு நீர்ப்பாசனத் துறையிலும் அவர்கள் அதிகாரம் படைத்தவர்களாகக் காணப்பட்டனர். எடுத்துக்காட்டாக முதலாம் விக்கிரமபாகுவின் படையில் சேவை புரிந்த கண்டன் பிலத்தவன் என்ற தமிழ் அதிகாரி, மகாகலா ஓயா என்னும் ஆற்றிலிருந்து நீர் பாச்சுவதற்கென துங்குவர என்னும் இடத்தில் வாய்க்கால் ஒன்றினை அமைத்திருந்தான். இவ்வாய்க்காலை வெட்டிக்கொண்டு வேறொருவரும் நீர் பாய்ச்சக்கூடாதென அரசன் கட்டளையிட்டான். இவ்வாறு சிங்கள மன்னர்கள் தமது ஆட்சியில் தமிழர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம், சோழர்களது அம்சங்கள் இவர்களது ஆட்சியில் தொடர்வதற்குச் சாதகமாக அமைந்தது.

சோழரின் ஆட்சி கி.பி 1070 இல் வீழ்ச்சியடைந்தாலும் இவர்களின் ஆதிக்கம், நிர்வாக முறை, பண்பாடு என்பன தொடர்ந்து வந்த சிங்கள அரசர்களின் நிர்வாகத்திலும் நடைமுறையில் காணப்பட்டன. இதற்குச் சான்றாக கோமாரன் கடவல என்னும் இடத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டினைக் குறிப்பிடலாம். பொலநறுவையில் சிங்கள மன்னர்களின் ஆட்சி ஏற்பட்டு ஏறத்தாள 125 ஆண்டுகளின் பின்னரும் தமிழ் பிராந்தியங்களில் மும்முடிச் சோழ மண்டலம் என்ற நிர்வாகப் பெயரும் தமிழ் நிர்வாக முறையும் இருந்தன என்ற புதிய செய்தியை இக்கல்வெட்டு தருகின்றது. இக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலத்தில், இப்பகுதியில் சோழர் ஆட்சிக்குப் பொறுப்பாக மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் படைத்தளபதிகளில் ஒருவனான அல்லது அரச பிரதிநிதியான குலோத்துங்கச் சோழ கலிங்க ராஜன் இருந்துள்ளான் என்றும், இவனே கங்கராஜ காலிங்க விஜயபாகுவிற்கு (கலிங்கமாகனுக்கு) பட்டாபிஷேகம் செய்தான் என்றும் அறியமுடிகின்றது. 

சிங்கள அரசர்களின் ஆட்சியில் சோழர் ஆட்சிக் காலத்தைப் போலவே வேளக்காரர், அகம்பாடியர், வீரக்கொடியர் போன்றோர் போர்களில் முக்கியம் பெற்றிருந்தனர். மற்றும் முதலாம் விஜயபாகு, முதலாம் பராக்கிரமபாகு போன்ற மன்னர்கள் தமது அரசையும் பௌத்த மதத்தையும் பாதுகாக்கின்ற பொறுப்பை வேளக்காரப் படைப் பிரிவிடம் ஒப்படைத்தனர். வேளக்காரப் படைப் பிரிவு “அரசனுக்காக எந்த இடத்திலும் உயிரை விடுவதற்குத் தயார்” என்ற உறுதி மொழியினைக் கொண்டிருந்தது. இவ்வாறு சிங்கள அரசர்களின் நிர்வாகத்தில் வேளக்காரப் படையினர் முக்கிய இடம் பெற்றுள்ளனர். முதலாம் விஜயபாகு காலத்தில் அமைக்கப்பட்ட வேளக்காரர் கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகின்றது (பத்மநாதன் 2006:225-229).

முதலாம் பராக்கிரமபாகுவின் உள்நாட்டு, வெளிநாட்டுப் போர்களின்போது தமிழ்ப் படை வீரர்கள் பெரும் பங்கு கொண்டனர். உதாரணமாக, இவனின் உள்நாட்டுப் படையெடுப்பின்போது படைத்தளபதியாக மலையராயர் எனும் தமிழதிகாரியோடு ரக்கா எனும் இன்னொருவனும் ஈடுபட்டதற்கான சான்றுகள் தெவனகலக் கல்வெட்டில் உள்ளன. இவனது வெளிநாட்டுப் படையெடுப்பின்போது ஆதித்தன் என்பவன் தளபதியாக விளங்கியமைக்கு திருவாலங்காடு செப்பேடு சான்றாகக் காணப்படுகின்றது. 

சிங்கள அரசர்களின் நிர்வாகத்தில் பின்பற்றப்பட்ட சோழர்களின் நடைமுறைகளில் ஒன்றாக சோழ வணிகக் கணங்களுக்கு வாணிப நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வழங்கப்பட்டமை காணப்படுகிறது. உதாரணமாக ஐநாற்றுவர், நானாதேசிகர், பரதேசி வாணிகர் போன்றோர் வாணிப நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். வேளக்காரப் படை பற்றிய பல முக்கியமான விபரங்கள் பொலநறுவைக் கல்வெட்டில் உள்ளன. சிங்கள மன்னர் ஆட்சியில் செயற்பட்ட வணிகக்கணங்கள் தொடர்பான கல்வெட்டுகள் இலங்கையின் பல பாகங்களிலும் கிடைக்கப் பெற்றுள்ளன (பத்மநாதன் 2006:145-206).

சிங்கள மன்னர்களின் ஆட்சியில் நானாதேசிகர் தங்கள் வாணிப நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தின் ஆதரவினையும், அனுமதியினையும், அங்கீகாரத்தையும் பெற்றிருந்தனர். லீலாவதி ஆட்சிக்காலத்தில் அனுராதபுர நகரில் அமைக்கப்பட்டிருந்த தான சாலைகளுக்குத் தேவையான வாசனைச் சரக்கு வகைகளை நானாதேசிக வியாபாரிகள் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை லீலாவதி மேற்கொண்டிருந்தார். பரதேசி வாணிகர் கி.பி 12 ஆம் நூற்றாண்டிலே இலங்கையில் கடல் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனை முதலாம் பராக்கிரமபாகுவின் நயினாதீவுக் கல்வெட்டின் மூலம் அறிய முடிகின்றது. 

சிங்கள அரசர்களின் காலத்திலும் வேளக்காரன், அகம்பாடியர் போன்றோர் இராணுவ நடவடிக்கையில் மட்டுமன்றி இந்து சமய நடவடிக்கைகளிலும் பெரிதும் ஈடுபட்டனர். முதலாம் விஜயபாகுவின் பாலமோட்டைச் சாசனத்தில் வரும் “இத் தர்மம் அழிவு வராமல் நிலைநிறுத்துபவராக ஸ்ரீ விக்கிரம சலாமேகத் தெரிந்த வலங்கை வேலைக்காரன் என்று திருநாமமிட்டு பேருஞ் சாத்தியது” எனும் தொடர் இதற்கு ஆதாரமாகும். நங்கை சானி எனும் விதவைப் பெண் தன்னுடைய கணவனின் பெயரில் தென் கைலாச கோயிலுக்கு வழங்கிய தானம் தடைபடாமல் நிறைவேற்றுவதற்கு வேளக்காரப் படையிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதை இது குறிப்பிடுவதாவது, இந்துக் கோயில்களின் பாதுகாப்பிலும் சோழப் படை பயன்படுத்தப்பட்டதன் சான்றாக அமைகிறது (பத்மநாதன் 2006:133-134).

சிங்கள அரசர்களின் நிர்வாகத்தில் சோழர்களின் நடைமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்படுவதற்கு சிங்கள் அரசுகளின் செயற்பாடுகளே முக்கிய காரணமாகும். அதாவது விக்கிரமபாகு, இரண்டாம் கஜபாகு ஆகியோர் சைவ சமயம் சார்புடையோராக ஆட்சிபுரிந்தனர். விக்கிரமபாகு இந்து மதத்திற்கு அளித்த ஆதரவை குருநாகல் மாவட்டத்திலுள்ள மாகல் என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.

கந்தளாயிலுள்ள கோயிலுக்கும், பிரமதேயத்துக்கும் முதலாம் விஜயபாகு தன்னுடைய பெயரை இட்டது போன்று விக்கிரமபாகுவும் மாகல நகருக்கு விக்ரமசலாமேக ஈஸ்வரம் எனப் பெயர் மாற்றினார் என்பதை இங்கே கிடைக்கப்பெற்ற கல்வெட்டினூடாக அறிய முடிகின்றது. சூளவம்சம், விக்ரமபாகு பௌத்த நிறுவனங்களுக்கு எதிராகவே நடவடிக்கைகளை மேற்கொண்டானென வர்ணிக்கிறது. எனவே, இம்மன்னன் பௌத்த மதத்திற்கு ஆதரவு வழங்காமல் இந்து சமயத்தினைப் பின்பற்றி ஆட்சி புரிந்தான் என ஊகிக்கலாம் (பத்மநாதன் 2006:135-137,206-211).

இரண்டாம் கஜபாகு ஒரு இந்து ஆட்சியாளனாகவே ஆட்சி புரிந்தான். இவனின் இந்து சமயப் பணிகள் பற்றி கோணேசர் கல்வெட்டு, திருக்கோணேஸ்வர புராணம், மங்கலாய் கல்வெட்டு போன்றனவும் எடுத்துக்காட்டுகின்றன. இம்மன்னன் பெருமாள், கயபாகுதேவர் மற்றும் சலாமேகன் போன்ற இந்து சமயச் சார்புடைய விருதுப் பெயர்களைச் சூடிக்கொண்டிருந்தான். திருக்கோணேஸ்வரத்தின் அர்ச்சகராக இருந்த பாசுபத பிராமணர் இறந்ததைத் தொடர்ந்து, கோணேசர் ஆலய நிர்வாகத்திலும், பூசை நடைமுறையிலும் பல தடைகள் ஏற்பட்டிருந்தன. கோணேசர் ஆலயத்திற்கு வருகை தந்த இரண்டாம் கஜபாகு மன்னன் தடைகளை நிவர்த்தி செய்ய 1522 களஞ்சு பொன் மற்றும் 249 களஞ்சு பொன் நகை கொடுத்ததாக கோணேசர் கல்வெட்டுக் கூறுகின்றது. 

சிங்கள மன்னனான முதலாம் பராக்கிரமபாகு பௌத்த மதத்திற்கு பங்களிப்பு செய்த அதே வேளை இந்து சமயத்திற்கும் ஆதரவு அளித்தார். சூளவம்சத்தில் இம்மன்னன் 13 கோயில்களை புதிதாக நிறுவியதோடு 79 கோயில்களைப் புனரமைப்பு செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிராமணர்களுக்குத் தானம் கொடுத்ததோடு பிராமணர்கள் பிராயச்சித்த சடங்குகளை மேற்கொள்ளவும், மந்திரங்களை ஓதவும் கோம மண்டலத்தையும் அழகிய தரணிகாராவையும் நிர்மாணித்து பிராமணர்களை ஆதரித்தானென, மேலும் சூளவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இவ்விடயங்கள் எந்தளவிற்கு உண்மைத்தன்மை வாய்ந்தவையெனக் கூறமுடியாதுள்ளது. ஆனால், இவன் இந்து சமயங்களுக்கு ஆதரவு வழங்கினான் என்பதை இராமேஸ்வரம் கல்வெட்டும் உறுதி செய்கின்றது.

இக்காலச் சிங்கள மன்னர்கள் காலத்தில், தென்னிந்தியாவைப் போன்று தேவரடியார்கள் இங்கும் கோயிலுக்காக நியமிக்கப்பட்டனர். முதலாம் விஜயபாகு மன்னன் காலத்தில் இந்துக் கோயில்களும் பண்பாட்டு நடவடிக்கைகளும் வீழ்ச்சியடையாது தொடர்ந்து பேணப்பட்டது. இரண்டாம் கஜபாகுவினுடைய காலத்தில், விஜயராஜேஸ்வரம் பிரசித்தி பெற்று விளங்கியமையானது முதலாம் விஜயபாகுவைத் தொடர்ந்து வந்த சுதேச சிங்கள மன்னர்கள் யாவரும் இக்கோயில்களை ஆதரித்து நின்றதைப் புலப்படுத்துகின்றது. மேலும், பௌத்த மதத்தின் தீவிர ஆதரவாளரான நிஸங்க மல்லன் சதுர்வேதி பிரமபுரத்திற்குச் சென்று தான சத்திரம் என்னும் அறச்சாலையை நிறுவியதோடு நாளாந்த தானதர்மங்களை நேரில் பார்வையிட்டான்; கந்தளாய்ச் சிவாலயத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சிகளையும், சங்கீதக் கச்சேரிகளையும் கண்டுகளித்தானென கந்தளாயில் கிடைத்த சாசனத்தில் கூறப்பட்டுள்ளது.

நிஸங்க மல்லன் பௌத்தர் அல்லாதோர் அரசுப் பதவிகள் பெற தகுதியற்றவர்களெனக் கூறிய போதும், இந்து சமயத்தை ஆதரிப்பவனாக ஆட்சி புரிந்துள்ளான். பொலநறுவையில் 02 ஆம் சிவாலயக் (வானவன் மாதவி ஈஸ்வரம்) கல்வெட்டில், இச்சிவாலயத்தில் நடத்திய நவக்கிரக சாந்தியின்போது தன்னைத் தூய்மைப்படுத்துவதற்காக, நிஸங்க மல்லன் தூய்மைச் சடங்கு சார்ந்த ஸ்தானத்தில் ஈடுபட்டான் என்ற செய்தி காணப்படுகின்றது. இதன் மூலம் சோழர்களின் அம்சங்களை அதனைத் தொடந்து வந்த சிங்கள மன்னர்கள் கடைப்பிடித்துள்ளனரெனக் கருதலாம்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளினூடாக பொலநறுவையில் சோழர் காலத்தை சேர்ந்த 02 ஆம், 05 ஆம், 06 ஆம் சிவாலயங்கள் இன்றுவரை முழுமையாகக் காணப்படுகின்றமை, சுதேச சிங்கள மன்னர்களால் தொடர்ந்தும் இவ்வாலயங்கள் ஆதரிக்கப்பட்டதையே எடுத்துக்காட்டுகின்றது. 

பொலநறுவையில் நிலவிய பல்லினப் பண்பாடு உச்சமாக விளங்க முக்கிய காரணம் தமிழ், சிங்கள அரச வம்சங்கள் இடையே நடைபெற்ற திருமண உறவுகளாகும். சிங்கள அரசர்களுக்கும் சோழ, பாண்டிய, கலிங்க, கன்னோசிய அரச வம்சங்களுக்கு இடையேயும் நடைபெற்ற திருமண உறவுகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். பொலநறுவையில் நிலவிய தமிழ் – சிங்கள நல்லுறவின் காரணமாக சிங்கள மன்னர்களின் ஆட்சியில் சோழர்களின் நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. உதாரணமாக விஜயபாகுவின் ஆட்சியில் முன்பொருபோதும் இல்லாத அளவிற்கு இந் நெருக்கம் அதிகமாகக் காணப்பட்டது. இந்த உறவுகள் சோழரின் பின்னரும் தொடரவும் இந்துமதம் வளர்வதற்கும் வாய்ப்பாக அமைந்தன.

சிங்கள மன்னராட்சிக் காலத்தில் சிங்கள, தமிழ் கலைஞர்களும் இணைந்து கலை வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளனர். அதாவது சோழர் காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த திராவிடக் கட்டிடக்கலை மரபு தொடர்ந்தும் சிங்கள மன்னர் ஆட்சியிலும் செல்வாக்குப் பெற்றிருந்தமையைக் காணமுடிகின்றது. அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெலிசாய, பொலநறுவையில் உள்ள தூபராம, தென்னிலங்கையில் உள்ள உப்புல்வன் ஆலயங்கள் இதற்குச் சிறந்த சான்றுகளாகும். சோழர்களால் பின்பற்றப்பட்ட திராவிடக் கட்டடக்கலை மரபினை, தொடர்ந்து வந்த சிங்கள மன்னர்களும் கடைப்பிடித்தனர்.

சிற்பக்கலையைப் பொறுத்த வகையில் இவர்களது ஆட்சியில் தமிழ்ச் சிற்பிகளும், சிங்களச் சிற்பிகளும் கூட்டாக இணைந்து செய்யப்பட்டுள்ளனர். பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கலச் சமாதி புத்தர் சிலைகள், கிழக்கிலங்கையில் திருகோணமலையில் கிடைத்துள்ளன. இவை சோழர் பாணியில் அமைந்துள்ளன. இவற்றில் ஒன்று நாகபட்டினத்தில் கிடைத்த சோழர் சிற்பப் பாணியில் அமைந்த வெண்கலப் புத்தர் சிலையை ஒத்தது. 

சிங்கள மன்னர்கள், சிங்கள மொழிக்குச் சமனாக தமிழை நிர்வாக மொழியாக ஏற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்களுடைய நிர்வாகத்தில் தமிழ் மொழியும் பிரதான இடத்தை வகிக்கத் தொடங்கியது. தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் சிங்கள மன்னர்கள் ஆதரவு வழங்கியமையால், சோழரின் நடைமுறைகள் இவர்களது நிர்வாகத்தில் தொடரவும், மேலும் வளர்ச்சி அடையவும் காரணமாக அமைந்தன. விஜயபாகு ஆட்சிக்காலம் முதலாக சிங்கள மன்னர்களது நிர்வாகத்திலே தமிழும் ஆட்சி மொழியாக இருந்தது. தமிழர்கள் செறிந்து வாழும் பிராந்தியங்களில், இவர்களுடனான தொடர்பு மொழி, தமிழாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்க் கல்வெட்டுகளை வெளியிட்டனர். இதற்குச் சான்றாக முதலாம் விஜயபாகுவினுடைய பாலமோட்டைச் சாசனம், பனாகடுவ செப்பேடு, முதலாம் பராக்கிரமபாகுவின் (நைனாதீவு) ஊர்காவற்றுறைக் கல்வெட்டுகளைக் குறிப்பிடலாம் (குருகே 1994:183).

விஜயபாகுவைத் தொடர்ந்து ஆட்சி புரிந்த அவனுடைய தம்பி, குறுகிய காலமே ஆட்சி புரிந்தாலும் இம்மன்னனைக் குறிக்கும் ஆறு தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. எனவே, சிங்கள மன்னர்கள் ஆட்சியில் தமிழ்மொழிக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், சோழர்களினால் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் சிங்கள மன்னர்களது ஆட்சியில் தொடரக் காரணமாக அமைந்து கொண்டன.

இவை யாவற்றையும் தொகுத்து மதிப்பிடும்போது, சோழர்களை வெற்றி கொண்டு சிங்கள மன்னர்கள் ஆட்சிப் பீடம் ஏறினாலும் தமது நிர்வாகத்தில் சோழர்களினால் பின்பற்றப்பட்ட நடைமுறைகளினை பல வழிகளில் இவர்கள் பின்தொடர்ந்தனர் எனலாம். முதலாம் விஜயபாகு தொடக்கம் ஆட்சிக்கு வந்த சிங்கள மன்னர்கள் அரசியலிலும், நிர்வாகம், படைப் பிரிவுகளிலும் முக்கிய பதவிகளினை தமிழ்ப் பிரதானிகளுக்கும், மக்களுக்கும் வழங்கியுள்ளனர். சோழர் ஆட்சியில் இருந்த வணிகக் கணங்கள் தொடர்ந்தும் இவர்களின் நிர்வாகத்தில் வாணிபத்தில் ஈடுபட்டனர். சமய வளர்ச்சி, திருமண உறவு, தமிழ் – சிங்கள உறவுகள், தமிழ் மொழிக்குக் கொடுக்கப்பட்ட முன்னுரிமை, கட்டிடக்கலை, சிற்பக்கலை என சோழர்களினால் பின்பற்றப்பட்ட அம்சங்கள் சிங்கள அரசர்களின் நிர்வாகத்தில் காணப்பட்டமைக்கு இங்கு கிடைக்கப்பெற்ற சாசனங்களும், தொல்லியல் சான்றுகளும் ஆதாரங்களாகும். இதற்கு முக்கிய காரணம் “விஜயபாகு சோழரை எதிர்த்தாரே தவிர தமிழர்களையோ, தமிழ்ப் பண்பாட்டையையோ எதிர்க்கவில்லை”. இவரைப் போல் இவரைத் தொடர்ந்து வந்த சிங்கள மன்னர்களும் தமது நிர்வாகத்தில் தமிழ்ப் பண்பாட்டிற்கு முன்னுரிமை கொடுத்தமை, சோழர்களின் நிர்வாக அம்சங்கள் சிங்கள அரசுகளின் நிர்வாகத்தில் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதற்கு வாய்ப்பாக அமைந்தது.

உசாத்துணைகள்

  1. புஷ்பரட்ணம்,ப, 2017, இலங்கை தமிழர் ஒரு சுருக்க வரலாறு. தமிழ் கல்விச் சேவை சுவிஸ்லாந், பக்: 88- 105.
  2. பத்மநாதன்.சி. 2018, இலங்கையில் இந்து சமயம், குமரன் புத்தக இல்லம் கொழும்பு, பக்: 47-59.
  3. இந்திரபாலா.கா. 2006. இலங்கையில் தமிழ் ஓர் இனக்குழு ஆதிக்கம் பெற்ற வரலாறு, பொ.ஆ.300, குமரன் புத்தக இல்லம், பக்: 282-314.
  4. கொடிறின்ரன்.எச்.டபிள்யு., 1939, இலங்கையின் சுருக்க வரலாறு. லண்டன் சென்மாட்டின் வீதி, பக்: 56-89
  5. அனித்தா.ச.2018, பொலநறுவைகால சிங்கள மன்னர் ஆட்சியில் இந்து சமயம், தமிழியல் ஆய்வும் வரலாறும், வளர்ச்சிப் போக்குகளும், தொகுதி 01 சென்னை, பக்: 01-06.
  6. குருகே.டபிள்யு.பி., 1994, இருபத்து மூன்று நூற்றாண்டு கால சிங்கள- பௌத்த கலாசாரம், கல்வி, கலாசார விவகார அமைச்சு, பக்: 09-21.
  7. இந்திரபாலா.கா. 1978, ஆதி இலங்கையில் இந்து மதம். வரலாற்றுத் துறை இலங்கை பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம், பக்: 01-09.
  8. நவரத்தினம்.க. 1954, இலங்கையிற் கலை வளர்ச்சி, ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், பக்: 15-20,31-35.
  9. குணராசா.க, 2008, இலங்கை சுருக்க வரலாறு (கி.மு 06 ஆம் நூற்றாண்டு முதல் 2007 வரை). கமலம் பதிப்பகம், பக்: 147-206,
  10. புஷ்பரட்ணம்,பரமு, 2006, இலங்கை தமிழரும் நாக நாட்டு அரச மரபும், நியூ சென்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்: 28–47.
  11. பத்மநாதன்.சி, 2006, இலங்கை தமிழ் சாசனங்கள் (கி.பி. 700- 1300), இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களம் கொழும்பு. பக்: 133-355.
  12. கிருஸ்ணராஜா.செ, 2012. இலங்கை அடிப்படை பரிணாமத்தின் அடிப்படைகள் (கி.பி 1500 ஆண்டு வரை), AB Created & published, பக்: 317-647.
  13. கிருஸ்ணராசா.செ. 1999, இலங்கை வரலாறு (பாகம்-01). வரலாற்றுத்துறை யாழ் பல்கலைக்கழகம். 166-244.
  14. அமிர்தநாயகம்.P.J., 1966, இலங்கை வரலாற்று வினா விடைகள், ஆசீர்வாத்ம் அச்சகம் யாழ்ப்பாணம், பக் 128- 208.
  15. நடேசபிள்ளை.சு, 1951. இலங்கை தமிழர் விழா மலர். திருமகள் அழுத்தகம் சுண்ணாகம் யாழ்ப்பாணம், பக்: 27-40, 193-201.
  16. மெண்டிஸ்.ஜி.ஸி., 1942, இலங்கையின் பூர்வீக சரித்திரம், அப்போதிக்கரீஸ் கம்பனி லிமிடெட், பக்: 98-137.
  17. மெண்டிஸ்.ஜி.ஸி.. 1933. இலங்கையின் பூர்வீக சரித்திரம், MADRAS LAW JOURNAL PRESS, MYLAPORE, MADRAS, பக்: 62-146.
  18. புஷ்பரட்ணம்.பரமு. 2002, தொல்லியல் நோக்கில் ஈழத்தமிழரின் பண்டையகால மதமும் கலையும், குமரன் புத்தக இல்லம், பக்: 97-162.
  19. நடராசா.க.வே., 1973. பண்டைய ஈழம் (இரண்டாம் பாகம்). சேது நூலகம், பக்: 01-198.
  20. லயனல் சரத். 1997, புரதான இலங்கையின் தமிழ் சிங்கள உறவுகள். இனத்துவ தொடர்பியல் அமைப்பு, பக்:23-53.

ஒலிவடிவில் கேட்க

4108 பார்வைகள்

About the Author

மகேந்திரன் சானுஜன்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • July 2024 (2)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)